நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் 38 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே ஆளும் அ.தி.மு.க வெற்றியடைந்தது. துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும் மூத்த அரசியல்வாதியுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையும் அ.ம.மு.க’வின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்க.தமிழ்ச்செல்வனையும் தோற்கடித்தார்.

இந்நிலையில், இந்தியா முழுவதிலும் உள்ள தனது கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி கொடுக்க, பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. அந்த வகையில், அ.தி.மு.க’விலிருந்து ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் எனவும், அது, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியானது. இதனால், அ.தி.மு.க மூத்த நிர்வாகிகள் கொதிப்பில் இருந்தனர். இது ஒருபுறம் என்றால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் டெல்லி சென்ற ரவீந்திரநாத்குமார் இன்று வரை ஊர் திரும்பவில்லை.
இந்நிலையில், இன்று மாலை நடைபெற இருக்கும் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, பிரதமர் அலுவலகத்திலிருந்து நாட்டின் பல முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு சென்றிருக்கிறது. அதே போல, ரவீந்திரநாத்குமாருக்கும் அழைப்பு சென்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ரவீந்திரநாத்குமாருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.