``ஆட்சி மாறட்டும்... அக்டோபரில் வருகிறேன்!” - சசிகலாவின் சீக்ரெட் பிளான்! | "Let the regime change... I will arrive in October!" - The Secret Plan of Sasikala

வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (14/05/2019)

கடைசி தொடர்பு:15:41 (14/05/2019)

``ஆட்சி மாறட்டும்... அக்டோபரில் வருகிறேன்!” - சசிகலாவின் சீக்ரெட் பிளான்!

ஆட்சி மாற்றம் நடந்தால் அடுத்தடுத்த காட்சிகள் சசிகலாவைச் சுற்றி நடந்தேறப் போகிறது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். 

``ஆட்சி மாறட்டும்... அக்டோபரில் வருகிறேன்!” - சசிகலாவின் சீக்ரெட் பிளான்!

மே -23 இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு விடையாக அமையப்போகிறது. நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பெங்களூரு சிறையிலும் ஆட்சி மாற்றம் நடக்குமா... நடக்காதா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா. ஆம்! ஆட்சி மாற்றம் நடந்தால் அடுத்தடுத்த காட்சிகள் சசிகலாவைச் சுற்றி நடந்தேறப் போகிறது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். 

சசிகலா

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சசிகலா, அவருடைய அண்ணன் மனைவி இளவரசி, அவருடைய சகோதரி மகன் சுதாகரன் ஆகியோருக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பளித்த பிறகு பெங்களூரு சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தோடு சிறைக்குள் சென்ற சசிகலா, இப்போது அந்தக் கட்சிக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு நடத்திவருகிறார். அ.தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளர் என்று அவரால் அடையாளம் காட்டப்பட்ட டி.டி.வி.தினகரன், இன்று அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராக உருவாகிவிட்டார். ஜெயலலிதா இருந்தவரை, `சின்னம்மா' என்று அழைக்கப்பட்டவரின் நிலை, இப்போது கேள்விக்குறியாக உள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவோடு வர உள்ளது. இந்த முடிவு, தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி அரசு நீடிக்குமா... நீடிக்காதா என்ற கேள்விக்கும் முடிவாக அமைந்துவிடும். ஒருவேளை, எடப்பாடி அரசுக்குச் சிக்கல் உருவாகும் நிலை வந்தால், ஆட்சியைத் தக்கவைக்க அவர் பல்வேறு அஸ்திரங்களைக் கையில் எடுப்பார். அதில் ஒன்றாக, தினகரன் தரப்பைச் சாந்தப்படுத்த அவர் சசிகலாவிடம் சமரசமாகவும் தயாராக இருக்கிறார் என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஏற்கெனவே சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன், எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சுமுக நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலாவுடன், எடப்பாடி இணக்கமாகப் போக விரும்புவதாக அவருக்கும் தகவல் சென்றுள்ளது. ஆனால், சசிகலா வேறு கணக்கில் இருக்கிறாராம். குறிப்பாக, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், விரைவில் சிறையிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். 

ஜெயலலிதாவுடன்

பி.ஜே.பி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், எடப்பாடி மூலம் இதற்கான காய்களை நகர்த்த வாய்ப்புள்ளது. அதே நேரம், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் அது தனக்குச் சாதகமாக இருக்கும் என சசிகலா நினைக்கிறார். குறிப்பாக, சசிகலா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவாக விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அப்போது சசிகலாவின் நன்னடத்தை, பரோலில் அவர் எடுத்த விடுப்பு போன்ற விவரங்களும் குறிப்பிடப்படும். அதற்கு அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும். சசிகலாவுக்கும் தற்போது கர்நாடகாவில் ஆட்சிபுரியும் முதல்வர் குமாரசாமிக்கும் ஏற்கெனவே நல்ல நட்புள்ளது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்துவிட்டால், உடனடியாகச் சீராய்வு மனுவை தாக்கல் செய்துவிடுவார். 

மத்திய அரசு இதற்குப் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காது எனக் கணக்குப் போடுகிறது, சசிகலா தரப்பு. இதற்கு முன்பாக எடப்பாடியும் சசிகலா பக்கம் சாய்ந்துவிடும் நிலை உள்ளது. இதையெல்லாம் கணக்குப் போடும் சசிகலா, ஆட்சி மாறியவுடன் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, அதனடிப்படையில் அக்டோபரில் விடுதலை பெற்றுவிடலாம் என்று கணக்குப் போடுகிறார். சிறையைவிட்டு வெளியே வந்தால், அ.தி.மு.க-வின் அதிகார மையமாகத்தான் மீண்டும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் குறித்த வழக்கும் அப்போது தனக்குச் சாதகமாக வந்துவிடும். எடப்பாடியும் தன்பக்கம் வந்துவிட்டால், மீண்டும் அ.தி.மு.க தனது தலைமையில் அசுர சக்தியாக உருவாகிவிடும். தினகரனை அதன்பிறகு கட்சிக்குள் கொண்டுவரும் வேலையை, தான் பார்த்துக்கொள்வதாக சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். சசிகலாவின் கோபம் முழுவதும் பி.ஜே.பி மீது மட்டுமே இருக்கிறது. எனவே, ஆட்சி மாறியதும் பல காட்சிகள் மாறும். அதில் அ.தி.மு.க முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார்கள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். 

அனைத்தையும் மாற்றவிருப்பது மே 23 மட்டுமே!


டிரெண்டிங் @ விகடன்