`மக்களுக்கு சர்வீஸ் செய்வதெல்லாம் வேஸ்ட் சார்!' - தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியில் உறைந்த அ.ம.மு.க. | Thanga.Tamilselvan angry over election results

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (23/05/2019)

கடைசி தொடர்பு:17:50 (23/05/2019)

`மக்களுக்கு சர்வீஸ் செய்வதெல்லாம் வேஸ்ட் சார்!' - தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியில் உறைந்த அ.ம.மு.க.

மேலே பி.ஜே.பி ஜெயிக்குது. தமிழ்நாட்டுல தி.மு.க ஜெயிக்குது. தேனியில் மட்டும் அ.தி.மு.க முன்னணியில் நிற்பது ஏன் எனத் தெரியவில்லை. மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டனர் எனத் தெரிகிறது.

`மக்களுக்கு சர்வீஸ் செய்வதெல்லாம் வேஸ்ட் சார்!' - தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சியில் உறைந்த அ.ம.மு.க.

மிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைத்துள்ள வாக்குகளால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் அக்கட்சியின் தொண்டர்கள். `ஊழல் செய்து பணம் சேர்த்துவிட்டால் போதும். கட்சியும் தேவையில்லை, சின்னமும் தேவையில்லை' எனக் கொந்தளிக்கிறார் அ.ம.மு.க தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். 

தினகரன்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிரசாரக் களத்தில் தீவிரமாக வலம் வந்தார் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை மையப்படுத்தியே மேடைகளில் பேசி வந்தார். சிவகங்கை, தேனி, தர்மபுரி உட்பட ஒவ்வொரு தொகுதிக்கும் செல்வாக்கு உள்ள நபர்களை வேட்பாளராக முன்னிறுத்தினார். அவர்களுக்கான தேர்தல் செலவையும் தானே ஏற்றுக்கொண்டார். அ.தி.மு.க-வுக்கு இணையாக வாக்காளர்களுக்கு ஓரளவு பணப்பட்டுவாடாவையும் செய்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் நடுநிலை வாக்காளர்கள், அ.தி.மு.க வாக்காளர்கள் எனப் பார்த்துப் பார்த்து செலவு செய்தனர். ஆர்.கே.நகர் வியூகம் போல, இடைத்தேர்தலிலும் முழு ஆளுமையைச் செலுத்தினார் தினகரன். ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்குச் சாதகமாக மாறிவிட்டன. 22 தொகுதி இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது தி.மு.க. அ.தி.மு.க 9 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. ஓர் இடத்தில்கூட அ.ம.மு.கவால் வெற்றி பெற முடியவில்லை. ஓரளவுக்கு மட்டுமே வாக்குகளைப் பெற்று வருகிறது. 

ரவீந்திரநாத் குமார்

அதேநேரம், அ.ம.மு.க-வுக்குச் செல்வாக்கு உள்ள தொகுதியாகக் கருதப்படும் தேனியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் இடையில் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தினகரன் பெரிதும் எதிர்பார்த்த தங்க தமிழ்ச்செல்வன் பிரதான போட்டி வரிசையில் இல்லை. `என்ன நடக்கிறது தேனியில்?' என்ற கேள்வியை தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டோம். 

தங்க.தமிழ்ச்செல்வன்

``என்னமோ நடக்குது. நடந்துவிட்டுப் போகட்டும். எப்படிப் போகுதுன்னு தெரியவில்லை. மேலே பி.ஜே.பி ஜெயிக்குது. தமிழ்நாட்டுல தி.மு.க ஜெயிக்குது. தேனியில் மட்டும் அ.தி.மு.க முன்னணியில் நிற்பது ஏன் எனத் தெரியவில்லை. மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டனர் எனத் தெரிகிறது. `அண்ணா தி.மு.க, பா.ஜ.க கூட்டணி ஜெயிக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். அதையொட்டியே தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டுள்ளனர். எங்களுக்கு ஓட்டு போட்டால் ஜெயிப்பார்களோ... மாட்டார்களோ என்ற யோசனை கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். நாங்கள் ஜெயிக்காமல் போய்விட்டால், அ.தி.மு.க வந்துவிடும் என்ற அச்சத்தில்கூட ஒட்டுமொத்தமாக மாற்றிப் போட்டிருக்கலாம். தேனியில் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் செய்யக் கூடிய அட்ராசிட்டிகள் என்ன என்பது உலகத்துக்கே தெரியும். இந்தத் தொகுதியில் மைனாரிட்டி மக்கள் நிறைந்துள்ளனர். அப்படியிருந்தும் ரவீந்திரநாத் லீடிங்கில் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. அவர்கள் குடும்பமே கிரிமினல் வேலைகளைத்தான் செய்யும். பதவிக்காக எதையும் தியாகம் செய்யக் கூடியவர்கள்" என்றவர்,  

பன்னீர்செல்வம்

``இனி மக்களுக்குச் சர்வீஸ் செய்வதற்காக ஊரெல்லாம் அலைவதெல்லாம் வேஸ்ட் சார்... 200 கோடி பணம் இருந்தால் போதும். கட்சியும் தேவையில்லை. சின்னமும் தேவையில்லை. ஊழல் செய்து சேர்த்த பணம் என ஊருக்கே தெரிந்தாலும்கூட செலவு செய்தால் ஜெயித்துவிடலாம். ஊழலை மக்கள் பெரிதாக நினைப்பதில்லை சார்... அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகத்தான் தேர்தல் முடிவைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்றார் பெருத்த செருமலுடன்.