``பார்ட்டி வொர்க் பண்றேன்... சீட் கொடுக்கிறது அவங்க இஷ்டம்!" - குஷ்பு | Actress Kushboo talks about parliament election results and congress failure

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (28/05/2019)

கடைசி தொடர்பு:11:02 (29/05/2019)

``பார்ட்டி வொர்க் பண்றேன்... சீட் கொடுக்கிறது அவங்க இஷ்டம்!" - குஷ்பு

``வயநாடு தொகுதியில் அவர் தோல்வியடைந்திருக்க வேண்டுமே! காங்கிரஸ் 50 தொகுதிகளுக்கு மேல் வென்றிருக்கிறதே. நியாயமான தேர்தல் நடந்திருந்தால் இந்தப் பேச்சுக்கே இடம் இருந்திருக்காது."

``பார்ட்டி வொர்க் பண்றேன்... சீட் கொடுக்கிறது அவங்க இஷ்டம்!

தேர்தல் முடிவுகள் வெளியானபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்த குஷ்பு, தற்போது உடல்நிலை சரியாகி வழக்கமான பணிகளுக்குத் திரும்பியிருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குஷ்புவை கவலைப்பட வைத்திருப்பது, அவரின் பேச்சில் அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது. தேர்தல் முடிவுகள் குறித்து வெளிப்படையாக தன் கருத்துகளைப் பகிர்கிறார், குஷ்பு.

``காங்கிரஸ் கட்சிக்கு இப்படியொரு பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்த்தீர்களா?"

குஷ்பு

``தேர்தல் பிரசாரத்துக்காக நான் பல மாநிலங்களுக்குச் சென்றிருந்தேன். எங்கள் கட்சி மீது மக்களிடம் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. மாறாக பி.ஜே.பி கட்சியின் மீதுதான் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். புல்வாமா தாக்குதல் பிரச்னையை தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக பி.ஜே.பி பயன்படுத்திக்கொண்டது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு சமயத்தில் கேதார்நாத்தில் மோடி தியானம் செய்தார். அதன் மூலம் இந்து மதத்தினரிடம் மறைமுகமாக வாக்குச்சேகரித்தார். தேர்தல் ஆணையம் பி.ஜே.பி-க்குச் சாதகமாகவே செயல்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி சிலரால் கையாளப்பட்ட விதத்திலும் பி.ஜே.பியினரின் பங்கு உள்ளது. பல முறைகேடுகள் செய்தே பி.ஜே.பி வெற்றி பெற்றிருக்கிறது. எனவேதான் எங்கள் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. `மிஸ்டர் மோடி அவர்களே... உண்மையிலேயே உங்கள் கட்சி பெற்றிருக்கும் வெற்றி, நியாயமானதுதானா? என் கேள்விக்குப் பதில் சொல்வீர்களா?' "

மோடி

``தென்னிந்தியாவிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பி.ஜே.பி வெற்றி பெற்றிருக்கலாமே?"

``தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தங்களுக்குச் செல்வாக்கு இல்லை; இங்கு நாம் வெற்றி பெற மாட்டோம் என்பது பி.ஜே.பியினருக்கு நன்கு தெரியும். அதனால்தான் வட இந்தியாவில் திட்டமிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருக்கின்றனர். கடந்த தேர்தலில் எங்கள் கட்சியினர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தார்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இந்த முறை அப்படியான நிலை இல்லையே! சமீபத்தில் நடந்த சில மாநிலத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தோம். அந்த மாநிலங்களில் மக்கள் எங்கள் மீது நல்ல மதிப்பை வைத்திருக்கின்றனர். இந்நிலையில் அந்த மாநிலங்களிலும் எங்கள் கட்சிக்குப் பெரிய தோல்வி எப்படி வரும்?"

``இந்தியாவில் பாரம்பர்யமுள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ், மாநிலக் கட்சிகளைப்போல இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவது ஆரோக்கியமான வளர்ச்சியா?"

``தீவிரவாத குற்றப் பின்னணியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர் மீது வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், சீட் வழங்கப்பட்டு அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். அந்த அளவுக்கு மக்களை மத ரீதியாக ஏமாற்றிவைத்திருக்கிறார்கள் பி.ஜே.பியினர். இப்படித்தான் தொடர்ந்து குறுக்கு வழியில் வெற்றி பெறுவோம் என்றால் ஜெயித்துவிட்டுப்போங்கள். அதைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நாங்கள் இத்தகைய மோசமான செயல்களைச் செய்யமாட்டோம். நாங்கள் துவண்டுபோகவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். நாங்கள் தொடர்ந்து நேர்மையாகப் பயணிப்போம். எங்களுக்கும் காலம் வரும். நாங்களும் பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சியைப் பிடிப்போம். அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது. தமிழகத்தில் எங்கள் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது." 

ராகுல்காந்தி

``ராகுல்காந்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என நினைக்கலாமா? அவர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகச் சொல்லியிருக்கிறாரே..."

``அப்படியென்றால் வயநாடு தொகுதியில் அவர் தோல்வியடைந்திருக்க வேண்டுமே! காங்கிரஸ் 50 தொகுதிகளுக்கு மேல் வென்றிருக்கிறதே. நியாயமான தேர்தல் நடந்திருந்தால் இந்தப் பேச்சுக்கே இடம் இருந்திருக்காது. அதனால், ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை."

``தமிழ்நாட்டில் மூன்று பெண் எம்.பி-கள் நாடாளுமன்றம் செல்கிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``மகிழ்ச்சிதான்! தமிழ்நாட்டுப் பெண்களின் சார்பில் அவர்கள் நிச்சயம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் என நம்புகிறேன். தவிர, சுமலதா, ஹேமமாலினி, ரோஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் மக்கள் பிரதிநிதிகளாகியிருக்கிறார்கள். அனைத்துச் சகோதரிகளுக்கும் வாழ்த்துகள். ரோஜா நிச்சயம் அமைச்சராவார். `சினிமா பிரபலங்களுக்கு மார்கெட் இல்லாதபோது அரசியலுக்கு வருவார்கள்; அவர்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?' எனப் பலரும் சொல்கிறார்கள். அரசியலுக்கு வரும் எல்லா சினிமா பிரபலங்களும் ஜொலிப்பதில்லையே. குற்றச்சாட்டு மற்றும் விமர்சனங்களை முன்வைப்பது எளிது. ஆனால், களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கே கஷ்டம் தெரியும்."

குஷ்பு

``உங்களுக்கு மக்கள் பிரதிநிதியாகும் ஆர்வம் இருக்கிறதா?"

``நான் தனிப்பட்ட முறையில் எனக்காக உழைக்கவில்லை. என் கட்சிக்காக வேலை செய்கிறேன். யாருக்கு எப்போது வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என எங்கள் கட்சி மேலிடத்துக்குத் தெரியும். கட்சி வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன்." 

``தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு ஆபத்தில்லை. அவர்களின் ஆட்சி தொடரும் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``ரொம்பக் கஷ்டம்தான்! அ.தி.மு.க ஆட்சி மாற வேண்டும் என்றுதான் பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால், அப்படி நடக்கவில்லை. வரக்கூடிய காலங்களில் அரசியல் சூழல்கள் எப்படி மாறுகிறது எனப் பார்ப்போம்."

``மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறதே..."

``வரவேற்கக்கூடிய விஷயம்! அரசியல் கட்சியைத் தொடங்கி, தனித்து தேர்தலை எதிர்கொள்வதற்கே பெரிய தைரியம் வேண்டும். அக்கட்சி 3.5 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசன் சார் சரியான பாதையில் பயணித்தால், அவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு."


டிரெண்டிங் @ விகடன்