``ஜெயலலிதாவின் 44% வாக்குகளை 18%ஆக குறைத்ததே எடப்பாடி அரசின் சாதனை!" - சி.ஆர்.சரஸ்வதி | Actress C R Saraswathi talks about AMMK's failure reason and new plan

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (30/05/2019)

கடைசி தொடர்பு:20:24 (30/05/2019)

``ஜெயலலிதாவின் 44% வாக்குகளை 18%ஆக குறைத்ததே எடப்பாடி அரசின் சாதனை!" - சி.ஆர்.சரஸ்வதி

"அம்மா 37 எம்.பி-க்களைக் கொடுத்திருந்தார். தற்போது பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க வெறும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. இதனால் அ.தி.மு.க-வின் ஆட்சி தொடர்வதை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை."

``ஜெயலலிதாவின் 44% வாக்குகளை 18%ஆக குறைத்ததே எடப்பாடி அரசின் சாதனை!

புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் முனைப்புடன் தேர்தலை எதிர்கொண்ட அ.ம.மு.க-வின் தோல்வியை அக்கட்சியின் பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன் `டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொண்டார். ஆனால், அக்கட்சியினர் பலரும் துவண்டுபோயிருக்கிறார்கள். அதில் ஒருவர் அ.ம.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான நடிகை சி.ஆர்.சரஸ்வதி. அவரிடம் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசினோம்.

`` 'உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்' என்று கூறிவந்தீர்கள். உங்கள் கட்சிக்குப் பெரிய தோல்வி கிடைத்திருக்கிறதே..."  

``பல வாக்குச்சாவடிகளில் ஒரு ஓட்டுகூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. அங்கு எங்கள் கட்சியினரில் ஒன்றியம் முதல் நகரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருவர்கூடவா எங்களுக்கு வாக்களித்திருக்கமாட்டார்கள்? ஒருவேளை அப்படி நடந்திருந்தால்கூட, எங்கள் பூத் ஏஜென்டுகளில் ஒருவர் ஓட்டுகூட எங்களுக்கு எப்படிக் கிடைக்காமல் போகும்? மாநில அ.தி.மு.க ஆட்சி மற்றும் மத்திய பி.ஜே.பி அரசு மீதான எதிர்ப்பு அலை தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலித்திருந்தது. அப்போது சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க 9 இடங்களில் வென்றது எப்படி? எதிர்ப்பு அலை என்றால், எல்லா இடங்களிலும் ஒரேமாதிரிதானே பிரதிபலித்திருக்கவேண்டும்? பெரியகுளம் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிகள் அ.தி.மு.க-வின் கோட்டை. அவ்விரு தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், அத்தொகுதிகள் உள்ளடங்கிய தேனி நாடாளுமன்றத் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க வெற்றிபெற்றது எப்படி? 

ஒருவேளை, இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் நினைத்திருந்தால், இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும்தானே அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கவேண்டும்? தேர்தல் முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. சில வாக்குப்பதிவு இயந்திரங்களில் சீல் உடைக்கப்பட்டிருந்ததாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புகார் கூறியிருந்தார். அதற்கும் உரிய விளக்கம் இதுவரை வரவில்லை. இதெல்லாம் பெரிய சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்புகிறது. அதனால் எங்கள் தோல்வி உண்மையானதல்ல." 

சி.ஆர்.சரஸ்வதி

``தற்போதைய அ.தி.மு.க ஆட்சி தொடரப்போவது குறித்து உங்கள் கருத்து..."

``நாளைக்கு என்ன நடக்கும் என்பதே யாருக்கும் தெரியாது. அதற்குள் முழுமையாக இரண்டு ஆண்டுகளுக்கு இந்த அ.தி.மு.க ஆட்சி தொடரும் என எப்படிச் சொல்ல முடியும்? 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கத் தீர்ப்பு இன்னும் வரவில்லையே. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக அரசியலில் நிச்சயம் அதிரடி நிகழ்வுகள் நடக்கக்கூடும். அதனால், இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஒருவேளை, இரண்டு ஆண்டுகள் கழித்து தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றால், அதற்குள் சின்னம்மா (சசிகலா) சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவார். இப்போதைய சூழல், அப்போது நிச்சயம் இருக்காது. எதுவும் நடக்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா இருந்தபோது 44 சதவிகித வாக்குகளைப் பெற்றார். இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் 18 சதவிகித வாக்குகளை மட்டுமே அ.தி.மு.க பெற்றிருக்கிறது. அம்மாவின் வளர்ச்சியைக் குறைத்ததுதான் தற்போதைய அ.தி.மு.க அரசின் சாதனை. அம்மா 37 எம்.பி-க்களைக் கொடுத்திருந்தார். தற்போது பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க வெறும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. இதனால் அ.தி.மு.க-வின் ஆட்சி தொடர்வதை நாங்கள் பெரிதாக நினைக்கவில்லை. இச்சூழலிலும் நாங்கள் மூன்றாவது இடம்பிடித்திருக்கிறோம். எனவே, மக்களிடம் எங்கள் கட்சிக்கு ஆதரவில்லை எனச் சொல்ல முடியாது."

சி.ஆர்.சரஸ்வதி

``தற்போதைய தோல்வியால் துவண்டுவிட்டீர்கள்போல..."

``மிகப் பெரிய வெற்றியைப் பெறுவோம் என நினைத்தோம். களத்தில் மக்களைச் சந்தித்தபோது மக்களுக்கு எங்கள் மேல் அதிகளவில் ஆதரவு இருந்தது. ஆனால், அந்த ஆதரவு வாக்குகளில் பிரதிபலிக்காமல் போனதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் நான் இயல்பு நிலையில் இல்லை. தேர்தல் முடிவுகளால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் கட்சியின் தோல்வி என்னைக் கவலையில் ஆழ்த்தியது. இயல்பு நிலைக்குத் திரும்ப எனக்குச் சில தினங்கள் தேவைப்பட்டன. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் தரப்பு நியாயமான கோரிக்கைகளுக்குக்கூடத் தேர்தல் ஆணையம் சரியான பதிலைச் சொல்லவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் எழுப்பும் சந்தேகங்கள் பற்றித் தேர்தல் ஆணையம் எங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும். அது, அவர்களின் கடமை. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். அரசியலில் யாருக்குமே தொடர் வெற்றியும், தோல்வியும் சாத்தியமில்லை. ஜெயலலிதா அம்மாவே மிகப் பெரிய வெற்றிபெற்றிருக்கிறார். தோல்வியும் அடைந்திருக்கிறார். அவரிடம் பாடம் படித்தவர்கள் நாங்கள். அதனால் லட்சியம் நிறைவேறும்வரை எங்கள் போராட்டம் தொடரும். வெற்றி கிடைக்கும்வரை எங்கள் பயிற்சி குறையாது."


டிரெண்டிங் @ விகடன்