`சசிகலாவிடம் சமரசம் பேசினாரா எடப்பாடி பழனிசாமி?' - ஆளும்கட்சியை மிரள வைக்கும் மே 23 | EPS trying to compromise with Sasikala, says sources

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (10/05/2019)

கடைசி தொடர்பு:16:31 (10/05/2019)

`சசிகலாவிடம் சமரசம் பேசினாரா எடப்பாடி பழனிசாமி?' - ஆளும்கட்சியை மிரள வைக்கும் மே 23

"சிறையிலிருந்து சின்னம்மா வெளியே வந்து பதவியேற்க வேண்டும் என்பதற்காகத்தான் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தாமல் வைத்திருக்கிறோம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். தினகரனை மட்டும் ஒதுக்கி வைத்துவிடுங்கள். போதும்."

`சசிகலாவிடம் சமரசம் பேசினாரா எடப்பாடி பழனிசாமி?' - ஆளும்கட்சியை மிரள வைக்கும் மே 23

டப்பாடி பழனிசாமியின் தூதுவர்கள் சசிகலாவைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. `ஆளும்கட்சியோடு வர்த்தகரீதியான தொடர்பில் இளவரசியின் குடும்பத்தினர் உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான காலகட்டம் குறித்து இப்போதே விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்' என்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 15 நாள்களுக்கு ஒருமுறை சசிகலாவை சந்தித்துப் பேசி வருகிறார் இளவரசி மகன் விவேக் ஜெயராமன். இந்தச் சந்திப்புகளில், வர்த்தகரீதியான கணக்கு வழக்குகள் தொடர்பாகப் பேசப்படுவது வழக்கம். நேற்று நடந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியின் சமரச முயற்சிகள் தொடர்பாகப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, `வாரணாசியில் பா.ஜ.க தலைவர்களோடு பன்னீர்செல்வம் நெருக்கம் காட்டிய நிகழ்வும், தேர்தல் முடிவுகளைப் பற்றிய அச்சமும் எடப்பாடி பழனிசாமியை வாட்டி வருவதால், சசிகலாவைத் தங்கள் பக்கம் கொண்டு வரும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்' என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகின. 

எடப்பாடி பழனிசாமி

சிறை சந்திப்பில் என்ன நடந்தது?

``சசிகலா குடும்பத்தோடு எந்தவித சம்பந்தமும் இல்லை என ஆட்சியில் உள்ளவர்கள் கூறினாலும், மிடாஸ் சரக்கு கொள்முதல் உட்பட வர்த்தகரீதியிலான உதவிகள் அனைத்தையும் எடப்பாடி செய்துகொடுக்கிறார். எடப்பாடியின் மகன் மிதுனும் விவேக்கும் நல்ல நட்பில் உள்ளனர். பன்னீர்செல்வத்தை அரசியலிலிருந்து முழுமையாகக் கட்டம் கட்டிவிட வேண்டும் என்பதுதான் சசிகலாவின் எண்ணம். இதே மனநிலையில்தான் எடப்பாடியும் இருக்கிறார். சசிகலாவோடு சமாதானம் ஆவதன் மூலம், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் எனக் கணக்குப் போடுகிறார். மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த அரசை 5 ஆண்டுகள் எந்தவிதத் தொய்வும் இல்லாமல் நடத்திச் செல்ல விரும்புகிறார். 

அதிமுக தலைமைக் கழகம்

தமிழக அமைச்சர்களில் 5 பேர் மட்டுமே வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற அமைச்சர்கள் எல்லாம் நமக்கேன் வம்பு என்ற ரீதியில் அமைதியாக இருக்கிறார்கள். எடப்பாடியும் இதுவரையில் சசிகலாவை விமர்சனம் செய்ததில்லை. சில மாதங்களுக்கு முன்பு, விவேக்கிடம் தூது வந்த ஆளும்கட்சி பிரதிநிதிகள் சிலர், `சிறையிலிருந்து சின்னம்மா வெளியே வந்து பதவியேற்க வேண்டும் என்பதற்காகத்தான் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தாமல் வைத்திருக்கிறோம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். தினகரனை மட்டும் ஒதுக்கி வைத்துவிடுங்கள். போதும்' எனக் கூறியுள்ளனர். இதை, சசிகலாவின் கவனத்துக்குத் தகவலாகக் கொண்டு போனார் விவேக். இதற்கு சசிகலாவிடமிருந்து எந்தப் பதிலும் வெளிப்படவில்லை. அவரைப் பொறுத்தவரையில், விவேக் சொல்வதைக் கேட்டுக்கொள்வார், செயல்படுத்த மாட்டார். அவர் டி.டி.வி.தினகரன் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்தத் தேர்தலில், `12 சீட்டுகளை வெல்வோம்' என தினகரன் பேசி வருகிறார். 12 சீட்டை வென்று காட்டிவிட்டால், உண்மையான அ.தி.மு.க சசிகலாதான் என்பது நிரூபணமாகிவிடும். இந்த அளவுக்கான தொகுதிகளை வெல்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. இந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் ஆளும்கட்சியின் வெற்றியைத் தினகரன் பறிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் நல்ல வாக்கு சதவிகிதத்தை எடுப்பார். அவ்வளவுதான். இந்த உண்மையை சசிகலாவிடம் எடுத்துச் சொல்வதற்கும் ஆட்கள் இல்லை" என விவரித்தவர்கள், 

சசிகலா

``அதேநேரம், மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தோற்றுவிட்டால் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் எடப்பாடி ஆழ்ந்திருக்கிறார். மீண்டும் மோடி வந்துவிட்டால், இந்தப் பதவியில் நீடித்துக்கொண்டிருக்க முடியுமா என யோசித்து வருகிறார். தேர்தலில் நல்ல வெற்றியைக் கொடுத்தால் மட்டுமே, அரசியல் வாழ்வு நீடிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார். தினகரன் தனிக்கட்சியாகக் கிளம்பிவிட்டதால், சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து சசிகலா கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர் விவேக் தரப்பினர். இதன் பின்னணியில் வேறு சில விஷயங்களும் அடங்கியுள்ளன. சசிகலா குடும்பத்தை மையப்படுத்தி, மீண்டும் வருமான வரித்துறை ரெய்டை நடத்த மத்தியில் உள்ளவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவலைத் தெரிவித்த ஆளும்கட்சி புள்ளி ஒருவர், `இதுவரையில் எங்களுக்காக டெல்லியில் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது உங்களுக்காகப் பேசுகிறோம். எந்த ரெய்டும் வராமல் பார்த்துக்கொள்கிறோம். டி.டி.வி-யை மட்டும் அமைதியாக இருக்குமாறு சொல்லுங்கள்' எனக் கூறியுள்ளனர். இந்தத் தகவல் சசிகலா கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கும் அவர் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. சசிகலா தரப்பினரோடு எடப்பாடி நல்ல நட்பில் இருக்கிறார். மே 23 தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே காட்சிகள் மாறும்" என்றனர் உறுதியாக. 

தினகரன்

``சசிகலாவைப் பொறுத்தவரையில், சிறையிலிருந்து விரைவில் விடுதலை ஆக வேண்டும் என நினைக்கிறார். நான்காண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து அவர் இன்னும் மறுசீராய்வு மனுவைப் போடவில்லை. நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான 10 கோடி ரூபாயையும் இன்னும் கட்டவில்லை. அபராதம் கட்டிவிட்டால், குற்றத்தை ஒப்புக் கொண்டது போலாகிவிடும். தவிர, சிறை விதிகளின்படி வருடத்துக்கு 180 நாள்கள் வரையில் விடுப்பு எடுத்துக்கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. அதன்படி பார்த்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அவர் விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது சிறையில் தோட்ட வேலைகளைக் கவனித்து வருகிறார் சசிகலா. இந்தப் பணிக்காக மாதம் 6 நாள் விடுப்பு வழங்கப்படுகிறது. நூலகத்தில் பணியாற்றினால் 4 நாள்கள் விடுப்பு எனக் கணக்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஆண்டுக்கு 72 நாள்கள் விடுப்பு வந்து சேரும். நன்னடத்தை அடிப்படையில் சிறைக் கண்காணிப்பாளர் நினைத்தால் 30 நாள்கள் விடுப்பு கொடுக்க முடியும். கர்நாடக உள்துறை அமைச்சகம் மனது வைத்தால் மேலும் சில வாரகால விடுப்புகள் கணக்கில் வந்து சேரும். இந்த விடுப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவரது சிறை நாள்கள் குறையும். சிறையிலிருந்து வெளியில் வந்ததும் மறு சீராய்வு மனுவைப் போடும் வேலைகளைத் தொடங்க இருக்கிறார். இவற்றையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் விவேக் மூலமாகத் தூது முயற்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார் விரிவாக. 

விவேக் ஜெயராமன்

தூது முயற்சி தகவலை மறுத்துப் பேசும் ஆளும்கட்சி முன்னணி நிர்வாகிகள் சிலர், "சிறையில் இருக்கும் சசிகலாவை எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா சென்று சந்திப்பதாகத் தகவல்கள் வெளியாகும். ஆனால், அப்படியொரு சந்திப்பு முயற்சியே நடக்கவில்லை. கணவர் நடராசனைப் பார்க்க முதன்முதலாக சசிகலா பரோலில் வந்தபோது, ராதா சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல்தான், இந்தத் தகவல்களும். பா.ஜ.க-வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் 20 சதவிகித வாக்குகளை எடுத்துவிட்டால், அடுத்த தேர்தலில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளைத் தவிர்த்துவிட்டு தேர்தலைச் சந்திக்கும்போது சிறுபான்மை, தலித் சமூக வாக்குகள் தன்னுடைய தலைமைக்கு வந்து சேரும் எனக் கணக்கு போடுகிறார். தினகரனால் இந்தத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதையும் அவர் அறிந்து வைத்திருக்கிறார். அதிகாரத்தை விட்டுக் கொடுத்துவிட்டால், என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதும் அவர் அறியாததல்ல. `இந்தத் தேர்தலுக்குப் பிறகே என்னுடைய அரசியல் வாழ்க்கை தொடங்கும்' என அவர் குறிப்பிட்டதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி, சந்திப்பு, சமாதானத் தூது என வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை" என்கின்றனர் இயல்பாக.