இரண்டு தேர்தல்கள்... இரண்டு முறை... அறிவாலயத்தில் நசுங்கிய பா.ம.க மாம்பழம்! | After parliament election result, PMK's symbol mango crushed by DMK men in Arivalayam

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (30/05/2019)

கடைசி தொடர்பு:17:05 (31/05/2019)

இரண்டு தேர்தல்கள்... இரண்டு முறை... அறிவாலயத்தில் நசுங்கிய பா.ம.க மாம்பழம்!

2009 எம்.பி. தேர்தலில் அறிவாலயத்தில் பா.ம.க-வின் சின்னமான மாம்பழம் நசுக்கப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து இப்போது அதே காட்சிகள் அதே அறிவாலயத்தில் அரங்கேறியிருக்கின்றன.

இரண்டு தேர்தல்கள்... இரண்டு முறை... அறிவாலயத்தில் நசுங்கிய பா.ம.க மாம்பழம்!

ரு கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை இன்னொரு கட்சி அலுவலகத்தில் கலங்கப்படுத்திய வரலாறு ஒருமுறை அல்ல... இரண்டு முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. 2009 எம்.பி. தேர்தலில் அறிவாலயத்தில் பா.ம.க-வின் சின்னமான மாம்பழம் நசுக்கப்பட்டது. பத்தாண்டுகள் கழித்து இப்போது அதே காட்சிகள் அதே அறிவாலயத்தில் அரங்கேறியிருக்கின்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணியில் அங்கம் வகித்துத் தேர்தலை எதிர்கொண்ட பா.ம.க, போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் படுதோல்வியடைந்தது. அ.தி.மு.க மட்டும் ஒரேயொரு தொகுதியில் வென்றது. தேர்தல் முடிவுகள் வெளியானபோது அறிவாலயத்தில் திரண்டிருந்த தி.மு.க தொண்டர்கள், பா.ம.க-வின் தோல்வியைக் கொண்டாடும் வகையில், அந்தக் கட்சியின் சின்னமான மாம்பழத்தைக் காலில் போட்டு மிதித்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதுபோன்ற காட்சிகள் பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் அரங்கேறியது. அந்த ஃபிளாஷ்பேக்கை திரும்பிப் பார்ப்போம்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் கடைசிநேரத்தில் அதிரடியாக இணைந்தது பா.ம.க. 2006 சட்டசபைத் தேர்தலில் அந்தக் கூட்டணியில் அங்கம்வகித்த ம.தி.மு.கவுக்குக்கூட தொகுதிப் பங்கீடு முடிவடையாத நிலையில், 7 தொகுதிகளை பா.ம.க. வாங்கியது. அதோடு, கூடுதலாக ராஜ்யசபா இடத்துக்கும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இதே ஃபார்முலாவைத்தான் இந்தத் தேர்தலிலும் மேற்கொண்டுள்ளது அந்தக் கட்சி. `தங்கள் அணிக்குப் பா.ம.க வரும்' என்கிற நம்பிக்கையில் மண் விழுந்ததால், பா.ம.க. மீது கோபத்தைக் காட்டியது தி.மு.க. இந்தத் தேர்தலின்போதும் அதேநிலைதான். ``சூட்கேஸ் மணி'' என அன்புமணியைக் கடுமையாக விமர்சித்தார் ஸ்டாலின்.

மாம்பழம்

2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளிலும் பா.ம.க தோற்றது. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் வென்றது. இடதுசாரிகள் தலா மூன்று தொகுதிகளில் போட்டியிட்டு, தலா ஓர் இடத்தில் ஜெயித்தன. ஆனால், பா.ம.க. ஓர் இடத்தில்கூட வெல்ல முடியவில்லை. காரணம் பா.ம.க-வைத் தோற்கடிக்க தி.மு.க கடுமையாகக் களமாடியதுதான். அந்தத் தேர்தலில் பா.ம.க படுதோல்வியடைந்ததும் அறிவாலயத்தில் பா.ம.க-வின் சின்னமான மாம்பழத்தைக் காலால் மிதித்து, வெறியைக் காட்டினார்கள் உடன்பிறப்புகள். அரக்கோணம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன், பா.ம.க. வேட்பாளர் வேலுவை வீழ்த்தினார். அரக்கோணம் தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட்ட வாலாஜாபேட்டை அண்ணா கலைக் கல்லூரிக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 50 கிலோ மாம்பழங்களைச் சாலையில் கொட்டி, தி.மு.க-வினர் காலால் மிதித்து நசுக்கினார்கள்.  

அந்தத் தேர்தலில் படுதோல்வியடைந்த ராமதாஸ், ``மிகப்பெரிய சதி செய்து பா.ம.கவைத் தோற்கடித்தனர்’’ எனக் கொதித்தார். அன்றைக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராமதாஸ், `` `துவண்டு போகமாட்டேன்; புதிதாகப் போராடுவேன்’ என்று வாஜ்பாய் ஒருமுறை கூறியிருக்கிறார். அதைக் கொஞ்சம் மாற்றித் துவண்டு போகமாட்டோம், புதிதாகப் போராடுவோம், முன்பைவிட வேகமாகச் செயல்படுவோம் என்று கூறுகிறேன். எம்.பி. தேர்தலில் தி.மு.க. பெற்றுள்ள வெற்றி முறையானது அல்ல. நேர்மையானது அல்ல. பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வெற்றி உண்மையானது அல்ல. முறைகேடுகளால் பா.ம.க சந்தித்துள்ள இந்தச் சரிவு தற்காலிகமானதுதான். அந்தச் சரிவிலிருந்து பா.ம.க மீண்டு எழும். சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பா.ம.க சின்னமான மாம்பழத்தை ஒரு லாரி நிறைய கொண்டுவந்து, காலால் மிதித்துக் கொண்டாடி உள்ளனர். அறிவாலயத்திலும் அதேபோல செய்துள்ளனர். அதுதான் அண்ணா கற்றுக்கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடா?'' எனக் கேள்வி எழுப்பியதுடன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதன்பிறகு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ``இந்தத் தேர்தலில் ஜனநாயகம் தோற்றிருக்கிறது; பணநாயகம் வென்றிருக்கிறது. 'வேறு யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. பா.ம.க வேட்பாளர்களை மட்டும் இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்; எதை வேண்டுமானாலும் செய்து இந்தக் காரியத்தைக் கச்சிதமாக முடிக்க வேண்டும்' என்ற கட்டளையுடன் பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க அமைச்சர்களும், ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர்களும் பண மூட்டைகளுடன் களமிறக்கப்பட்டனர். பா.ம.க போட்டியிட்ட தொகுதிகளில் பணம் கொடுத்தார்கள் என்று சொல்வது மிகச் சாதாரணம். பணத்தை அள்ளி வீசி விதைத்திருக்கிறார்கள். விதைத்த அளவுக்கு அறுவடை செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முறைகேடுகளைச் செய்து ஆளுங்கட்சியினர் தட்டிப் பறித்துள்ள இந்த வெற்றி உண்மையானதல்ல. அதிக விலைகொடுத்து வாங்கப்பட்ட இந்த வெற்றி நிலையானது அல்ல'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மாம்பழம்

2009 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தமிழகத்தில் தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்தது. அதனால்தான், `தி.மு.க அதிகாரத்தைப் பயன்படுத்தி வென்றது' என்றார் ராமதாஸ். அந்த அறிக்கையில் ராமதாஸ் இன்னொரு கருத்தையும் பதிவு செய்தார்., ``வாழ்க்கை ஒரு சக்கரம். இன்று மேலே இருப்பது நாளை கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். பல்வேறு முறைகேடுகளைச் செய்து ஆளும் கட்சி பணபலத்தால் பெற்றுள்ள இந்த வெற்றியினால் ஏற்பட்டுள்ள தற்காலிகத் தோல்வியைக் கண்டு பா.ம.கவினர் சோர்ந்துவிட மாட்டார்கள். நாளைய வெற்றிக்கு இதைப் படிக்கட்டுகளாக எடுத்துக்கொண்டு, `பீனிக்ஸ்’ பறவையைப் போல அரசியலில் பா.ம.க மீண்டு எழும்; வெற்றிநடை போடும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், பீனிக்ஸ் பறவையாக எழவில்லை. அதன்பிறகு நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அதன்பின் நடைபெற்ற 2016 சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது பா.ம.க. இப்போது முடிவடைந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் படுதோல்வியடைந்து ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை