Published:Updated:

`சட்டசபை தேர்தலுக்குத் தயாராகுங்கள்!’- நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் உத்தரவு

`சட்டசபை தேர்தலுக்குத் தயாராகுங்கள்!’- நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் உத்தரவு
`சட்டசபை தேர்தலுக்குத் தயாராகுங்கள்!’- நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீர் உத்தரவு

``தேர்தல் அரசியலுக்கான களப்பணியை தீவிரப்படுத்துங்கள்’’ என்று நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது.

18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் `ரிசல்ட்’ பாதகமாக அமைந்துவிடுமோ? என்கிற சந்தேகத்தால் அ.தி.மு.க தலைமை உஷாராகி, தினகரனுக்கு ஆதரவான மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் மனு அளித்துள்ளது. பரபரப்பான இந்த அரசியல் சூழலில், ரஜினி மக்கள் மன்றத்தின் அறிக்கை ஒன்று வேலூர் மாவட்டத்தில் சூறாவளியாக சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி, இணைச் செயலாளர் நீதி என்கிற அருணாசலம் இருவரின் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ``சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்று தலைவர் அறிவித்திருக்கிறார். அதற்கு ஏற்றவாறு, இதுவரை வேலூர் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாய் செயல்பட்டுவந்த அரசியல் கட்டமைப்பு பணிகளைத் தொடர்ந்து செய்து, விடுபட்ட வேலைகளை முழுமையாக முடிக்க வேண்டும். சந்திக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும், தலைவர் நிகழ்த்தப் போகும் அரசியல் மாற்றத்துக்கும் துணை நின்று வெற்றியை உறுதியாக்குவோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ``சட்டமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் அதற்காகத் தயாராக இருக்க எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். தேர்தல் அரசியலுக்கான களப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த நிர்வாகிகளும் வாக்கு அரசியலுக்காகத் தயாராகிவருகிறோம்’’ என்றனர்.