“அசுர பலத்தோடு அமித்ஷா!''- டெல்லியில் அடுத்த திட்டம் தயார் | amith sha’s next plan after election results

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (24/05/2019)

கடைசி தொடர்பு:12:37 (24/05/2019)

“அசுர பலத்தோடு அமித்ஷா!''- டெல்லியில் அடுத்த திட்டம் தயார்

அமித்ஷா

 

அமித்ஷா,  பி.ஜே.பி-யின் இமாலய வெற்றிக்குப் பின்னால், இந்தியாவே உற்றுநோக்கும் பெயராக மீண்டும் மாறியிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில், மூன்று மாநிலத்தை பி.ஜே.பி இழந்தது. அப்போது, அமித்ஷாவின் தேர்தல் யுக்தி தோற்க ஆரம்பித்துவிட்டது என பி.ஜே.பி-க்குள் முணுமுணுத்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே பி்.ஜே.பி-யின் தேசியத் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்தாலும்,  தேர்தல் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில், தன்னை நிரூப்பிக்க வேண்டிய நெருக்கடியும் அமித்ஷாவிற்கு இருந்தது. அதனாலே, இதுவரை பி.ஜே.பி-யால் உள்ளே சொல்ல முடியாமல் இருந்த மேற்கு வங்கத்திற்கு தைரியமாக ஊர்வலம் நடத்தி, கொல்கத்தாவை கொதிக்கவைத்தார். தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷாவின் வேகம் எதிர்க்கட்சிகளுக்கு பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்தியது உண்மைதான்.

தேர்தலில் பி.ஜே.பி-யின் வெற்றிக்கு மோடியின் முகம் எந்த அளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறதோ, அதே அளவு அமித்ஷாவின் சூட்சுமமும் காரணம். அதே நேரம், குஜராத் மாநிலம் காந்திநகர் தேர்தல் களத்திலும் களம் இறங்கி வெற்றியும் பெற்றுள்ளார் அமித்ஷா. இந்நிலையில், இன்னும் சில நாள்களில் மத்திய அரசு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அப்போது, அமித்ஷாவின் அசுர பலத்தோடு அமைச்சரவையில் அமரவைக்கத் திட்டமிடுகிறது பி.ஜே.பி தலைமை.பிரதமருக்கு அடுத்த இடத்தில் உள்நாட்டு விவகாரங்களைத் தன் கண்ணசைவில் வைத்திருக்கும் உள்துறை இலாக்காவை அமித்ஷாவுக்கு வழங்க உள்ளார்கள். அதேபோல், பி.ஜே.பி இந்தத் தேர்தலில் கரைசேராத மாநிலங்களில், அடுத்த தேர்தலுக்குள் பி.ஜே.பி-யை கணிசமாக வளர்க்கவேண்டிய பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்க உள்ளார்கள். இதனால்,பி.ஜே.பி-யின் அகில இந்தியத் தலைவர் பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் இப்போது டெல்லியில் உலவுகிறது.