தர்மபுரியில் பா.ம.க-வுக்கு தொடர்கிறதா செல்வாக்கு...? | Money and caste decide vote politics in Dharmapuri

வெளியிடப்பட்ட நேரம்: 20:06 (27/04/2019)

கடைசி தொடர்பு:11:16 (03/05/2019)

தர்மபுரியில் பா.ம.க-வுக்கு தொடர்கிறதா செல்வாக்கு...?

தேர்தல் நடைபெற்ற அன்றும், தேர்தல் முடிந்த சில தினங்கள் கழித்தும் தர்மபுரி தொகுதியை வலம் வந்தோம். நாம் சந்தித்த சாமானியர்கள், தர்மபுரியில் ஏன் பா.ம.க. முன்னிலை வகிக்கிறது, தி.மு.க-வின் உள்கட்சி அரசியல் என்ன என்பதை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்கள். 

தர்மபுரியில் பா.ம.க-வுக்கு தொடர்கிறதா செல்வாக்கு...?

டமாவட்டங்களில் குறிப்பிடத்தக்க சதவிகிதம் உள்ள ஒரு பெரும்பான்மை சமூக மக்களிடம், தன் இருப்பை இன்னமும் தக்கவைத்துள்ளது பா.ம.க. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், மிக அதிகளவாக 80.49 சதவிகித வாக்குப்பதிவுடன் முதலிடத்தில் இருக்கிறது தர்மபுரி மக்களவைத் தொகுதி. கல்வியிலும் தொழில் வளர்ச்சியிலும் பின் தங்கிய ஒரு மாவட்டம், பெருந்திரளாக வாக்களித்திருப்பதற்கு சமூகப் பலம், பணம் கலந்த அரசியல்தான் காரணம் என்கிறார்கள் தொகுதி மக்கள்.

கடந்த 5 ஆண்டுகள் தர்மபுரி தொகுதி எம்.பி-யாக இருந்த பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மொரப்பூர் - தர்மபுரி இணைப்பு ரயில் திட்டம், தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை, சேலம் - ஓசூர் இருவழி ரயில்பாதை, வாணியம்பாடி - சேலம் நான்குவழிச் சாலை எனத் தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களையும் எண்ணேகொல்புதூர் - தும்பலஅள்ளி நீர்ப்பாசனத் திட்டம், அலியாளயம் அணைக்கட்டு இணைப்புத் திட்டம், சேனேகல் திட்டம் எனப் பல்வேறு நீர்ப்பாசனத்திட்டங்களையும் தன் சாதனைகளாகக் குறிப்பிடுகிறார். இவ்வளவு திட்டங்களைக் கொண்டுவந்ததாக அன்புமணி குறிப்பிட்டாலும், அவர் பெரிதும் நம்புவது தொகுதியில் 46 சதவிகிதத்துக்கும் மேலிருக்கும் தன் சமூக வாக்குகளைத்தான். 

தேர்தல் நடைபெற்ற அன்றும், தேர்தல் முடிந்த சில தினங்கள் கழித்தும் தர்மபுரி தொகுதியை வலம் வந்தோம். நாம் சந்தித்த சாமானியர்கள், தர்மபுரியில் ஏன் பா.ம.க. முன்னிலை வகிக்கிறது, தி.மு.க-வின் உள்கட்சி அரசியல் என்ன என்பதை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்கள். 

அன்புமணி - பா ம க

அவித்த மரவள்ளிக் கிழங்கை நமக்கும் பகிர்ந்துகொண்டே பேசத் தொடங்கினார் பென்னாகரத்தைச் சேர்ந்த ஜெயவேல். “பென்னாகரம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் பா.ம.க.வுக்குத் தனியான செல்வாக்கு உண்டு. அ.தி.மு.க-வின் கே.பி.முனுசாமி, அன்புமணியோடு நட்பு பாராட்டுவதாகக் கருதிய ஜெயலலிதா, 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை எதிர்த்து முனுசாமியை வேண்டுமென்றே களமிறக்கினார். அன்புமணி 58,000 வாக்குகளையும் கே.பி.முனுசாமி 51,000 வாக்குகளையும் பிரித்துக்கொள்ள, 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க-வின் இன்பசேகரன் வெற்றியடைந்தார். இன்று அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் கூட்டணி அமைத்துள்ளன. போதாக்குறைக்கு ஒரு ஓட்டுக்கு 400 ரூபாய் வரையிலும் முதல்முறையாக பா.ம.க தரப்பில் பணம் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். இவ்விரு தொகுதிகளும் பா.ம.க நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளது” என்றவரிடம், “பா.ம.க-வுக்குத்தான் இந்தத் தொகுதிகளில் ஓட்டு விழுந்ததாகச் சொல்லிவிட முடியுமா? ஓட்டுக்குப் பணம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுவதால், பணம் கொடுத்தால்தான் ஓட்டு என்கிற நிலை இனி பா.ம.க-வுக்கு வரலாமே?” என்று கேட்டோம்.

“நீங்கள் களத்தில் சென்று பாருங்கள். பூத்தில் எவ்வளவு தி.மு.க-வினர், பா.ம.க-வினர் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே, யார் களத்தில் நிற்கிறார்கள் என்பது புரிந்துவிடும். அ.தி.மு.க தரப்பு தந்த அழுத்தத்தால்தான் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. சமூகத்தைப் பார்த்து வாக்களிப்பவர்களே இங்கு அதிகம். தங்கள் சமூகத்தின் அடையாளத்தை பா.ம.க-தான் அளிப்பதாகப் பெரும்பாலான தர்மபுரி மக்கள் கருதுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் ராமதாஸைத் தவிர்த்துவிட்டு, திருமாவளவனைச் சேர்த்திருப்பதை இங்கே இருக்கும் பெரும்பாலானவர்கள் ரசிக்கவில்லை. இது எதிர்மறையாகப் பா.ம.க-வுக்கான ஆதரவை வடமாவட்டங்களில் அதிகரித்துள்ளது” என்றார்.

ஜெயவேலிடம் விடைபெற்றுக்கொண்டு, பாப்பிரெட்டிபட்டி செல்லும் பேருந்தில் பயணமானோம். கடத்தூரைச் சேர்ந்த மணி என்பவர், “தி.மு.க வேட்பாளர் செந்தில்குமாரும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் தொகுதிக்குப் புதுசு. தொகுதிக்கு கொஞ்சமும் அறிமுகம் இல்லாதவர். அன்புமணி பழகிய முகம் என்பதாலும், பிரசாரத்தின்போது ஒவ்வொரு ஊருக்கும் என்ன தேவை என்பதை அவர் சொல்லிவிடுவதாலும், அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.செந்தில்குமார்

பாப்பிரெட்டிபட்டி தி.மு.க வேட்பாளர் மணிதான் முதல்ல எம்.பி சீட்டுக்கு குறி வைச்சார். தர்மபுரி தொகுதி நிர்வாகிகள் பெரும்பாலும் எ.வ.வேலுவோட ஆதரவாளர்கள்தான். மணிக்குத்தான் தர்மபுரி தொகுதியை வாங்கிக் கொடுக்கணும்னு எ.வ.வேலுவும் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணியமும் கடுமையா முட்டி மோதினாங்க. 

இதுக்காக, மணிகிட்ட 30 லட்ச ரூபாய் வரையிலும் தடங்கம் சுப்பிரமணியம் பணம் வாங்கிட்டதா ஒருபேச்சு இருந்துச்சு. ஆனா, சபரீசன் ரூட் பிடிச்சு, தர்மபுரி தொகுதியை செந்தில்குமார் வாங்கிட்டார். இதனால கடுப்பான வேலுவும் சுப்பிரமணியமும் தேர்தல் வேலை பார்க்கல. ஸ்டாலின் மூலமா பஞ்சாயத்து பண்ணி, தடங்கத்துக்கு சில, பல உதவிகளைச் செஞ்சு, செந்தில்குமார் சரிக்கட்டினார். 70 லட்ச ரூபாய் கடனையும் அடைச்சு, மணிக்கிட்ட வாங்குன 30 லட்சத்தையும் தடங்கம் சுப்பிரமணியம் திருப்பிக் கொடுத்துட்டதாக ஒரு பேச்சு உண்டு. இந்தக் களேபரத்துக்கு நடுவுல தி.மு.க-காரங்க எப்படித் தேர்தல் வேலை பார்ப்பாங்க?” என்று சலித்துக்கொள்ள கடத்தூர் வந்தது. 

பொம்மிடி வரையில், சாலையில் பெரும்பாலும் பா.ம.க, அ.தி.மு.க தொண்டர்களையே பார்க்க முடிந்தது. குட்டியானை எனச் செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸ் வாடகை வண்டி வைத்து வாக்காளர்களை அழைத்து வந்தது பா.ம.க தரப்பு. ஓட்டுபோட்டுவிட்டு வந்தவுடன், வடை, கூல்டிரிங்க்ஸ் கொடுத்து உபசரித்தனர். பொம்மிடிக்குப் பிறகே தி.மு.க துண்டுடன் சில தொண்டர்கள் தென்பட்டனர். வறுத்த கடலையை நமக்கும் பகிர்ந்தளித்தபடி, தர்மபுரியில் ஆடிட்டராகப் பணிபுரியும் சத்ய நாராயணா நம்மிடையே பேசத் தொடங்கினார். 

பழனியப்பன்“தர்மபுரியைப் பொறுத்தவரை இங்கு சமூகத்துக்குத்தான் முதல் இடம். இப்போது ஓட்டுக்குப் பணத்தையும் கொடுத்துள்ளனர். மாவட்டத்துல பெரிய வேலைவாய்ப்பு இல்லைங்கறதுனால, இங்கேயிருந்து பெங்களூரு, ஓசூர், திருப்பூரில் வேலைப்பார்ப்பவர்கள் அதிகம். அவர்களெல்லாம் ஊருக்குத் திரும்பிவந்து வாக்களிக்கத் தொடங்கினால், வாக்கு சதவிகிதம் மேலும் அதிகரிக்கும். தி.மு.க-வுக்குச் செல்ல வேண்டிய மற்ற சமூக வாக்குகளைப் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் அதிகளவில் பிரித்தால், அன்புமணிக்கு வெற்றி உறுதியாகிவிடும். கடைசி நேரத்தில்தான் செல்வகணபதியைத் தர்மபுரிக்குள் களமிறக்கினார்கள். தி.மு.க-வில் நடந்த உள்ளடி வேலையைச் சமாளிக்கவே அவருக்கு நேரம் சரியாகிவிட்டது. 

முல்லைவேந்தனை தி.மு.க உதறியது, அக்கட்சிக்கு பெரிய சரிவு. பாப்பிரெட்டிபட்டியிலும், அரூரிலும் அவர் வேட்பாளருடன் வந்தாலே 20 ஆயிரம் ஓட்டுகள் விழும். அவர் சார்ந்த சமூகம் மட்டுமில்லாமல், மற்ற சமூகத்தினரிடமும் அவருக்கு செல்வாக்கு உண்டு. தி.மு.க. மீதிருந்த அதிருப்தியால், அரூர் தொகுதியில் மலைப்பகுதிகளில் வாழும் மக்களை அ.தி.மு.க-வுக்கு மடைமாற்றியும் விட்டுள்ளார். அவரை எதிர்த்து தி.மு.க.வில் அரசியல் செய்வது ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியரும், பொதுக்குழு உறுப்பினருமான இராசு தமிழ்ச்செல்வன்தான். குறைந்தது அவரையாவது பாப்பிரெட்டிப்பட்டிக்கு வேட்பாளராக்கி இருந்தால், முல்லைவேந்தன் எதிர்ப்பால் பிரியும் வாக்குகளைக் குறைத்திருக்கலாம்” என்று வருத்தப்பட்டார். 

சத்ய நாராயணா கணித்தபடியே, மதியம் 3 மணிக்குமேல் தர்மபுரியில் வாக்கு சதவிகிதம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அன்று சுபமுகூர்த்த தினம் என்பதால், சுப நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு ஊர் திரும்பியவர்களும் வெளியூர்களில் இருந்து ஊர் திரும்பியவர்களும் மதியத்துக்கு மேல் வாக்களிக்கத் தொடங்கினர். இடைத்தேர்தலைச் சந்திக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில், தர்மபுரியிலுள்ள அரூர் தொகுதியில் 86.96 சதவிகிதமும் நாடாளுமன்றத் தொகுதிகளில் தர்மபுரி 80.49 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

தர்மபுரி ரயில் நிலையம்

வாக்குப்பதிவு முடிந்து இரண்டு தினங்கள் கழித்து தர்மபுரி தொகுதியை வலம் வந்தோம். நம்மிடம் பேசிக்கொண்டே வந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர், “1987-ல் இட ஒதுக்கீடு கோரி இங்கே கடுமையான போராட்டம் நடந்தது. சாலையின் குறுக்கே மரங்களை வெட்டிச் சாய்த்து வடமாவட்டங்கள் முழுவதும் போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர். அப்போதெல்லாம், ராமதாஸுக்கு பின்னால் அவர் சமுதாய மக்கள் பெருமளவில் திரளவில்லை. அன்று ஆட்சியிலிருந்த எம்.ஜி.ஆர் அரசு, இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சகட்டுமேனிக்கு கைது செய்து சிறையில் அடைத்தது. 'எங்கள் சமூகம் என்றாலே கைது நடவடிக்கையா?' என்று கொதித்தெழுந்தவர்கள், எம்.ஜி.ஆர் அரசு மீதான அதிருப்தியால், ராமதாஸுக்கு ஆதரவளித்தனர். பின்னாளில் இந்த ஆதரவு சரிவைச் சந்தித்தாலும், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு ராமதாஸ் அதைத் தக்கவைத்தே வருகிறார்.

ராமதாஸைத் தவிர்த்துவிட்டு, திருமாவளவனை மு.க.ஸ்டாலின் தூக்கிப் பிடிப்பது, வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பம், செஞ்சி ராமசந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டது, துரைமுருகனிடம் இருந்த அதிகாரத்தைப் பிடுங்கி ராணிப்பேட்டை காந்தியிடம் கொடுத்தது என தங்கள் சமூதயாத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளையே ஸ்டாலின் எடுப்பதாக, தர்மபுரி மக்கள் கருதுகிறார்கள். அன்று எம்.ஜி.ஆர். மீதான அதிருப்தியால் ராமதாஸ் பின்னால் அணிதிரண்ட இந்தச் சமூகம், இன்று அதே பாதுகாப்புக்காக ஸ்டாலின் மீதான அதிருப்தியால் அன்புமணி பின்னால் திரள்கிறது. இது தர்மபுரி தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கும்” என்றார்.

தர்மபுரி தொகுதி கிரிவலத்தை முடித்துக்கொண்டு நாமும் பேருந்தில் சொந்த ஊர் திரும்பினோம்.


டிரெண்டிங் @ விகடன்