``தமிழிசை என் மடியில் தவழ்ந்த மகள்; இப்போது எங்களுக்குள் எந்தப் பாசமும் கிடையாது!" - வசந்தகுமார் எம்.பி - #VikatanExclusive | vasantha kumar mp talks about her election success and daughter tamilisai

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (30/05/2019)

கடைசி தொடர்பு:17:47 (30/05/2019)

``தமிழிசை என் மடியில் தவழ்ந்த மகள்; இப்போது எங்களுக்குள் எந்தப் பாசமும் கிடையாது!" - வசந்தகுமார் எம்.பி - #VikatanExclusive

"`எம்.பி வசந்தகுமார் கடைக்குச் சென்று பணம் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று யாரோ வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"

``தமிழிசை என் மடியில் தவழ்ந்த மகள்; இப்போது எங்களுக்குள் எந்தப் பாசமும் கிடையாது!

`எம்.பி ஆகவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு' எனக் கூறிவந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமாரின் ஆசை, இந்தத் தேர்தலில் நிறைவேறியிருக்கிறது. மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனை இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள வசந்தகுமார், நாடாளுமன்றம் செல்ல ஆவலாக இருக்கிறார். இந்தச் சூழலில், அவருடைய வெற்றி முதல் அண்ணன் மகள் தமிழிசையின் செயல்பாடுவரை குறித்து சில கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். அனைத்துக்கும் சளைக்காமல் பதிலளித்தார். 

``பொன்.ராதாகிருஷ்ணனைத் தோற்கடித்தது எப்படி?"

``தொகுதி மக்களுக்கு அவர் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களைத்தான் செய்திருந்தார். மக்கள் எதிர்பார்த்த நல்ல திட்டங்கள் பலவற்றையும் அவர் செய்யவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி வர்த்தகத் துறைமுகம் கொண்டுவருவதில் உறுதியாக இருந்தார். அதை மக்கள் விரும்பவில்லை. ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கொடுத்த வாக்குறுதியையும் அவர் செய்யவில்லை. அவர்மீது மக்களுக்கிருந்த எதிர்ப்பு அலை, எனக்கு வெற்றி அலையைக் கொடுத்திருக்கிறது".

வசந்தகுமார்

`` `எம்.பி ஆகவேண்டும் என்பது என் நீண்டகால லட்சியம்' என்று சொல்லிவந்தது எதனால்?"

``இருமுறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளேன். ஆனால், எம்.பி-யாக வேண்டும் என அதிகம் ஆசைப்பட்டேன். இந்தியாவின் ஒட்டுமொத்த நாடாளுமன்றப் பிரதிநிதிகளும் ஒன்றுகூடும் இடம். பல மாநிலப் பிரதிநிதிகளுடன் பழகவும், இணைந்து செயல்படவும் விரும்புகிறேன். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் தொகுதி மக்களுக்கு அதிகளவில் உதவி செய்யலாம். எனவேதான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆசைப்பட்டேன்". 

``புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் நீங்கள்தான் மூன்றாவது பெரும் கோடீஸ்வரர். இதுகுறித்து உங்கள் கருத்து..."

``எத்தனை வருட உழைப்பினால் இது சாத்தியமானது எனப் பார்க்கவேண்டும். ஏறத்தாழ அரை நூற்றாண்டாகத் தொழில் செய்துவருகிறேன். கோடீஸ்வரன் என்பதைவிட, நாடாளுமன்றத்தில் நான் செயல்படும்விதம்தான் முக்கியமானது. குறிப்பாக, என் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் ஒருபகுதியைச் சமூகப் பணிகளுக்குச் செலவிடுகிறேன்".

வசந்தகுமார்

``உங்கள் கூட்டணி தமிழகத்தில் வென்றாலும், காங்கிரஸ் கட்சி பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறதே..."

``எங்களுக்கே புரியவில்லை. இவ்வளவு பெரிய தோல்வியை எதிர்பார்க்கவில்லை. அதற்கான காரணங்கள் குறித்து காரிய கமிட்டி விவாதித்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். இதுபோன்ற பெரும் தோல்வி, இனிமேல் ஏற்படாமல் இருக்கும் வகையில் உழைக்கப்போகிறோம்."

``காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவதாகச் சொல்லியிருக்கிறாரே..."

``ராகுல் காந்தியை விட்டால் எங்களுக்கு வேறு தலைவர் கிடையாது. அவர் சுறுசுறுப்பாக நாடு முழுக்கக் களப்பணியாற்றியிருக்கிறார். இனிதான் களப்பணி அதிகம் செய்யப்படவேண்டும். அவரின் ராஜினாமாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவரைத் தவிர, வேறு ஒரு தலைவரை நான் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டேன்."

தமிழிசை

``காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி கிடைக்காததால், உங்களுக்கு வருத்தமிருக்கிறதா?"

``எங்கள் கட்சியில் நீண்டகாலமாகப் பணியாற்றும் பிரபலமான தலைவர்கள் எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கக்கூடும். எனக்கும் இருக்கிறது. ஆனால், எங்கள் கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவெடுக்கவேண்டும். யாரைத் தலைவராக நியமித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அந்தப் பதவிக்கான தகுதியை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். தலைவர் பதவிக்கு வருவதற்குத் தடையாக என்னிடம்கூட ஏதாவது குறையிருக்கலாம். அதை நான் சரிசெய்துகொள்ள வேண்டும்."

``சாதாரண ஒரு சேல்ஸ்மேனாகத் தொடங்கி, இன்று பெரிய தொழிலதிபராக மாறியிருக்கிறீர்கள். இதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு..."

``வெறும் உழைப்பு மட்டும்தான். கடந்த 48 வருடங்களாக என் நினைவு முழுக்கத் தொழிலில்தான் இருந்தது. அதையே நினைத்து, அதற்காக உழைத்து இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இதன் பின்னாலிருக்கும் சிரமங்களெல்லாம் பெரிய கதை. நிறைய பிரச்னைகள், ஏற்றத்தாழ்வுகள், தூங்காத இரவுகள், அவமானங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டுதான் தொழிலில் வெற்றிபெற்றிருக்கிறேன். இது போதாது. இன்னும் உயர வேண்டும். அதற்குப் புத்துணர்ச்சியுடன் வேலை செய்துகொண்டிருக்கிறேன்".

``உங்கள் அண்ணன் மகள் தமிழிசையுடன், தற்போதும் பாசம் தொடர்கிறதா?"

``என் மடியில் தவழ்ந்த குழந்தை தமிழிசை. அந்த மகள் மீது அப்போது எனக்கு மிகுந்த பாசம் இருந்தது. ஆனால், திருமணத்துக்குப் பிறகு  தமிழிசை பி.ஜே.பி-யில் இணைந்ததால், எங்களுக்கும் அவருக்குமான தொடர்பைத் துண்டித்துக்கொண்டோம். நாங்கள் என்றுமே காங்கிரஸ் கட்சியை விட்டுக்கொடுக்கமாட்டோம். அதனால், எங்கள் எதிரிக்கட்சியைச் சேர்ந்த தமிழிசையின் மீதான கோபமும் எங்களுக்குக் குறையாது. விமான நிலையத்தில் எப்போதாவது தமிழிசையைச் சந்திப்பேன். மற்றபடி தமிழிசையுடன் பாசமும், நட்பும் நான் வைத்துக்கொள்வதில்லை. எங்கள் இருவரின் கட்சியும் வேறு. தமிழிசை என் மகளாக இருந்தாலும், அவரை எதிர்க்கட்சியைச் சார்ந்தவராகவே பார்ப்பேன்".    

``மாநில பி.ஜே.பி. தலைவராகத் தமிழிசையின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து..."

``தலைவர் என்றாலும், எந்த ஒரு விஷயத்திலும் அளவோடு அவர் பேச வேண்டும். சில நேரங்களில் வரம்பு மீறி, நிலைமீறிப் பேசுகிறார். அரசியல்ரீதியாகப் பேசினாலும்கூட, ஓர் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றிக் கருத்து கூறும்போதும் அவரின் வயது, அரசியல் அனுபவத்துக்குத் தமிழிசை மதிப்பளிக்க வேண்டும். அதனால்தான் சமூக வலைதளங்களில்கூட தமிழிசை மீதான விமர்சனங்கள் அதிகம் வருகின்றன". 

வசந்தகுமார்

``நீங்கள் தேர்தலில் வெற்றிபெற்றால், 'உங்கள் ஷோரூமுக்கு வரும் மக்களுக்குப் பத்தாயிரம் பணம் தரப்படும்' என்ற செய்தி வேகமாகப் பரவியதே..."

(சிரிக்கிறார்) `` `நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் 72 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்' என ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதைத்தான் யாரோ திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள். `எம்.பி வசந்தகுமார் கடைக்குச் சென்று பணம் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று யாரோ வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை