Published:Updated:

எப்படி இருக்கிறார் டி.என்.சேஷன்? - அதே சிம்மக் குரல்!

ஆ.சாந்தி கணேஷ்
எப்படி இருக்கிறார் டி.என்.சேஷன்? - அதே சிம்மக் குரல்!
எப்படி இருக்கிறார் டி.என்.சேஷன்? - அதே சிம்மக் குரல்!

மிழ்நாட்டில் இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நிச்சயம் நம் நினைவுக்கு வந்து விடுவார். இந்த முறையும் அப்படித்தான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அவருடைய நினைவுகள் நம் மனதுக்குள் அலைமோதிக் கொண்டே இருந்தன. டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில்தான், வாக்காளர்  அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. சேஷன் அவர்களின் மனைவி ஜெயலஷ்மி இறந்தும் ஒரு வருடம் முடிந்துவிட்டது என்பதால், தற்போது டி.என்.சேஷன் எப்படியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள டி.டி.கே. சாலையில் இருக்கிற அவருடைய வீட்டுக்குச் சென்றோம்.

`விகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கிறோம்' என்று சேஷனை கவனித்து வருபவர்கள் மூலமாக சேஷனுக்கு தகவல் அனுப்பினோம். வீட்டுக்குள் சென்ற வேகத்தில் திரும்பி வந்த கேர் டேக்கர்ஸ், `விகடன்தானே... உங்களை உள்ள வரச் சொல்றார். `சார் சமீபமா எந்தப் பத்திரிகைக்காரங்களையும் மீட் பண்ண விரும்பறதில்ல. ஆச்சர்யமா உங்களை உள்ளே கூப்பிடுறார்' என்றனர்.

ஆவலாக அவருடைய அறைக்குள் நுழைந்தோம். பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டு, `நல்லா இருக்கீங்களா சார்' என்றதும், அடுத்த நொடி ``நல்லா இருக்கேன்'' என்று அதே சிம்மக் குரலோடு வெளிவருகிறது பதில். `சாப்பிட்டீர்களா' என்றதும், அதற்கும் உடனடியாக அவரிடமிருந்து பதில் வருகிறது. அவருடைய வயதுக்கே உரிய பலவீனத்தைத் தவிர, டி.என்.சேஷனுடைய குரலிலும் உடல் மொழியிலும் அவருக்கே உரிய அந்தக் கம்பீரம் சற்றும் குறையவில்லை என்பதுதான் உண்மை.