`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்! | Election results may create rift between BJP and ADMK in Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (24/05/2019)

கடைசி தொடர்பு:13:55 (24/05/2019)

`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!

தேர்தல் முடிவுகள் மிக மோசமாகி விட்டதால் யாரால் யாருக்குத் தோல்வி என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே இரண்டு கட்சியினருக்கும் இடையே இதுதொடர்பான விவாதங்களும், உரசல்களும் சூடுபிடித்துள்ளன.

`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட!’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தனிப்பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் ஒருவரும் கரைசேரவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் படுதோல்வி அடைந்திருக்கிறார்கள். பி.ஜே.பி வேட்பாளர்கள் மட்டுமன்றி, அந்தக் கட்சி கூட்டணி வைத்த அ.தி.மு.க கூட்டணியின் 36 வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். தேனி, சிதம்பரம் தொகுதிகளிலும் இழுபறி நிலையில்தான் அந்தக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

அதேநேரத்தில், தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளில் ஆட்சியைத் தக்கவைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையில் அ.தி.மு.க வென்றுவிடும் வாய்ப்பிருக்கிறது. ஒரே தொகுதியில் கீழே இரட்டை இலை, மேலே உதயசூரியன், அதாவது சட்டமன்றத்தில் அ.தி.மு.கவுக்கும், நாடாளுமன்றத்தில் தி.மு.கவுக்கும் வாக்களித்திருக்கும் விநோதம் இந்தத் தேர்தலில் அரங்கேறியுள்ளது. முரண்பாடான இந்த வெற்றி, தோல்விக்கு என்ன காரணம் என்று இரண்டு கட்சிகளிலும் விவாதங்கள் சூடு பறக்கத் தொடங்கியுள்ளன.

பி ஜே பி - மோடி - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் அ.தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கூட்டணி வைத்தபோதே பல்வேறுதரப்பிலும் கடும் விவாதங்கள் எழுந்தன. பொதுவாக ஆளும்கட்சிகளின் மீது மக்களுக்கு வெறுப்பு இருப்பது வழக்கம். ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளின் மீது பல்வேறு காரணங்களால் கடும் அதிருப்தி இருந்த நிலையில் இந்தக் கூட்டணி உருவானதை தமிழக மக்கள் விரும்பவில்லை. அதை நிரூபிப்பதைப் போல அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்திருக்கிறது. 

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக டெல்லியில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளித்தபோது, ``தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும், நாங்கள் இங்கு பெரும்பான்மையோடு ஆட்சியமைப்போம் என்பதால் நிச்சயமாக உங்கள் அரசைக் காப்பாற்றிவிடுவோம்!’’ என்று முதல்வர் எடப்பாடிக்கு பிரதமர் மோடி தெம்பூட்டியதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தேர்தல் முடிவுகள் மிக மோசமாகி விட்டதால் யாரால் யாருக்குத் தோல்வி என்ற கேள்வி எழுந்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே இரண்டு கட்சியினருக்கும் இடையே இதுதொடர்பான விவாதங்களும், உரசல்களும் சூடுபிடித்துள்ளன. `உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட’ என்று மாறிமாறிக் குற்றம்சாட்டும் நிலை உருவாகியிருக்கிறது. இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ள பி.ஜே.பி-யின் வி.ஐ.பி வேட்பாளர் ஒருவர், ``அ.தி.மு.கவுடன் தமிழகத்தில் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வியைச் சந்தித்துள்ளோம்’’ என்று வெளிப்படையாகவே  சொல்லியிருக்கிறார். அதேபோல அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் ``பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்ததால்தான் இவ்வளவு பெரிய தோல்வி’’ என்று பகிரங்கமாகக் கருத்துக் கூறி வருகின்றனர்.

ஸ்டாலின் - ராகுல் காந்தி

இதுபற்றி அ.தி.மு.க மாநில நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்... ‘‘தமிழக மக்களுக்கு எங்கள் ஆட்சியின் மீது எந்த அதிருப்தியும் இல்லை. அதனால்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உதயசூரியனுக்கு வாக்களித்தவர்களும்கூட, கீழே சட்டமன்றத் தொகுதியில் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர். பி.ஜே.பி ஆட்சியின் மீதான வெறுப்பில்தான் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்த எங்கள் கட்சி வேட்பாளர்களையும் தோற்கடித்துள்ளனர். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழகம்தான். தொழில்வளம் மிக்க கொங்கு மாவட்டங்களில் பி.ஜே.பி உள்ளிட்ட அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் தோல்வியே இதற்குச் சிறந்த உதாரணம். பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேராமல் இருந்திருந்தால் அ.தி.மு.க கோட்டையாக விளங்கிய கொங்கு மண்டலத்தில் கண்டிப்பாக அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் ஜெயித்திருப்போம். அதேபோல 22 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியிருப்போம். 

அ.தி.மு.க அரசு நீடிப்பதற்கு பி.ஜே.பி அரசு பலவகைகளிலும் உதவி செய்தது உண்மைதான். அதனால்தான், தேர்தலுக்குப் பின்பு கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையை பி.ஜே.பி தலைமையிடம் தெரிவித்தோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அவர்கள் தனி மெஜாரிட்டியுடன் ஜெயித்து விட்டார்கள். அதனால் கூட்டணிக்கட்சியின் தயவு தேவையில்லை. ஒருவேளை பி.ஜே.பி-யுடன் சேராமல் நாங்கள் தனித்து நின்றிருந்தால் நாங்களும் கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றிருப்போம். இந்தத் தேர்தலில் எங்களுக்குத்தான் இழப்பு. நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சி என்கிற அளவிற்கு அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தோம். ஆனால், இப்போது மிகக் கேவலமான தோல்வியை அடைந்திருக்கிறோம்’’ என்றார்கள்.

அமித் ஷா - பி.ஜே.பி. தலைவர்

பி.ஜே.பி மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்... ‘‘கீழே இரட்டைஇலைக்கும் மேலே உதயசூரியனுக்கும் ஒருவர் வாக்களிக்கிறார் என்பதற்கு பி.ஜே.பி மீதான வெறுப்புதான் காரணம் என்பதை ஏற்க முடியாது. அ.தி.மு.க தலைமை, நாடாளுமன்றத் தொகுதிகளில் ஜெயிப்பதைப் பற்றிக் கவலையேபடவில்லை. 22 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே அதிகக் கவனம் செலுத்தினார்கள். அதற்காகப் பணத்தையும் வாரியிறைத்தார்கள். ஒருசில தொகுதிகளில் வாக்குக்கு 4,000 ரூபாய்வரை கொடுத்ததாகத் தகவல்கள் வந்தன. அவ்வளவு பணம் கொடுத்தும் 9 தொகுதிகளில் மட்டும்தான் அவர்கள் ஜெயிக்க முடிந்துள்ளது என்றால், தமிழக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புதான் காரணம். உண்மையைச் சொல்வதென்றால், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, பெரும்பான்மையையும் இழந்துள்ள அ.தி.மு.க அரசை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்ற கோபம் தமிழக மக்களிடம் இருக்கிறது. எங்கள் கட்சி வேட்பாளர்களை இவ்வளவு மோசமாகத் தோற்கடிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணம் என்று கருதுகிறோம்’’ என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வலுவாகக் காலூன்றுவதற்கு கூட்டணி வைக்க வேண்டுமென்றே அ.தி.மு.க அரசை பல வழிகளிலும் பி.ஜே.பி அரசு காப்பாற்றிவந்தது. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கு அ.தி.மு.க-வின் ஆதரவு எந்த வகையிலும் தேவைப்படாது. அதனால் அ.தி.மு.க.வைக் கழற்றி விடுமோ என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இரண்டு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த உரசல் பெரிதானால் அது விரைவாகவே நடந்துவிடுவதற்கும் வாய்ப்பு அதிகம்.


டிரெண்டிங் @ விகடன்