Published:Updated:

``கொள்ளையடிக்காமல் காரில் போக முடியுமா?” – ஓ.பி.எஸ் தம்பி ஆடியோவால் பரபரப்பு..!

``கொள்ளையடிக்காமல் காரில் போக முடியுமா?” – ஓ.பி.எஸ் தம்பி ஆடியோவால் பரபரப்பு..!
``கொள்ளையடிக்காமல் காரில் போக முடியுமா?” – ஓ.பி.எஸ் தம்பி ஆடியோவால் பரபரப்பு..!

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த நபருடன் பேசிய ஆடியோ தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிரப்பட்டுவருவதால், சர்ச்சை எழுந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. பெரியகுளம் முன்னாள் சேர்மனாக இருந்த இவர், சமீபத்தில் மதுரை ஆவின் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரானார். தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது தம்பிக்கு பதவி வாங்கிக்கொடுத்துவிட்டார் ஓ.பி.எஸ்., என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ஓ.ராஜாவும், தென்னிந்திய பார்வட் பிளாக் கட்சியைச் சேர்ந்தவரும், நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவருமான துரை என்பவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில், பொருள்களுக்கு அதிக விலை வைக்கப்பட்டு விற்கப்படுவதாகவும், அதற்கு ஓ.ராஜா தான் காரணம் என அறிந்துகொண்டு அதை தட்டிக்கேட்ட துரையிடம் போனில் பேசும் ஓ.ராஜா., ``ஏன்டா ரேசன் கடைகளுக்குச் சென்று பிரச்னை செய்கிறாய்?” என கேட்கிறார். ``நான் நுகர்வோர் அமைப்பில் இருக்கிறேன். ஒரு கார்டுக்கு 40 ரூபாய் கமிசன் அடிக்கிறார்கள். அதனால்தான் கேட்டேன்” என்கிறார் துரை. ``நீ தேவையில்லாத வேலை பார்க்கிறாய். உன் பிழைப்பை மட்டும் பார். எல்லாம் எங்களுக்குத் தெரியும். ஒரு மீட்டிங் போட்டு செலவழிக்க வேண்டும். நீயா செலவு செய்வாய்? கொள்ளையடிக்காமல் காரில் போக முடியுமா?? இவ்வாறாக அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. இந்த ஆடியோ வெளியாகி கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

முன்னதாக, பெரியகுளம் பகுதியில் ஓ.ராஜா மணல் அள்ளுவதாக துரை புகார் கொடுக்க, ஆட்களை வைத்து துரையை ஓ.ராஜா அடித்ததாகக் கூறப்படுகிறது. இப்புகார், வடகரை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. இந்த வடகரை காவல்நிலையம்தான், தேசிய அளவில் சிறந்த காவல்நிலையங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்த காவல்நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரத்தை ``எப்.ஐ.ஆர் போடாத காவல்நிலையத்துக்கு விருதா?” என தலைப்பிட்டு ஜூனியர் விகடன் விரிவாகப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.