5-ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றம் - அதிரடிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி! | edappadi plan to change the cabinet

வெளியிடப்பட்ட நேரம்: 19:28 (24/05/2019)

கடைசி தொடர்பு:19:57 (24/05/2019)

5-ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றம் - அதிரடிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி!

அதிருப்தியில் இருக்கும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களை திருப்திப்படுத்த அமைச்சரவையில் மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

அடுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. வரும் 5-ம் தேதியன்று அமைச்சரவையில் அவர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் பரவி ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது. 

எடப்பாடி

 

இடைத்தேர்தலின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார் எடப்பாடி. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பலத்த தோல்வியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகளும் கிடைக்காமல் போனது எடப்பாடியை அப்செட் ஆக்கியுள்ளது. இனியும் அமைதியாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள எடப்பாடி அதிரடிக்குத் தயாராகிவிட்டார். ஆம்! முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக அமைச்சரவையிலிருந்து சிலரை கழற்றிவிட முடிவு செய்துவிட்டார் என்ற ஹாட் தகவல்தான் இப்போது அ.தி.மு.க-வில் உலவுகிறது. 
நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமானவர்கள், “நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றாலும், அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது உண்மைதான். குறிப்பாகச் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு 5,000 ரூபாய் வரை பண விநியோகம் செய்ய முதல்வர் தரப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், பல இடங்களில் பணம் குறைந்த அளவே சென்றிருக்கிறது. இதனால் அ.தி.மு.க பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிவாய்ப்பைப் பறிகொடுத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதே, “அவரவர் செய்யும் பலனை அவரவர் அனுபவிப்பீர்கள்” என்று எடப்பாடி எச்சரிக்கை செய்ததை பல அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் சில அமைச்சர்களின் செயல்பாடுகளும் எடப்பாடிக்குப் பிடிக்கவில்லை. அதேநேரம் எம்.எல்.ஏ-க்களாக இருந்துகொண்டே சிறப்பாகச் செயல்பட்ட சிலருக்கும் கைம்மாறு செய்ய வேண்டிய பொறுப்பும் அவருக்கு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் இதுபற்றி ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி “சென்னையில் முறையாகப் பண விநியோகம் செய்யாத பெஞ்சமின், திருச்சியில் தேர்தல் பணியில் தொய்வாக இருந்த வெல்லமண்டி நடராஜன், தினகரனுக்கு மறைமுகமாக உதவி செய்த கருப்பணன், ராஜலெட்சுமி உள்ளிட்டோரின் பதவியைப் பறிக்க முடிவு செய்துள்ளார். துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனை அமைச்சரவைக்குள் கொண்டுவந்து, அவரின் இடத்தை அதிருப்தியில் இருக்கும் செம்மலைக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார். 
பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெஞ்சமினை எடுப்பதால் அந்த இடத்தில் பரமக்குடியில் வெற்றி பெற்றுள்ள சதன் பிரபாகரனுக்கும் ராஜலெட்சுமியின் இடத்தில் திருமாவளவனுக்கு சிதம்பரத்தில் நெருக்கடியை ஏற்படுத்திய முருகுமாறனையும் கொண்டுவரும் திட்டம் அவரிடம் இருக்கிறது. தோப்பு வெங்கடாசலம் அதிருப்தியில் இருப்பதால் கருப்பணனை எடுத்துவிட்டு அந்த இடத்தில் வெங்கடாசலத்தை அமரவைக்கத் திட்டமிட்டுள்ளார். அதே போல், கிறிஸ்துவ பிரதிநிதித்துவத்தையும் தென்மாவட்ட நாடார்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரைக்கு அமைச்சர் பதவியளிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல சேவூர் ராமச்சந்திரனை மாற்றிவிட்டு நரசிம்மனுக்குப் பொறுப்பு வழங்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளார். வரும் 30-ம் தேதியன்று, பிரதமராக மோடி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வும் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் முதல்வர். மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் திரும்பிய பிறகு, இந்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறுவதற்கு அதிகமான வாய்ப்பிருக்கிறது.


குறிப்பாக ஜூன் 5-ம் தேதி அன்று இந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவுக்கு ஒன்பது எப்படி ராசியான எண்ணாகப் பார்க்கப்பட்டதோ அதே போல் எடப்பாடி தனக்கு ராசியான எண்ணாக ஐந்து என்கிற எண்ணை முன்னிறுத்துகிறார். வேட்பாளர் பட்டியல் முதல், முக்கிய அறிவிப்புகளை எல்லாம் ஐந்தாம் எண்ணில் அமையுமாறு பார்த்துக்கொண்டார். அதே போல், அமைச்சரவை மாற்றத்திலும் ஐந்து பேரை எடுத்துவிட்டு ஐந்து பேரை சேர்க்கத் திட்டமிட்டுள்ளார் என்று லாஜிக்காக கணக்கு சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அதேநேரம் தி.மு.க தரப்பு அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வழிபார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் முதல்வர் அமைச்சரவை மாற்ற முடிவைத் துணிச்சலாக எடுப்பாரா? என்ற கேட்டால், முதல்வருக்கு அச்சுறுத்தலே தினகரன் தரப்புதான். ஆனால், இந்தத் தேர்தலில் தினகரன் சொல்லிக்கொள்ளும்படி வாக்குகளை பெறவில்லை என்பதால் அவர் பக்கம் இனி அ.தி.மு.க-வினர் செல்லமாட்டார்கள் என்று எடப்பாடி கணக்கு போட்டே இந்தத் துணிச்சலான முடிவை எடுக்கப்போகிறார். தி.மு.க-வினர் அ.தி.மு.க தரப்புக்கு செக் வைக்கும் முன்பு தி.மு.க-வுக்கு ஷாக் கொடுக்கும் திட்டம் ஒன்றை முதல்வர் வைத்துள்ளார். அதைப் பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று கண்சிமிட்டுகிறார்கள்.

‘இன்’ ஆகும் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் யார் யார், ‘அவுட்’ ஆகப்போகும் ஐந்து அமைச்சர்கள் யார் யார்... ரிசல்ட் 5-ம் தேதி! 


டிரெண்டிங் @ விகடன்