Published:Updated:

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தாமதம் ஏன்..! - வசந்தகுமார் எம்.பி-யாக பொறுப்பேற்பதில் சிக்கலா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தாமதம் ஏன்..! - வசந்தகுமார் எம்.பி-யாக பொறுப்பேற்பதில் சிக்கலா?
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தாமதம் ஏன்..! - வசந்தகுமார் எம்.பி-யாக பொறுப்பேற்பதில் சிக்கலா?

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். இருப்பினும், அவரது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை சபாநாயகரால் ஏற்கமுடியுமா என்கிற சர்ச்சை எழுந்துள்ளதால், அவர் எம்.பி-யாகப் பொறுப்பேற்பது பற்றி பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன.

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தாமதம் ஏன்..! - வசந்தகுமார் எம்.பி-யாக பொறுப்பேற்பதில் சிக்கலா?

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான ஹெச்.வசந்தகுமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துக் களமிறங்கிய அவர், 2,59,808 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைக் கைப்பற்றினார். 

குமரி தொகுதியில் வென்ற அவர், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின்னர், அவர் இதை அறிவித்தார். இந்த நிலையில், வசந்தகுமாரால் தனது எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்வதில் சிக்கல் இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வைரலாகத் தகவல் பரவிவருகிறது. 

அதில், ’சட்டமன்ற சபாநாயகர் மீது தி.மு.க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. அது நிலுவையில் இருக்கும் நிலையில், சபாநாயகரால் வசந்தகுமாரின் ராஜினாமா கடிதத்தை ஏற்கமுடியாது. தி.மு.க தனது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெற்றால் மட்டுமே அவரது ராஜினாமாவை சபாநாயகரால் ஏற்க முடியும். அதே சமயம், அவர் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுத்துவிடுவார். அதனால், எப்படிப் பார்த்தாலும் தி.மு.க -வுக்கு இழப்பு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தாமதம் ஏன்..! - வசந்தகுமார் எம்.பி-யாக பொறுப்பேற்பதில் சிக்கலா?

இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இது தொடர்பாக ஆளாளுக்கு கருத்துகளைத் தெரிவித்து, பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், இந்தத் தகவல் உண்மையா என்பது பற்றியும் சபாநாயகரால் வசந்தகுமாரின் ராஜினாமாவை ஏற்க முடியாதா என்பது பற்றியும் அறிய முன்னாள் சபாநாயகரான ஆவுடையப்பனைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். 

நம்மிடம் பேசிய ஆவுடையப்பன், ’’சபாநாயகரின் நடவடிக்கையில் திருப்தி இல்லாததால், தி.மு.க சார்பாக அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்திருப்பது உண்மைதான். அ.தி.மு.க-வைச்  சேர்ந்த ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர பேரவைச் செயலாளரிடம் தி.மு.க சார்பாக மனு அளிக்கப்பட்டது. அதனால், சபாநாயகர் மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன்படி, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்தது. 

மூன்று எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான விவகாரத்தில் மட்டுமே உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறதே தவிர, சபாநாயகர் பிற விவகாரங்களில் செயல்படவும் முடிவுகளை எடுக்கவும் தடை இல்லை. அதனால், வசந்தகுமாரின் ராஜினாமாவை அவர் ஏற்பதில் எந்த சிக்கலும் கிடையாது. அதனால், அவர் திட்டமிட்டபடி தனது எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்திவிட்டு, வரும் 6-ம் தேதிக்குள் எம்.பி-யாகப் பொறுப்பேற்கலாம். அதில் எந்த சிக்கலும் இல்லை’’ என்று தெரிவித்தார்.  

Vikatan