ஹெச்.ராஜா தோல்வியடைந்தது ஏன்? சிவகங்கை சீக்ரெட்ஸ் | The reason behind H Raja's loss in the parliament elections

வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (26/05/2019)

கடைசி தொடர்பு:13:52 (26/05/2019)

ஹெச்.ராஜா தோல்வியடைந்தது ஏன்? சிவகங்கை சீக்ரெட்ஸ்

அ.தி.மு.க-வினரின் இலக்கு, ராஜா எம்.பி-யாக வேண்டும் என்பது அல்ல: மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போன்றவர்கள் தொகுதிக்குள் அதிகமான முறையில் கவனம் செலுத்தினார்கள்.

ஹெச்.ராஜா தோல்வியடைந்தது ஏன்? சிவகங்கை சீக்ரெட்ஸ்

அ.தி.மு.க கூட்டணி சார்பில் பி.ஜே.பி வேட்பாளராகச் சிவகங்கைத் தொகுதியில் களமிறங்கிய அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தோல்வியைச் சந்தித்திருக்கிறார். "அ.தி.மு.க கூட்டணியில் களமிறங்கியதால், நான் நிச்சயம் வெற்றிபெறுவேன்; மத்திய அமைச்சராவேன்; தொகுதிக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவருவேன்" என்று பல்வேறு கனவுகளோடு இருந்த ராஜா, எப்படித் தோற்றுப்போனார் என்பதற்கான பதிலைத் தேடினோம். அதற்கான பதில் இதோ... நடந்தது என்ன?

ஹெச்.ராஜா சிவகங்கை தொகுதி

2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி தமிழகத்தில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது அக்கட்சியின் வேட்பாளராக சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட்டவர் ஹெச்.ராஜா. இவர் 1,33,763 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். கார்த்திக் சிதம்பரம் வாங்கிய வாக்குகள் 1,04,678 ஆகும். சென்ற முறை நாடாளுமன்ற உறுப்பினராக அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்றார். மோடியா, லேடியா என்கிற அலைவீசிய நேரம், அது. அந்த அலையிலும் செந்தில்நாதன் 2,46,608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

பாஸ்கரன்இந்த முறை அ.தி.மு.க, பி.ஜே.பி, பா.ம.க, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. வாக்குகளின் அடிப்படையில் பார்த்தாலும்கூட பி.ஜே.பி வேட்பாளர் ராஜா குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து. அரித்மெட்டிக் கணக்குப்படி ராஜா வெற்றிபெறுவார் என்று அனைவரும் கணக்குப் போட்டிருந்தார்கள். இந்தக் கணக்கைத்தான் பி.ஜே.பி தலைமையும் முன்னாள் எம்.பி செந்தில்நாதனும் அமைச்சர் பாஸ்கரனும் நம்பியிருந்தார்கள். இவர்கள் கணக்குப்படி கடந்த முறை பி.ஜே.பி பெற்ற 1,33,763 வாக்குகளையும் அ.தி.மு.க பெற்ற 4,75,993 வாக்குகளையும் சேர்த்தாலே சுமார் 6,00,000 வாக்குகள் நம் கையில் இருக்கிறது என்கிற மிதப்பிலிருந்தார்கள். இப்படி, கணக்குப் போட்டுக்கொண்டிருந்தார்களே தவிர, வாக்காளர்களின் மனக்கணக்கை அவர்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள்.

ஏன் தோல்வி... எங்கே என்ன நடந்தது? சிட்டிங் எம்.பி-யாக இருந்த செந்தில்நாதன் மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்க, கடந்த ஓராண்டுகளுக்கு முன்பே திருமயம், ஆலங்குடி, சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை போன்ற தொகுதிப் பொறுப்பாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் என அனைவரையும் சரிசெய்து வைத்திருந்தார். தொகுதி முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களை, இதுவரைக்கும் விமானத்தில் போகாதவர்கள், டெல்லி எந்த மூலையில் இருக்கிறது என்று தெரியாதவர்களையெல்லாம் விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்து வந்தார். இவையெல்லாம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஆதரவைச் செந்தில்நாதனுக்குத் தந்தது. அதோடு இல்லாமல், கிராமம் கிராமமாகச் சென்று கட்சி நிர்வாகிகளுக்கும் அந்தக் கிராமத்துக்கும் என்ன தேவை என்பதைப் பட்டியலிட்டு அரசின் சார்பில் அங்கு நலத்திட்டங்களைச் செய்து மக்கள் மத்தியில் நல்லபெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார் செந்தில்நாதன்.

ஹெச் ராஜா

இந்த நிலையில், சிவகங்கை தொகுதியை அ.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும் என்று செந்தில்நாதனும் அமைச்சர் பாஸ்கரனும் முதல்வர் எடப்பாடியிடம் முறையிட்டார்கள். அ.தி.மு.க போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று சொன்னார்கள். "மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுங்கள்; நான் வெற்றிக்கனியை உங்கள் (ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.) முன்பு சமர்ப்பிக்கிறேன்" என்று முட்டி மோதிப் பார்த்தார். இந்த கேப்பில் அமைச்சர் பாஸ்கரன், தன்னுடைய மகனான கருணாகரனுக்கு சிவகங்கைத் தொகுதியைக் கொடுங்கள் என்றும் கேட்டுப் பார்த்தார். "யாருக்கும் சீட் கிடையாது. 'மோடி சொல்லிவிட்டார்', சிவகங்கை தொகுதி ஹெச்.ராஜாவுக்குத்தான்" என்று சொல்லி சீட் கேட்டவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார் எடப்பாடி.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், "மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போன்றவர்கள் அண்ணன் ராஜாவை எம்.பி-யாக ஜெயிக்க வைத்துதான் உங்கள் (முதல்வர், துணை முதல்வர்) முகத்தில் விழிப்போம் என்று சபதமெடுத்து வந்திருக்கிறோம்" என்று பேசினார். அதே கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், "பி.ஜே.பி-க்கு சீட் கொடுத்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனுக்கு மீண்டும் சீட் கொடுத்திருந்தால் நிச்சயம் அவர் எம்.பி-யாகிவிடுவார்" என்றெல்லாம் வேட்பாளர் ராஜாவை வைத்துக்கொண்டே பேசினார்கள். அப்போது ராஜாவின் முகம் மாறியது. ஆனாலும், அமைச்சர் பாஸ்கரனும் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனும் ராஜா மனசு நோகாதபடி மனம் குளிரப்பேசினார்கள். பி.ஜே.பி சார்பில் ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனேயே அ.தி.மு.க-வினர் யாரும் தாமரைக்கு வாக்குகள் கேட்க விரும்பவில்லை. மானாமதுரை இடைத்தேர்தல் தொகுதியில்கூட வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்தபோதும்கூட, "இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள், எம்.பி-க்கு நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள்" என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அ.தி.மு.க-வினரின் இலக்கு, ராஜா எம்.பி-யாக வேண்டும் என்பது அல்ல: மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் போன்றவர்கள் தொகுதிக்குள் அதிகமான முறையில் கவனம் செலுத்தினார்கள்.

ஹெச் ராஜா

செந்தில்நாதன்"ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கட்சி வேலைசெய்யும் நிர்வாகிகள் யாரும் அவரிடம் இல்லை. முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் பதவிநீக்கம் செய்துவைத்திருந்தார் ராஜா. வேட்பாளராகக் களமிறங்கியவுடன் பழைய நிர்வாகிகளையெல்லாம் போனில் அழைத்து, 'நான் செய்தது தவறுதான்; கட்சி வேலை செய்ய வாருங்கள்' என அழைப்பு விடுத்தார். பி.ஜே.பி-க்குள் இரண்டு அணிகளாக இருக்கிறார்கள். இவர்களின் உள்ளடி வேலையும் அ.தி.மு.க-வினரின் உள்ளடி வேலையுமே ஹெச்.ராஜா தோல்விக்கு முதல் காரணமாக அமைந்துவிட்டது.

இரண்டாவது காரணம், ஹெச்.ராஜாவின் பேச்சுகள். தொகுதி சிறுபான்மை மக்களிடம் சம்பாதித்த வெறுப்புகளும் ராஜாவை இந்துத்துவத்தின் தீவிர ஆதரவாளராகவே பார்க்க வைத்திருக்கிறது. காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வாக்குகள் எண்ணும்போதுகூட ராஜாவுக்கு முன்னணி வாக்குகள் கிடைக்கவில்லை. இவர் குடியிருக்கும் ஊரான காரைக்குடியில் உள்ள வாக்காளர்கள், தொழிலதிபர்கள் யாரும் ராஜாவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை. காளையார்கோவில், இளையான்குடி, சிங்கம் புணரி ஆகிய ஒன்றியங்களில் பி.ஜே.பி-க்கு எதிராகவே சிறுபான்மையினர் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், கூட்டணிக் கட்சியினர்கள்கூடத் தாமரைக்கு வாக்களிக்காமல் கை சின்னத்துக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆக, மோடி மீது எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் வேட்பாளர் ராஜாமீது வீசிய எதிர்ப்பு அலை பி.ஜே.பி-யைத் சிவகங்கையிலும் சாய்த்திருக்கிறது. இந்த இரண்டு அலைகளும் வீசியதால்தான் ராஜா தோல்வியடைந்திருக்கிறார். அதற்காக, கார்த்திக் சிதம்பரத்துக்கு மக்கள் விருப்பப்பட்டு யாரும் வாக்களிக்கவில்லை. எரிகின்ற கொள்ளியில் எந்தக் கொள்ளி பரவாயில்லை என்றுதான் மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்