Published:Updated:

`மோடி தலைவர்; எடப்பாடி வேட்பாளர்' - பெங்களூரு புகழேந்தி காட்டம்!

`மோடி தலைவர்; எடப்பாடி வேட்பாளர்' -  பெங்களூரு புகழேந்தி காட்டம்!
`மோடி தலைவர்; எடப்பாடி வேட்பாளர்' - பெங்களூரு புகழேந்தி காட்டம்!

``அ.தி.மு.க-வின் வேட்பாளர்களைப் பா.ஜ.கவே தேர்வு செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் திராவிடக் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர். மோடிதான் அவரின் தலைவர். பா.ம.க-வும், தே.மு.தி.க-வும் பெரிய தொகையை வாங்கிக்கொண்டு அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைத்தது '' எனச்  சேலம் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி.

`மோடி தலைவர்; எடப்பாடி வேட்பாளர்' -  பெங்களூரு புகழேந்தி காட்டம்!

மேலும் அவர், ``நாடாளுமன்றத் தேர்தல் முடிவு 23-ம் தேதி வந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்குச் சென்று ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மூன்று, நாலு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் என்று சொல்லி மிரட்டும் நடவடிக்கையில் சபாநாயகர் தனபால் செயல்படுகிறார். இது ஜனநாயகப் படுகொலை. அவரால் மக்கள் மன்றத்துக்கு வர முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும்தான் போட்டி. ஆளுங்கட்சியை நாங்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அம்மா அனுதினமும் உழைத்து 37 இடங்களில் வெற்றி பெற்றார். 2 தொகுதிகளைக் கூட்டணிக்குக் கொடுத்தார். கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கவே தயங்குவார். அதைப் போல நாங்கள் 39 இடங்களில் ஒரு இடத்தை மட்டுமே கூட்டணிக்கு கொடுத்தோம்.

தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளுக்கு 20 சீட்டை அள்ளிக் கொடுத்தது யார்? பி.ஜே.பியை தமிழகத்தில் நடமாட விட்டது யார்? திராவிட இயக்கத்தின் வரலாறு சபாநாயகர் தனபாலை மன்னிக்கவே மன்னிக்காது. இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என மக்கள் விரும்புவதைப்போல நாங்களும் இந்த ஆட்சி ஒழிய வேண்டுமென விரும்புகிறோம்.

ஆளுங்கட்சியில் உள்ள முதல்வர் பழனிசாமியை பாலம் பழனிசாமி என்று அழைத்ததும் நாங்கள் தான். பன்னீர்செல்வம் மீது கோபம் வந்ததன் காரணம் தியானம் பண்ணறேன். அம்மா சாவில் மர்மம் இருக்குன்னு சொல்லி விசாரணை கமிஷன் வைத்தார். இந்த கமிஷன் வெட்டித்தனமானது. மக்கள் வரிப்பணம் வீணாகப் போய் விட்டது. அந்த கமிஷனில் பன்னீர்செல்வமே ஆஜராகாததால் ஒன்றுமில்லாமல் போனது.

இந்தியாவின் பிரதமரை தமிழ்நாடு தலைவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் பன்னீர்செல்வமும், அவரின் மகனும் பா.ஜ.க-வின் தேர்தல் பூத் ஏஜென்ட்டுகளாக இருக்கிறார்கள். எடப்பாடி தலைமையில அமைச்சரவை மோடியிடம் அடிமைப்பட்டு இருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கே அவமானம். அ.தி.மு.க-வின் வேட்பாளர்களைப் பா.ஜ.கவே தேர்வு செய்தது.   

நடந்து முடிந்த தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அ.ம.மு.க வெற்றி பெறும். தேர்தலுக்குப் பிறகு மத்திய, மாநில  இரண்டு அரசுகளும் மாறும். அ.ம.மு.க-வும், தி.மு.க-வும் திராவிடக் கட்சிகள். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் திராவிடக் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர். மோடிதான் அவரின் தலைவர். பா.ம.க பெரிய தொகையை வாங்கிக்கொண்டு அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைத்தது. அதேபோல தே.மு.தி.க-வும் அ.தி.மு.கவோடு பணத்தை வாங்கிக்கொண்டே கூட்டணி அமைத்தது. தேர்தலுக்குப் பின் இந்தக் கட்சிகளெல்லாம் காணாமல் போகும்'' என்றார்.

Vikatan