`ஸ்டாலினின் 2 திட்டங்களும் பலிக்கவில்லை!' - சிம்மாசனக் கனவைப் பறித்த சில்லறைப் பஞ்சாயத்து | DMK party cadres discussed about election dramas

வெளியிடப்பட்ட நேரம்: 15:28 (28/05/2019)

கடைசி தொடர்பு:15:41 (28/05/2019)

`ஸ்டாலினின் 2 திட்டங்களும் பலிக்கவில்லை!' - சிம்மாசனக் கனவைப் பறித்த சில்லறைப் பஞ்சாயத்து

வரும் ஜுன் 3-ம் தேதி நடக்கவிருக்கும் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்கு டெல்லியிலிருந்து அனைத்துத் தலைவர்களையும் அழைப்பதாக இருந்தார். ஒரு வெற்றி மாநாடு போல கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடவும் திட்டம் வகுத்திருந்தார். ஆனால்?

`ஸ்டாலினின் 2 திட்டங்களும் பலிக்கவில்லை!' - சிம்மாசனக் கனவைப் பறித்த சில்லறைப் பஞ்சாயத்து

தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேரும் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு, `வெயிட் அண்ட் ஸீ' எனப் பதில் கொடுத்தார் ஸ்டாலின். ``இந்தத் தேர்தலில் ஸ்டாலின் போட்ட 2 திட்டங்களும் பலிக்கவில்லை. இதனால் கருணாநிதி பிறந்தநாளுக்காக அவர் வகுத்து வைத்திருந்த திட்டங்களும் முடங்கிப் போய்விட்டன" என ஆதங்கப்படுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி. ``வாரிசுகளுக்கு சீட் கேட்பதில் காட்டிய முனைப்பைத் தேர்தல் வெற்றிக்காகக் காட்டவில்லை" எனக் காங்கிரஸ் கூட்டத்தில் அதிருப்தி வெடித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ராகுல் காந்தி. தமிழகத்திலும் 9 சட்டமன்றத் தொகுதிகளில் ஏன் தோல்வி ஏற்பட்டது என்பது ஆராய்ந்து கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். விரைவில் வரவிருக்கின்ற ராஜ்ய சபா தேர்தலில் தி.மு.க-வுக்கு 3 இடங்கள் கிடைக்க உள்ளன. இதில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு சீட் உறுதியாகிவிட்டதால், அடுத்த 2 சீட்டுகளுக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர் உடன்பிறப்புகள். ``தி.மு.க-வின் தொழிற்சங்க அமைப்பான தொ.மு.ச-வுக்கு ஒரு சீட்டைக் கொடுக்க வேண்டும் எனச் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இன்னொரு சீட்டை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதாகவும் தகவல் வருகிறது. மத்தியில் ஆட்சியில் இல்லாததால் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை மன்மோகன் சிங்குக்காகக் கேட்டால் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகிகள் சிலர்,  

ஸ்டாலின்

``மத்தியில் ராகுல் தலைமையில் ஆட்சி அமைந்திருந்தால் குடும்பத்தில் ஒருவரை ராஜ்ய சபா பதவியில் அமர்த்தலாம் என்ற முடிவில் சிலர் இருந்தனர். இப்போது அந்த முடிவையும் ஒத்திப் போட்டுவிட்டனர். அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுவிட்டார் ஸ்டாலின். இந்தத் தேர்தலில் அவர் சொன்ன 2 விஷயங்கள் நடக்கவில்லை. பிரசாரத்தில், `கலைஞரின் பிள்ளை நான். பல பிரதமர்களை அடையாளம் காட்டியவர் கலைஞர். மத்தியில் ராகுல்காந்தி பிரதமராக அமர்வார்' என்றவர், `ராகுல்காந்தியே வருக...நல்லாட்சி தருக' என நம்பிக்கையோடு பேசினார். முதன்முதலாக ஸ்டாலின் முன்மொழிந்ததே ராகுல் காந்தியின் பெயரைத்தான். அவர் சொன்னது நடக்கவில்லை. `கட்சியே காணாமல் போய்விட்டது' எனக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மோதல் வெடித்துக் கொண்டிருக்கிறது. `பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்திருந்தால் ஓரளவுக்காவது சீட் வாங்கியிருக்கலாம்' என காங்கிரஸார் பேசி வருகின்றனர்.

ஸ்டாலின்

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என அனைவரும் ஜெயித்துவிட்டார்கள். மோடி எதிர்ப்பு அலையின் காரணமாகத்தான் இந்த வெற்றி கிடைத்தது. அதுவே, 22 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தேர்தல் முடிவில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றும் கொண்டாட்ட மனநிலைக்கு வர முடியவில்லை. தேர்தலுக்கு முன்னரே முக்கியமான ஒரு திட்டத்தையும் கையில் வைத்திருந்தார் ஸ்டாலின். வரும் ஜுன் 3-ம் தேதி நடக்கவிருக்கும் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்கு டெல்லியிலிருந்து அனைத்துத் தலைவர்களையும் அழைப்பதாக இருந்தார். ஒரு வெற்றி மாநாடு போல கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடவும் திட்டம் வகுத்திருந்தார். இப்போது ஒய்.எம்.சி.ஏ திடலில் மிக எளிமையாகப் பிறந்தநாள் விழாவை நடத்த உள்ளனர். இந்த விழாவில் ஸ்டாலினும் துரைமுருகனும் பேச உள்ளனர். 

ஸ்டாலின்

மாநில மாநாடு போல நடத்தும் அளவுக்குத் திட்டமிட்டு இறுதியில் ஒரு திடலுக்குள் முடங்கிப் போனதில் வருத்தத்தில் இருக்கிறார் ஸ்டாலின். தேர்தலில் தோல்வியடைந்த 9 தொகுதிகளிலும் அதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார். இதுதொடர்பாகப் பேசிய நிர்வாகிகள் சிலர், `தேர்தல் நெருக்கத்தில் பிரசாரத்தில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தொகுதி நிலவரங்களையும் பூத் நிலவரங்களையும் அறிவாலய நிர்வாகிகள் மேற்பார்வையில் கண்காணிக்கத் தவறிவிட்டனர். ஆளும்கட்சியும் அ.ம.மு.க-வும் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்தபோது, சில தொகுதிகளில் தி.மு.க மா.செ-க்கள் கறாராக இருந்தனர். மானாமதுரை உள்ளிட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 500 ரூபாய்க்குப் பதில் 1000 ரூபாய் எனக் கொடுத்திருந்தால் சில தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கலாம். அந்த வகையில் தாராளமாகச் செலவழித்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். அப்படிச் செய்யாததால்தான் சட்டமன்றத் தொகுதிகளை இழக்க வேண்டியது வந்தது' எனப் புலம்பி வருகின்றனர். அதற்கெல்லாம் பழிதீர்க்கும்விதமாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சில சீனியர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்" என்கின்றனர் நிதானமாக.