ஆயிரம்... இரண்டாயிரம்... நாலாயிரம்..! - தேர்தல் ஏலத்தில் முந்தும் அ.தி.மு.க... பிந்தும் தி.மு.க! | Money plays huge again in upcoming elections

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (12/05/2019)

கடைசி தொடர்பு:15:22 (13/05/2019)

ஆயிரம்... இரண்டாயிரம்... நாலாயிரம்..! - தேர்தல் ஏலத்தில் முந்தும் அ.தி.மு.க... பிந்தும் தி.மு.க!

ஆயிரம்... இரண்டாயிரம்... நாலாயிரம்..! - தேர்தல் ஏலத்தில் முந்தும் அ.தி.மு.க... பிந்தும் தி.மு.க!

ந்தியாவிலேயே இடைத்தேர்தல் ஃபார்முலா மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சர்யப்பட வைத்த பெருமை நமது மாநில அரசியல் கட்சிகளுக்குத்தான் உண்டு. தமிழகத்தில் வரும் மே 19-ம் தேதி நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலிலும் வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் கரன்சி ஏலத்தில் இறங்கிவிட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், கடந்த மாதம் 18-ம் தேதி 18 தொகுதிகளுக்கான தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்று முடிந்தது. மேலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலுார் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19-ம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த நான்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஆளுங்கட்சிக்கே அதிகம் உள்ளது. காரணம், தற்போதைய ஆட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மை இருக்கிறதா, இல்லையா என்கிற சூழ்நிலை இருப்பதால் இந்த ஆட்சியின் நாற்காலிக்கு நான்கு கால்கள் இருப்பதுபோன்று இந்த நான்கு தொகுதிகளே உள்ளன. எனவே ஆளும்கட்சிக்கு அதிக நெருக்கடி இந்த நான்கு தொகுதி இடைத்தேர்தலில் உள்ளது. 

இடைத்தேர்தல் பிரசாரம்


அதேநேரம் தி.மு.க-வுக்கு ஆட்சி அமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு என்றால் அது இந்த இடைத்தேர்தலில் ஆளும்கட்சியைக் காலிசெய்ய வேண்டும் என்பதே. மறுபுறம் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அ.ம.மு.க-வுக்கு இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டா மட்டுமே உள்ளது. இந்த இருவருமே ஆளுங்கட்சியைக் களத்தில் வீழ்த்தத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருவரையும் வீழ்த்த ஆளுங்கட்சி கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் கரன்சி மட்டுமே. காரணம் வேறு எந்த ஆயுதமும் இன்றைய நிலையில் அ.தி.மு.க-வை கரைசேர்க்காது என்ற நம்பிக்கை இப்போது அந்தக் கட்சியினரிடமே எழுந்துள்ளது. 

தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின்


அதனால், நடைபெறவுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 30 அமைச்சர்களுக்கு பூத்கள் வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நான்கு தொகுதிகளில் இரண்டு இடங்களில் கண்டிப்பாக அ.தி.மு.க வெற்றி பெற்றுவிடும் என்கிற நம்பிக்கையில் ஆளும்கட்சி உள்ளது. குறிப்பாகத் திருப்பரங்குன்றம், சூலுார் ஆகிய இரண்டு தொகுதிகளில் கண்டிப்பாக ஆளும்கட்சி வெற்றிபெறும் நிலை உள்ளது. ஓட்டப்பிடாராம் தொகுதியில் இரண்டு கட்சிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் நிலையும், அரவக்குறிச்சியில் தி.மு.க வெற்றி பெறும் நிலையும் இருக்கிறது. இருந்தாலும் இடைத்தேர்தல் கொண்டாட்டம் என்றாலே அது கரன்சி கொண்டாட்டமாகவே வாக்காளர்களை நம் அரசியல் கட்சியினர் பழக்கப்படுத்திவிட்டதால், இந்தமுறை வாக்காளர்களை உற்சாகப்படுத்த ஆளும்தரப்பு தயாராக இருக்கிறது. 

இதுகுறித்து ஆளும்கட்சி வட்டாரத்தில் பேசியபோது, “நான்கு தொகுதிகளிலும் ஒரே அளவில் கரன்சியை வழங்க உள்ளோம். பதினெட்டு தொகுதிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கினோம். ஆனால், இந்தமுறை எதிர்க்கட்சியினர் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய்வரை கொடுக்க உள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. அப்படி அவர்கள் கொடுக்கும் தொகையைவிடக் கூடுதலாக ஒரு மடங்கு தொகையை நாங்கள் வழங்கத் தயாராக இருக்கிறோம். இப்போதைய நிலவரப்படி, 4,000 ரூபாய்வரை கொடுக்க வாய்ப்புள்ளது. இந்தத் தொகையை வழங்குவதற்கான பொறுப்பை அமைச்சர்கள் தரப்பு ஏற்றுக்கொண்டுள்ளார்கள்” என்கிறார்கள்.

தி.மு.க தரப்பில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பணியாற்றும் நிர்வாகி ஒருவர், “தி.மு.க. சார்பில் ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் என்று இப்போது திட்டமிட்டுள்ளார்கள். வாக்காளர்களைக் கணக்கெடுக்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. தினகரன் தரப்பில் சில இடங்களில் ஆயிரம் ரூபாய் கொடுக்க இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரம் கொடுத்தால் அதைவிடக் கூடுதலாக நாங்களும் கொடுப்போம்” என்கிறார். கடந்த தேர்தல்வரை  ஐந்நுாறு, ஆயிரம் என்றிருந்த வாக்கின் விலை இப்போது நடைபெறும் இடைத்தேர்தலில் 4,000  ரூபாய்வரை எகிறியுள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் நிர்ணயிக்கும் தொகையைப் பொறுத்து வாக்கு மதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் சூழல் தொடர்கதையாகி வரும் நிலையில், ஜனநாயகம் என்பது எங்கே போய் முடியுமோ என்று அங்கலாய்க்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
 


டிரெண்டிங் @ விகடன்