`எனக்குத் தெரிந்த நேசமணி..!'- வரலாற்றைச் சொல்லும் நாஞ்சில் சம்பத் | nanjil sambath speaks about pray for nesamani trend

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (30/05/2019)

கடைசி தொடர்பு:17:37 (30/05/2019)

`எனக்குத் தெரிந்த நேசமணி..!'- வரலாற்றைச் சொல்லும் நாஞ்சில் சம்பத்

ட்விட்டர் தளத்தில் உலகளவில் இப்போதைய டிரெண்டிங்கில் பிரதமராக மோடி பதவியேற்பது குறித்த செய்தியைத் தாண்டி நடிகர் வடிவேலுவின் ப்ரண்ட்ஸ் பட கதாபாத்திரமான `நேசமணி' முன்னேறியுள்ளார். இணைய உலகில் இரண்டு நாள்களாக நடக்கும் இந்த டிரெண்ட் குறித்து நம்மூர் அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்?. இதுகுறித்து நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம்.

நாஞ்சில் சம்பத்

``'வடவேங்கடம் முதல் தென்குமரி' எனத் தொடங்கும் தொல்காப்பியன் வரிகளுக்கு வடிவம் தந்த வரலாற்று நாயகர் எங்கள் ஊரைச் சேர்ந்த `மார்ஷல்' நேசமணி. நாஞ்சில் மண்ணின் விடுதலைக்காக விலைமதிக்க முடியாத செயல்கள் செய்தவர் அவர். காங்கிரஸ் பேரியக்கம் கன்னியாகுமரி மாவட்டத்தை இணைக்க உதவவில்லை என்பதற்காக அதிலிருந்து பிரிந்து 'தமிழ்நாடு காங்கிரஸ்' என்றொரு கட்சியைத் தொடங்கி அதன் மூலம் அறப்போரை நடத்தினார். அடக்குமுறைச் சட்டங்களை ருசிபார்த்து, ஆபத்துகளைக் கடந்து, குமரிக் கண்டம் தமிழகத்துடன் இணைய எல்லா வகையிலும் காரணமாக இருந்தார். 'நேசமணி' என்றால் என் நினைவுக்கு வருவதெல்லாம் இந்த நேசமணிதான்'' என்றவரிடம், வடிவேலு..என்றதும்,

வடிவேலு

'தமிழ் சினிமாவில்  வடிவேலுவின் இடத்தை யாராலும், நிரப்ப முடியாது. தமிழ்நாட்டு மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் அவர்' என்றார். `ப்ரண்ட்ஸ்' படம் பார்த்தீர்களா' என்றால், ``நான் படத்தைப் பார்த்ததில்லைங்க. எனக்கு அதெல்லாம் வேலையே கிடையாது தம்பி' என முடித்துக் கொண்டார்.

ராதாரவி

நடிகரும் அரசியல்வாதிமான ராதாரவியும் 'ஃப்ரண்ட்ஸ்' படத்தில் நடித்தவர். நேசமணியான வடிவேலுவுக்கு பெயின்ட் அடிக்கும் கான்ட்ராக்டைக் கொடுப்பதே அவர்தான். அவரிடம் கேட்டால், ``ஐயோ, ரெண்டு நாளா எல்லாருமே இதையேதான் கேக்குறாங்க. இது என்னய்யா பெரிய அக்கப்போரா இருக்கு?. எனக்கு நேசமணின்னா யாருன்னு தெரியவே தெரியாதுங்க'' என்றார்