Published:Updated:

`அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது!'- கிரண் பேடியின் அதிகாரத்தைப் பறித்தது உயர் நீதிமன்றம்

ஜெ.முருகன்
`அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது!'- கிரண் பேடியின் அதிகாரத்தைப் பறித்தது உயர் நீதிமன்றம்
`அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது!'- கிரண் பேடியின் அதிகாரத்தைப் பறித்தது உயர் நீதிமன்றம்

`புதுச்சேரி அரசின் ஆவணங்களை ஆளுநர் ஆய்வு செய்யலாம்' என்ற மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்துக்கு கிரண் பேடி ஆளுநராகப் பொறுப்பேற்றதில் இருந்தே அவருக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் அதிகார மோதல் நிலவி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று சொல்லும் அமைச்சரவையின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் கிரண் பேடி, மாநிலத்தின் நிர்வாகியான தனக்கே இறுதி அதிகாரம் என்று கூறி வருகிறார். இந்த நிலையில்தான் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் செயல்பாடுகள் மற்றும் அதிகார மீறல்கள் குறித்து முதல்வர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு 7 கேள்வி - பதில் வடிவத்தில் ஆளுநர் மாளிகைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. ``துணைநிலை ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களுமே இருக்கிறது” என்ற சாராம்சத்தைத்தான் அந்தக் கடிதம் வெளிப்படுத்தியது. குறிப்பாக `துறை தொடர்பான முழுமையான கோப்பைப் பெற முடியுமா அல்லது செயலரிடம் இருந்து ஆவணங்களை மட்டும் பெற முடியுமா' என்ற கேள்விக்கு, `முழுக் கோப்புகளையும் கேட்டுப் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று பதிலளிக்கப்பட்டிருந்தது.

அதை எதிர்த்துதான் முதல்வரின் நாடாளுமன்றச் செயலரான லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர் நீதிமன்றம் தேதியைக் குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மகாதேவன், ``யூனியன் பிரதேசங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆவணங்களை ஆளுநர் கேட்டுப் பெறலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ததோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, ``ஜனநாயகம் வென்றிருக்கிறது. எங்களது 3 வருட தொடர் போராட்டத்தினால் நீதிமன்றமானது இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பது, புதுச்சேரி மாநில மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. இதைத்தான் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நான் கூறி வந்தேன். ஆனால், இப்போது அதற்கு நீதியரசர் உறுதி செய்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கான தீர்ப்பு. தனக்குத்தான் அதிகாரம் என்று ஆணவத்தோடு திரிந்த ஆளுநரின் கொட்டத்தை அடக்குவதற்கு இந்தத் தீர்ப்பு வழிவகை செய்திருக்கிறது. இறுதியாக நீதி வென்றிருக்கிறது. உடனே துணைஆளுநர் கிரண் பேடி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் அனுப்பிய தகவலில், "நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருகின்றோம். அதன்
பின்னரே தொடர்பாக தெளிவான பார்வையை தெரிவிக்கமுடியும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் தான் தற்போதும் இருந்து கொண்டிருக்கின்றோம். வழக்கம் போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகள் ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுகின்றது. அதற்கான வாராந்திர பதிவும்  உள்ளது.

புதுச்சேரியில் நன்றாக இருக்க நான் விரும்புகின்றேன்.  புதுச்சேரி மக்கள் சிறந்தவர்கள். யூனியன் பிரதேசத்தை கடன்களிலிருந்து காத்துக்கொள்ள முழுமையான நேர்மை, பொறுப்பு, நிதி மேலாண்மையை கையாள்வதில் கவனம் ஆகியவைகளை கடைப்பிடிக்க வேண்டும். புதுச்சேரியிலுள்ள அனைத்து மக்களும் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள்" என தெரிவித்துள்ளார்.