`பெம்பிள்ளை ஓர்மை!' - 78 பெண் எம்.பி-க்கள் சாதனையா, சறுக்கலா? #ElectionResults2019 | Record number of 78 women MPs are being elected to the parliament, A discussion on their success!

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (26/05/2019)

கடைசி தொடர்பு:07:38 (27/05/2019)

`பெம்பிள்ளை ஓர்மை!' - 78 பெண் எம்.பி-க்கள் சாதனையா, சறுக்கலா? #ElectionResults2019

பெண்களுக்கு எதிரான வன்முறையில் முதலிடம் பிடித்திருக்கும் உத்தரப்பிரதேசம் இந்த முறை 11 பெண் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகிறது. ’பெண்களின் ஆடைகளால்தான் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்’ என்று அந்தப் பெண்களும் சேர்ந்துகொண்டு சொல்லாத வரை இந்த எண்ணிக்கை அங்கே வன்முறையைக் குறைக்கக் கைகொடுக்கும்.

`பெம்பிள்ளை ஓர்மை!' - 78 பெண் எம்.பி-க்கள் சாதனையா, சறுக்கலா? #ElectionResults2019

17-வது நாாாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் (மொத்தம் 78) பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனின் 32 சதவிகித பெண் உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த அளவு. ஆனால், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவுக்குப் பிறகு, வேறு பெண் பிரதமரையும் பார்த்திருக்காத தேசத்தில், இது கவனிக்க வேண்டிய எண்ணிக்கை. 2019 பொதுத்தேர்தலில் கட்சிகள் ஒட்டுமொத்தமாகக் களமிறக்கிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 715. சராசரியாக 10 ஆண் வேட்பாளர்களுக்கு ஒரு பெண் வேட்பாளர் கணக்கீட்டில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போட்டியிட்டவர்களில் ஒரு பெண் மட்டுமே சுயேச்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுவோம்’ என்று ஒவ்வொரு முறையும் தவறாமல் தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிக் கொண்டிருக்கும் காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் நிறுத்திய வேட்பாளர்கள் முறையே 54 மற்றும் 53. அதிகபட்சமாகப் பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியது காங்கிரஸ் கட்சி. அதிகாரபூர்வமாகத் திருநங்கை வேட்பாளரைக் களமிறக்கியது ஆம் ஆத்மி கட்சி மட்டுமே. பெண்களுக்கு எதிரான வன்முறையில் முதலிடம் பிடித்திருக்கும் உத்தரப்பிரதேசம் இந்த முறை 11 பெண் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகிறது. ’பெண்களின் ஆடைகளால்தான் அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்’ என்று அந்தப் பெண்களும் சேர்ந்துகொண்டு சொல்லாத வரை இந்த எண்ணிக்கை அங்கே வன்முறையைக் குறைக்கக் கைகொடுக்கும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் நிகராக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கர்ஜித்துக்கொண்டிருக்கும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் அரசு இந்த முறை 7 பெண்களை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. இது அந்த மாநிலத்தின் மொத்த மக்களவை உறுப்பினர்களில் 33 சதவிகிதம். 

பெண் எம்.பி.க்கள்

தென்னகத்தைப் பொறுத்தவரை வாரிசு அரசியலுக்கான முதல் முயற்சியில் தெலங்கானா தோல்வியைத் தழுவியுள்ளது. சந்திரசேகரராவ் மகள் கவிதாவின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தோல்வியைத் தழுவியுள்ளார். பெண்ணியப் போராளி பெரியாரின் மண் எனப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழகம் எப்போதும்போல ஒற்றை இலக்க எண்ணில் மூன்று பெண் உறுப்பினர்களை மக்களவைக்கு அனுப்புகிறது. சரிபாதி பெண் வேட்பாளர்களைக் களமிறக்கிய நாம் தமிழர் கட்சியின் திட்டம் செல்லுபடியாகவில்லை. கரூரில் இருந்து களமிறக்கப்பட்ட ஜோதிமணி காங்கிரஸ் கட்சி என்றாலும் கொள்கை நிலைப்பாடு உடையவர், மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் அவரது வெற்றி அங்கு ஊகிக்கக்கூடியதாகவே இருந்தது. தூத்துக்குடியைப் பொறுத்தவரை 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஆளுங்கட்சிகள் மீதான மக்களின் கோபமே பாரதிய ஜனதாவின் தமிழிசையைத் தோற்கடித்துத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கனிமொழியை ஜெயிக்க வைத்தது எனச் சொல்லலாம். தென் சென்னைத் தொகுதியைப் பொறுத்தவரை தமிழச்சி தங்கபாண்டியன் முதல்முறை வேட்பாளராக இருந்தும் அ.தி.மு.க-வின் அமைச்சர் ஜெயகுமாருக்குச் சாதகமான தென்சென்னையில் அவரின் மகன் ஜெயவர்தனை 2,61,088 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். இனியும் அது ராயபுரத்துக்காரரின் வசம் இருக்குமா என்று இனிவரும் காலங்களில் நடக்கும் தேர்தல்களே முடிவு செய்யும்.   

தேசிய அளவில் இத்தனை பெண் வேட்பாளர்களின் வெற்றிக்கு இடையே நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமாக இருந்தவர்கள் அபார எண்ணிக்கையில் வெற்றி அடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் குடும்பத் தொகுதியான அமேதியில் ராகுல் காந்திக்கு எதிரான ஸ்மிருதி இரானியின் வெற்றி அதற்கு ஓர் உதாரணம். 52,000 வாக்குகள் வித்தியாசத்திலான வெற்றி எவரும் எதிர்பார்த்திராதது. பரிசோதனை முயற்சியாக அடுத்தமுறை பிரியங்கா காந்தியை அமேதி தொகுதியில் காங்கிரஸ் நிறுத்துவதற்கான அத்தனை காரணங்களையும் இந்தத் தேர்தல் அவர்களுக்குக் கொடுத்துள்ளது. 

காங்கிரஸ் கணிக்காத தோல்விபோல பாரதிய ஜனதா எதிர்பார்க்காத வெற்றி என அந்தக் கட்சியின் ப்ரக்யா தாகூரின் வெற்றியைச் சொல்லலாம். காந்தியைச் சுட்ட நாதுராம் தேசபக்தர் என்று சொன்னவரை, மாலேகான் குண்டுவெடிப்பின் முதன்மைக் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவரை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் எப்படி வெற்றி பெற வைத்தார்கள் என்பதை எப்படி யோசித்தாலும் ஊகிக்க முடியவில்லை. எது எப்படியோ, உத்தரப்பிரதேசத்துக்கு ஒரு யோகி ஆதித்யநாத்போல மத்தியப்பிரதேசத்துக்கு ஒரு பிரக்யா தாகூர் தயார்!

மற்றபடி 2014-ன் இடையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததால் அப்படியே கைவிடப்பட்ட 33 சதவிகித இடஒதுக்கீட்டை இந்த 78 எம்.பி-க்களேனும் ஒன்று சேர்ந்து நிகழ்த்திக் காட்டினால் நலம். வரும் தேர்தல்களில் பிரக்யா தாகூர்போல அவசரகதியாக மேலும் பலர் நிறுத்தப்படும் அல்லலையேனும் அது கணிசமாகக் குறைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்