``ஸ்டாலின் சி.எம்... நான் மினிஸ்டர்!" - உடன்பிறப்புகளை வறுக்கும் தி.மு.க வேட்பாளர்கள் | DMK party cadres angry over candidates activities

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:18 (16/05/2019)

``ஸ்டாலின் சி.எம்... நான் மினிஸ்டர்!" - உடன்பிறப்புகளை வறுக்கும் தி.மு.க வேட்பாளர்கள்

`நாளைக்கு இந்த வேட்பாளர் வெற்றி பெற்று வந்தாலும் கட்சிக்காரர்களுக்கு எதையும் செய்ய மாட்டார்' என்ற அதிருப்தி இருந்தாலும், `ஸ்டாலின் ஜெயிக்க வேண்டும், நம்மால் முடிந்த செலவுகளைச் செய்வோம்' என்ற மனநிலைக்குப் பொறுப்பாளர்கள் வந்துவிட்டனர்.

``ஸ்டாலின் சி.எம்... நான் மினிஸ்டர்!

நான்கு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 3 நாள்கள் இருக்கின்றன. `22 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், வேட்பாளர்கள் பலரும் இப்போதே அமைச்சர் பதவியைக் கணக்குப்போட்டு பேசி வருகின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் உடன்பிறப்புகள். 

திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த 4 தொகுதிகளில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் தனிப்பட்ட விமர்சனங்களால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பரப்பிக்கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க-வின் அடிப்படை வாக்குகளைக் குறிவைக்கும் தினகரனும், `துரோகக் கும்பலை துடைத்தெறிய வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. 18 தொகுதி இடைத்தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு டெபாசிட் காலியாகிவிடும். அவரின் துரோகத்தைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்' எனத் தேர்தல் பிரசாரத்தின் மையக் கருத்தாகப் பேசி வருகிறார். 

ஸ்டாலின்

``ஆட்சி மாற்றம் நிச்சயம்; ஜுன் 3-ம் தேதி ஸ்டாலின் முதல்வர் ஆவார்' என உதயநிதி ஸ்டாலின் உட்பட தி.மு.க முன்னணி நிர்வாகிகள் பலரும் பேசி வருகின்றனர். ஆனால், களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் செயல்பாடுகளால் தொண்டர்கள் மத்தியில் சோர்வு தென்படுகிறது. இருப்பினும், `தலைமைக்காகப் பொறுத்துக்கொள்வோம்' என சொந்தக் காசைச் செலவு செய்து வருகின்றனர். தொகுதிக்குப் பொறுப்பாளர்களாகப் போடப்பட்டவர்களும் மரியாதைக்குறைவாகப் பேசுவதால் ஒரு சில தொகுதிகளில் உள்ள சீனியர்கள் புலம்பி வருகின்றனர்" என வேதனையோடு பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், 

``கொங்கு மண்டலத்தில் சூலூர் தொகுதியின் வெற்றியை அதிகம் எதிர்பார்க்கிறார் ஸ்டாலின். ஆனால், களநிலவரம் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதைவிட வேட்பாளர் தரப்பில் நடந்துகொள்ளும் விதத்தால் மிகுந்த வேதனையில் உள்ளனர் கட்சிக்காரர்கள். இதுவரையில், பூத் கமிட்டியைத் தவிர வேறு எந்த நிர்வாகிக்கும் வேட்பாளர் தரப்பிலிருந்து பணம் கொடுக்கப்படவில்லை. `அன்றாடச் செலவுகளை எல்லாம் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், தேர்தல் செலவுகளை மட்டும் வேட்பாளர் பார்த்துக்கொள்வார்' எனக் கூறிவிட்டார் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய மா.செ ஒருவர். அந்த நிர்வாகியின் அணுகுமுறையையும் உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை. வடக்கு மாவட்டங்களில் பேசப்படும் வழக்குகளைப் போலவே, கொங்கு மாவட்ட நிர்வாகிகளையும் மரியாதைக்குறைவாக அவர் பேசுவதாகப் புகார் கிளம்பியுள்ளது. இதை விரும்பாத கீழ்மட்ட நிர்வாகிகள், `காசும் கொடுக்க மறுக்கிறார்கள், வாயா... போயா... என மரியாதைக்குறைவாகவும் பேசுகிறார்' எனக் கொதிப்பில் உள்ளனர். 

ஸ்டாலின்

`நாளைக்கு இந்த வேட்பாளர் வெற்றி பெற்று வந்தாலும் கட்சிக்காரர்களுக்கு எதையும் செய்ய மாட்டார்' என்ற அதிருப்தி இருந்தாலும், `ஸ்டாலின் ஜெயிக்க வேண்டும், நம்மால் முடிந்த செலவுகளைச் செய்வோம்' என்ற மனநிலைக்குப் பொறுப்பாளர்கள் வந்துவிட்டனர். தேர்தலில் ஜெயித்துவிட்டால், கொங்கு மண்டலத்தின் சமூகப் பிரதிநிதியாக அந்த வேட்பாளர் மட்டும்தான் இருப்பார். எனவே, `தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் உறுதியாக அமைச்சர் ஆகிவிடுவோம்' என்ற நினைப்பில் வலம் வருகிறார். தேர்தல் செலவுகளுக்குப் பணம் கேட்டுப் போகும் கட்சிக்காரர்களிடம், `தளபதி ஆட்சியைப் பிடிப்பது உறுதி. அவர் சி.எம் ஆகிவிட்டால் நான் மந்திரி ஆவது உறுதி. நான் பதவிக்கு வந்துவிட்டால் நல்லது கெட்டதுகளுக்கு நீ என்னைத் தேடித்தான் வர வேண்டும். உனக்கு இப்ப பணம் வேணும்னா வாங்கிட்டுப் போ. ஆனா, நாளைக்கு என்கிட்ட எந்த சிபாரிசுக்கும் வந்து நிற்கக் கூடாது. சரியா?' எனக் கேள்வி கேட்டு சீரியஸாகப் பேசி அனுப்புகிறார். 

அண்ணா அறிவாலயம்

இதே மனநிலையில்தான் வேறு சில தொகுதிகளின் வேட்பாளர்களும் இருக்கின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க ஆகிய 3 கட்சிகளும் ஓட்டுக்குத் தலா 2,000 ரூபாயைக் கொடுத்துவிட்டன. 100 பேர் இருந்தால் 80 வாக்குகளைக் குறிவைத்து தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பண விநியோகத்தை முடித்துவிட்டன. அ.ம.மு.க-வோ, 100 வாக்குகளில் தலா 70 வாக்குகளை குறிவைத்துப் பணம் கொடுத்தன. அதுவும், அ.தி.மு.க ஓட்டுகளை பூத்வாரியாகப் பெட்டி பெட்டியாக உடைக்கும் வகையில் தேர்தல் வியூகம் வகுத்திருக்கிறார் தினகரன். மூன்று பேரும் பணம் கொடுத்துள்ளதால், அரவக்குறிச்சி தொகுதியில் யாருக்கு வெற்றி என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. தி.மு.க ஓட்டுகளும் மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பும் வெற்றியைத் தேடித் தரும் என நம்புகின்றனர். நான்கு தொகுதிகளுக்கான பிரசாரத்தில் வேகம் காட்டும் ஸ்டாலின், சற்று ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கட்சி நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசுகிறார். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி, மத்திய அரசின் செயல்பாடுகள் எனப் பலவற்றைச் சுட்டிக் காட்டிவிட்டு, `நாம் உறுதியாக வெல்வோம். ஆட்சியைப் பிடித்துவிடுவோம். அனைத்துத் தொகுதிகளில் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். நன்றாகத் தேர்தல் வேலை பாருங்கள்' என உற்சாகப்படுத்தி வருகிறார். அவரது எண்ணத்துக்கு மாறாகத்தான் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதைப் பற்றி நேரடியாகவே ஸ்டாலினிடம் புகார் மனுவாகக் கொடுத்துள்ளனர். அந்தப் புகார்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்கின்றனர் வேதனையுடன். 

ஸ்டாலின்

``இடைத்தேர்தலில் வாக்குக்கு தலா 500 ரூபாய் என விநியோகம் நடந்துள்ளது. இடைத்தேர்தல் என்பதால் மக்கள் அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். ஆட்சி மாற்றத்துக்கான முக்கியமான தேர்தல் இது. ஒழுங்காகப் பணிகள் நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க அறிவாலயத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் அனுப்பப்படவில்லை. மாவட்டச் செயலாளர்களே பார்த்துக்கொள்வார்கள் என அலட்சியமாக இருந்துவிட்டனர். 10 கோடி ரூபாய் எனத் தொகுதிகளுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தில் 10 சதவிகிதத்தை மாவட்டச் செயலாளர்களே பதுக்கிக்கொண்டனர். தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகி ஒருவர் 30 சதவிகிதத் தொகையைப் பதுக்கிவிட்டார். இதைப் பற்றி வேட்பாளர் தரப்பிலிருந்தே ஸ்டாலினிடம் புகார் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் எந்தவிதப் பதிலையும் சொல்லவில்லை. பணத்தைப் பதுக்கிய நிர்வாகியைக் கண்டிக்கவும் இல்லை. மாவட்ட நிர்வாகியின் செயல் குறித்து கே.என்.நேரு உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. 

ஸ்டாலின்

ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடியதாக இந்தத் தேர்தல் இருக்கிறது. அப்படிப்பட்ட தேர்தலில் இந்த அளவுக்கு அலட்சியமாகச் செயல்படுவது நல்லதல்ல. தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளால் அதிர்ச்சியில் இருக்கின்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள். அதிலும், தென்மண்டலத்தில் உள்ள மாவட்டச் செயலாளர் ஒருவரின் வசூல் போக்குதான் உச்சக்கட்டமாக இருந்தது. எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால், நிர்வாகிகள் பலரும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம், பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பணம் அனைத்தும் தேர்தல் செலவுக்காக எனக் கூறிக் கொண்டாலும் ஒரு ரூபாயைக்கூட தேர்தல் பணிகளுக்கு அவர் பயன்படுத்தவில்லை. 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க பிரிப்பதால் தி.மு.க வெற்றி உறுதியாகிவிடும் என நம்புகிறார் ஸ்டாலின். 12 தொகுதிகளில் வெற்றி பெற்று வருவதே மிகப் பெரிய சாதனையாகத்தான் பார்க்கப்படும். அந்த அளவுக்கு மாவட்டச் செயலாளர்களின் ஆட்டம் கொடிகட்டிப் பறக்கிறது" என்கிறார் தி.மு.க-வின் தென்மாவட்ட நிர்வாகி ஒருவர்.