`அ.ம.மு.க-வில் உறுப்பினராக இல்லை; சபாநாயகர் நோட்டீஸுக்குப் பதில் அளிப்பேன்!'- அ.தி.மு.க எம்.எல்.ஏ கலைச்செல்வன் | i will respond speaker's notice says Virudhachalam Kalaiselvan MLA

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (27/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (27/04/2019)

`அ.ம.மு.க-வில் உறுப்பினராக இல்லை; சபாநாயகர் நோட்டீஸுக்குப் பதில் அளிப்பேன்!'- அ.தி.மு.க எம்.எல்.ஏ கலைச்செல்வன்

``அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்படுவேன்'' என விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறினார்.

அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன்

செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், ``மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை விருத்தாசலம் தொகுதி வேட்பாளராக அறிமுகப்படுத்தி வெற்றி பெறச் செய்தார். நான் இன்று சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்கிற உன்னத நோக்கோடு விருத்தாசலம் தொகுதி மக்கள் எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கினார்கள். நான் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகவும், அரசுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

தமிழக அரசுக்கு எதிராகவோ, அ.தி.மு.க-வுக்கு எதிராகவோ எந்தச் செயலிலும் நான் ஈடுபட்டதில்லை. தொடர்ந்து ஆதரவாக மட்டுமே செயல்படுவேன் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். அதோடு மட்டுமல்லாமல் நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராகக்கூட இல்லை. தற்பொழுது அ.ம.மு.க.வை பதிவு செய்ய முடிவு செய்துள்ளார்கள். அதிலே நாங்கள் உறுப்பினராகக்கூட இல்லை. சபாநாயகர் இதுவரை நோட்டீஸ் அனுப்பவில்லை. அப்படி நோட்டீஸ் ஏதாவது அனுப்பினால் நான் நேரடியாகச் சென்று சபாநாயகரிடத்தில் பதிலை அளிப்பேன்'' என்று கூறினார்.