` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்!' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர் | Reason behind Edappadi palanisamys delhi visit

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (25/05/2019)

கடைசி தொடர்பு:13:44 (26/05/2019)

` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்!' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்

தமிழகத்தில் பெற்ற தோல்வியை டெல்லி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ` இன்னும் வலுவாகக் கால் ஊன்றுவதற்கு சில காலம் அ.தி.மு.க தேவைப்படும்' என்ற மனநிலையில் இருக்கின்றனர்.

` ஓ.பி.எஸ் மகனுக்குக் கொடுத்தால் கட்சி பிளவுபடும்!' - எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தும் 2 பேர்

பா.ஜ.க அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் அளிப்பது தொடர்பான ஆலோசனை இன்று நடைபெறுகிறது. ` தமிழகத்துக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் எடப்பாடியும் பன்னீர்செல்வமும். டெல்லித் தலைமை சிக்னல் கொடுத்தால் கேபினட்டில் அ.தி.மு.க இடம்பெறும்' என்கின்றனர் தலைமைக் கழக வட்டாரத்தில். 

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம்

நாடாளுமன்றத் தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் தனிப்பெரும்பான்மையோடு மீண்டும் பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார் நரேந்திர மோடி. வரும் 30-ம் தேதி பதவியேற்பு வைபவங்கள் நடக்க உள்ள நிலையில், `கூட்டணிக் கட்சிகளுக்கும் கேபினட்டில் இடம் கொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனையொட்டி இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ளனர் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும். தொடர்ந்து, `28, 29, 30 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருப்பார்கள்' என்ற தகவலும் வெளிவந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ள நிலையில், `ஓ.பி.எஸ் மகன் ரவீந்திராத் குமாருக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்கும்' என்ற செய்தியும் பரவி வருகிறது. இதற்குப் பதில் அளித்த ரவீந்திரநாத், `நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றிபெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன்' என விளக்கம் அளித்தார். 

ரவீந்திரநாத் குமார்

`டெல்லியில் என்னதான் நடக்கிறது?' என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டோம். ``நாடாளுமன்றத் தொகுதிகளில் படுதோல்வியைச் சந்தித்தாலும் ஆட்சி நீடிக்கிறது என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. `தமிழகத்தின் தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை ஆளும் தகுதி அ.தி.மு.க-வுக்கே உண்டு என்பதைக் காட்டுகின்றன. எங்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை வழங்குவோம்' என அறிக்கையும் வெளியிட்டார். `தமிழகத் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வரலாம்' என்பதை முன்கூட்டியே கணித்த ஓ.பி.எஸ், கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி வாரணாசிக்குப் பயணப்பட்டார். அங்கு குடும்பம் சகிதமாக பா.ஜ.க மூத்த தலைவர் பியூஷ் கோயல் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தத் தகவல், `பா.ஜ.க-வில் ஐக்கியமாகப்போகிறார் ஓ.பி.எஸ்' என்ற ரீதியில் பரவவே, அவசர அவசரமாக மறுப்பு அறிக்கையும் வெளியிட்டார். `மகனுக்கு மந்திரி பதவியை உறுதி செய்வதற்காகத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது' என்ற விவாதங்களும் நடந்தன. ஆனால், இதைக் கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடியின் வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில் பங்கேற்றார் ஓ.பி.எஸ். சொல்லி வைத்தது போல, தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுவிட்டார். தமிழகத்தின் ஒரே பிரதிநிதியாக இருப்பதால், அவரைக் கேபினட்டில் சேர்ப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டனர். இந்த இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் தொடங்கியிருக்கிறது" என விவரித்தவர்கள், 

எடப்பாடி பழனிசாமி

``டெல்லி பா.ஜ.க தலைவர்களோடு பன்னீர்செல்வம் அதிக நெருக்கத்தில் இருப்பதால், அவரை அனுசரித்துச் சென்றுகொண்டிருக்கிறார் எடப்பாடி. கேபினட் வரிசையில் ரவீந்திரநாத்தைக் கொண்டு வரும் முயற்சி குறித்த பேச்சு நடந்தபோது, `ஏற்கெனவே கட்சி இரண்டு துண்டாக உடைந்து இருப்பதாகப் பேசி வருகின்றனர். ரவிக்குக் கேபினட்டில் இடம் கொடுத்தால் 3, 4 ஆகக் கட்சி பிரிந்துவிடும். சீனியர்கள் யாரும் இதை விரும்பமாட்டார்கள். அதற்குப் பதிலாக அ.தி.மு.க-வின் ராஜ்ய சபா எம்.பி-க்கள் இருவருக்கு கேபினட்டில் இடம் கொடுத்தால், பன்னீர்செல்வம் மகனுக்கு இணை அமைச்சர் பதவி கொடுக்கலாம். இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். கட்சிக்குள்ளும் சிக்கல்கள் வராது. 

பன்னீர்செல்வம்

இதற்குப் பிரதிபலனாக பா.ஜ.க-வுக்கு தமிழகத்திலிருந்து 2 ராஜ்ய சபா எம்.பி-களைக் கொடுக்கலாம். அவர்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தருவதை டெல்லி முடிவு செய்யட்டும்' என விவரித்துள்ளனர் சீனியர் நிர்வாகிகள் சிலர். இந்தப் பாயின்ட்டை மையமாக வைத்துதான் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம். தமிழகத்தில் பெற்ற தோல்வியை டெல்லி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இன்னும் வலுவாகக் கால் ஊன்றுவதற்கு சில காலம் அ.தி.மு.க தேவைப்படும் என்ற மனநிலையில் இருக்கின்றனர். எடப்பாடியின் இந்த மூவ், அரசியல்ரீதியாக வெற்றி பெறுமா என்பதற்கான விடை ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்" என்கின்றனர் நிதானமாக.