`தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு சில அமைச்சர்கள் அனுபவிப்பார்கள்!' - கொந்தளித்த பழனிசாமி | EPS being upset over election works

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (14/05/2019)

கடைசி தொடர்பு:17:32 (14/05/2019)

`தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு சில அமைச்சர்கள் அனுபவிப்பார்கள்!' - கொந்தளித்த பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இறுதிக்கட்ட பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரம்காட்டிவருகின்றன. குறிப்பாக, ஆளும்கட்சியான அ.தி.மு.க ஆட்சியை மீண்டும் தக்க வைக்க இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி இருப்பதால், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என அனைவரும் நான்கு தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரத்துக்குச் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, “மே 23-க்குப் பிறகு ஆட்சி நீடிக்காது எனச் சிலர் நினைக்கிறீர்கள். கண்டிப்பாக ஆட்சி தொடரும். நாடாளுமன்றத் தேர்தலில் பல இடங்களில் கட்சி சார்பில் கொடுத்த பணம் முறையாகச் சென்று சேரவில்லை.

இதற்குப் பின்னால், சில அமைச்சர்கள் இருப்பது எனக்குத் தெரியும். அவரவர் செயலுக்கான பலனைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர்கள் அனுபவிப்பார்கள். அப்போது யாரும் வருத்தப்பட வேண்டாம்” என்று கடுமையாகச் சொல்லியுள்ளார். குறிப்பாக, சென்னையில் நான்கு மாவட்டச் செயலாளர்களும் தேர்தல் பணியில் சரியாக ஈடுபடவில்லை எனவும், அமைச்சர் பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி போன்ற சில அமைச்சர்களின் பணிகள் மீது முதல்வர் அதிருப்தியில் இருக்கிறாராம். அதேபோல், தென்மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ராஜலெட்சுமி இருவரும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பணிகளில் சுணக்கம் காட்டுகிறார்கள் என்ற புகார் முதல்வருக்குச் சென்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலிலும் இவர்கள் பணி சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் சொல்லியுள்ளார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டே நிர்வாகிகள் கூட்டத்தில் வறுத்தெடுத்துள்ளார் முதல்வர். மே 23-க்குப் பிறகு, அ.தி.மு.க ஆட்சி நீடித்தால் ஜெயலலிதா பாணியில் சில அமைச்சர்களுக்கு கல்தா உறுதி என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.