இரு அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனம்... எடப்பாடியை அதிரவைத்த தோப்பு வெங்கடாசலம்! | Perundurai MLA Thoppu Venkatachalam talks about his strategy

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (28/05/2019)

கடைசி தொடர்பு:15:23 (28/05/2019)

இரு அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனம்... எடப்பாடியை அதிரவைத்த தோப்பு வெங்கடாசலம்!

இரு அமைச்சர்களுக்கு சிம்ம சொப்பனம்... எடப்பாடியை அதிரவைத்த தோப்பு வெங்கடாசலம்!

மைச்சர் பதவிக்காக மறைமுக தர்மயுத்தம், எடப்பாடியை வழிக்குக் கொண்டுவர கட்சிப் பதவி ராஜினாமா, அமைச்சர் கே.சி.கருப்பணன் மீது பகிரங்கக் குற்றச்சாட்டு எனச் சமீபகாலமாக அ.தி.மு.கவை உள்ளுக்குள்ளிருந்தே அதிரவைத்து வருபவர் பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சர் பதவிக்காகப் போராடி வந்தவருக்கு, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக அது கைகூடி வரக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதால் தோப்பு வெங்கடாசலம் உற்சாகமடைந்துள்ளார். 

2016 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தின் ஒரே அமைச்சராகவும், ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016 அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் வெளியிட்டார். அந்த உற்சாகத்தில் தேர்தல் வேலைகளில் இறங்கிய தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மாவட்டத்தின் எட்டுத் தொகுதிகளிலும் அ.தி.மு.கவுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். ஆனால், தேர்தலுக்குப் பின்னர் தோப்பு வெங்கடாசலம் எதிர்பார்த்த அமைச்சர் பதவி மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா கொடுக்கவில்லை. மாறாக, தோப்பு வெங்கடாசலம் முந்தைய ஆட்சியில் வகித்து வந்த புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவியை பவானி தொகுதியில் வெற்றி பெற்ற கே.சி. கருப்பணனுக்குக் கொடுத்தார். அப்போதிலிருந்தே தோப்பு வெங்கடாசலம் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். ஜெ., மறைவுக்குப் பிறகு, `வாய்ப்பு வரும் போது அமைச்சர் பதவி கொடுக்கிறேன்’ என எடப்பாடியாரும் தோப்பு வெங்கடாசலத்தை சமாதானப்படுத்தி வந்தார். ஆனால், அது நடந்தபாடில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தோப்பு வெங்கடாசலம், கடந்த சில நாள்களுக்கு முன்பு, அவர் வகித்துவந்த மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்து எடப்பாடியை அதிர வைத்தார். மேலும், `மக்களவைத் தேர்தலில் தன்னுடைய பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க வாக்குகளைச் சிதைக்க, அமைச்சர் கருப்பணனே பணம் கொடுத்து உள்ளடி வேலை பார்த்தார்’ எனப் பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்பினார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தோப்பு வேறு கட்சிக்குத் தாவ வாய்ப்பிருப்பதாகவும் பலர் பேசினர். ஆனால், சத்தமேயில்லாமல் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கருப்பணனை தேர்தல் முடிவுகளில் பின்னுக்குத் தள்ளி, தோப்பு வெங்கடாசலம் மாஸ் காட்டியிருக்கிறார். இதனால், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது எனத் தோப்பு வெங்கடாசலம் உற்சாகத்தில் மிதக்கிறார்.

அமைச்சர்

அமைச்சர் கருப்பணனின் பவானி தொகுதி, தோப்பு வெங்கடாசலத்தின் பெருந்துறை தொகுதி மற்றும் அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதி ஆகியவை, திருப்பூர் மக்களவைத் தொகுதியில்தான் வருகின்றன. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருப்பூர் தொகுதியில், அ.தி.மு.க-வால் வெற்றி பெற முடியவில்லை என்பது தோப்பு வெங்கடாசலம் வைக்கும் முதல் குற்றச்சாட்டு. அடுத்ததாக அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அ.தி.மு.கவைவிட தி.மு.க கூடுதலாக 9,500 வாக்குகள் பெற்றிருக்கிறது. அமைச்சர் கருப்பணனின் பவானி தொகுதியிலோ அ.தி.மு.கவைவிட, தி.மு.க சுமார் 17,500 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. ஆனால், தோப்பு வெங்கடாசலத்தின் பெருந்துறை தொகுதியிலோ தி.மு.க 4,500 வாக்குகள்தான் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. இரண்டு அமைச்சர்களைவிட, தன்னுடைய தொகுதியில் பெரிதாக அ.தி.மு.க வாக்கு வங்கி சரியவில்லை என்பது தோப்பு வெங்கடாசலத்தை கூடுதல் உற்சாகப்படுத்தியிருக்கிறது. தனது எதிரியான கருப்பணனின் தொகுதியில் தி.மு.க கூடுதலாக 17,500 வாக்குகள் வாங்கியதைச் சுட்டிக்காட்டியே அமைச்சர் பதவிக்கு அடிபோடலாம் என்ற ரீதியில் காய் நகர்த்தி வருகிறார்.

இதுகுறித்து தோப்பு வெங்கடாசலத்திடம் பேசினோம். ``மறைந்த முதலமைச்சர் அம்மா செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் போன்றவற்றை முன்னிறுத்தி வாக்குகள் கேட்டேன். மற்றவர்களைப் போல (கருப்பணனை மறைமுகமாகச் சாடுகிறார்), நான் அடுத்த தொகுதிக்குச் சென்று உள்ளடி வேலை பார்க்காமல், என்னுடைய தொகுதியில் ஒழுங்காக வேலை பார்த்தேன். அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களின் உள்ளடி வேலைகளையும் மீறி, என்னுடைய தொகுதியில் அ.தி.மு.கவின் வாக்குவங்கி சரியாமல் பார்த்துக் கொண்டேன்” என்றார்.

தர்மயுத்தம் செஞ்சா, பலன் கிடைக்கும் போல!                                                                      


டிரெண்டிங் @ விகடன்