தி.மு.க கூட்டணி வெற்றி... ஸ்டாலின் காரணம் இல்லையா? | Can Stalin take credit for the DMK's victory?

வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (31/05/2019)

கடைசி தொடர்பு:19:58 (31/05/2019)

தி.மு.க கூட்டணி வெற்றி... ஸ்டாலின் காரணம் இல்லையா?

"காமராஜரின் இடத்தை கே.எஸ்.அழகிரியால் பிடிக்க முடியாது. எம்.ஜி.ஆரின் இடத்தை எடப்பாடியால் நிரப்பமுடியாது. அதேபோலத்தான், கருணாநிதிக்குரிய இடம் என்பது அவருக்கு மட்டுமே உரித்தான இடம்."

தி.மு.க கூட்டணி வெற்றி... ஸ்டாலின் காரணம் இல்லையா?

`கரிஸ்மேட்டிக்’ தலைவர்கள் பற்றிய விவாதங்கள், ஊடகங்களில் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், யாரெல்லாம் `கரிஸ்மேட்டிக் லீடர்’கள் என்று பட்டியலிட்டார். அதாவது, பிரதமர் மோடியை, `கரிஸ்மேட்டிக்’ தலைவர் என்று சொல்ல முனைந்த ரஜினி, அதில் வேறு சில தலைவர்களின் பெயர்களையும் சேர்த்துக் குறிப்பிட்டார். `கரிஸ்மேட்டிக்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு `கவர்ச்சிகரமான’, `வசீகரமான’, `ஆளுமையான’ என்று வைத்துக்கொள்ளலாம். அதில் ஸ்டாலின் பெயர் குறிப்பிடப்படாததால் வருத்தத்தில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்.

ரஜினி சொல்ல வந்தது…

``ஒரு தலைவனை வைத்துத்தான் ஒரு கட்சிக்கு வெற்றி கிடைக்கும். இந்தியாவில் நேருவுக்குப் பிறகு இந்திரா காந்தி ஒரு கரிஸ்மேட்டிக் லீடர். அதன் பிறகு ராஜீவ் காந்தி ஒரு கரிஸ்மேட்டிக் லீடராக வந்திருக்க வேண்டியவர். ஆனால், காலம் அவரைப் பலிகொடுத்துவிட்டது. அதன் பிறகு வாஜ்பாய் ஒரு `கரிஸ்மேட்டிக் லீடர்' என்று சொல்லிக்கொண்டே வந்த ரஜினி, கடைசியாக மோடியின் பெயருடன் முடித்துக்கொண்டார்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில்… காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை கரிஸ்மேட்டிக் லீடர்கள் என்று குறிப்பிட்டார். ரஜினியின் பார்வையில், ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழகத்தில் வேறு யாரும் கரிஸ்மேட்டிக் லீடர் இல்லை.

ஸ்டாலின்

``ஒரு தலைவரால்தான் அவர் சார்ந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கும்” என்பது ரஜினியின் கருத்து. அந்த வகையில், 303 இடங்களைப் பிடித்து பி.ஜே.பி பெற்ற பிரமாண்டமான வெற்றி என்பது, ``மோடிக்குக் கிடைத்தது”. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 37 இடங்களில் தி.மு.க கூட்டணி வென்றுள்ளது. இதன் மூலமாக, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க உருவெடுத்துள்ளது. அதாவது, கடந்த தேர்தலில் அ.தி.மு.க பெற்ற மிகப்பெரிய வெற்றியால், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற இடத்தை அ.தி.மு.க பிடித்தது. அந்த இடத்தை இப்போது தி.மு.க பிடித்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியைச் சாத்தியப்படுத்தியவர், தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஆனால், அதை அங்கீகரிக்க மறுக்கிறார் ரஜினி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

``இந்தியா முழுவதும் பி.ஜே.பி பெற்ற வெற்றிக்கு மோடிதான் காரணம் என்றால், தமிழகத்தில் தி.மு.க கூட்டணி பெற்ற வெற்றிக்கு ஸ்டாலின்தானே காரணம்? அதை ஏற்க மனமில்லாத ரஜினிகாந்த்... ``ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன், எதிர்க்கட்சிகளின் பிரசாரம் ஆகியவற்றால் கிடைத்த வெற்றி” என்கிறார். இது என்ன லாஜிக்? புரியவே இல்லை என்று உஷ்ணப்படுகிறார்கள் உடன்பிறப்புகள். 

இன்றைக்கு இந்தியாவே தமிழ்நாட்டை உற்றுப் பார்க்கிறது. காரணம், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதியில் மோடி அலை வீசியபோது, தமிழகத்தில் மட்டும் மோடி எதிர்ப்பு அலை வீசியது. தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்கு முக்கியமான ஒரு காரணியைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏழு கட்சிகள் கொண்ட தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்னதாகவே, தோழமைக் கட்சிகளாக அவற்றை அரவணைத்துச் சென்றதாக இருக்கட்டும், தொகுதிப் பங்கீடுகளை சுமுகமான முறையில் முடித்ததாகட்டும், சரியான தேர்தல் வியூகங்கள் வகுத்ததாகட்டும்... இவை எல்லாவற்றிலும் ஸ்டாலினின் முதிர்ச்சியான அணுகுமுறை வெளிப்பட்டதை யாராலும் மறுக்கமுடியாது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திய போராட்டம், காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் தடுப்பணை கட்டுவதற்கான அனுமதியை ரத்துசெய்யக் கோரிய போராட்டம் எனப் பல போராட்டங்களை காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து தி.மு.க நடத்தியது. இது அப்படியே தேர்தல் கூட்டணியாகப் பரிணமித்தது. பலம் வாய்ந்த ஒரு கூட்டணியைக் கட்டுவதில் ஸ்டாலின் வெற்றிபெற்றார். அந்த வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது.

`எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீடு’ (Index of Opposition Unity) என்கிற ஒரு பதத்தை, தேர்தல் பகுப்பாய்வு வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தக் குறியீடு, இந்த முறை தமிழகத்தில் வலுவாக இருந்தது. அதுதான் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. தமிழகத்தைத் தாண்டி பார்த்தால், `எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக் குறியீடு’ என்பது பிற மாநிலங்களில் குறைவாகவே இருந்தது. 

ராகுல்காந்தி

உ.பி-யில் தன்னுடைய மெகா கூட்டணியில் காங்கிரஸைச் சேர்த்துக்கொள்ள மாயாவதி முன்வரவில்லை. மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மாயாவதியின் கட்சியை காங்கிரஸ் சேர்த்துக்கொள்ளவில்லை. டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லை. சேர்த்திருந்தால் டில்லியில் மட்டுமல்ல, பஞ்சாப், ஹரியானாவிலும் சில சீட்டுகளை காங்கிரஸ் அள்ளியிருக்கும். மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் பி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளிடம் கூட்டணி வைத்துக்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் முன்வந்தன. ஆனால், இடதுசாரிகளுக்கு ஒரு சீட் தருவதற்குக்கூட எந்தக் கட்சியும் தயாராக இல்லை. இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் அணுகுமுறையைப்போல, மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளும் அணுகியிருந்தால் இவ்வளவு பெரிய வெற்றியை பி.ஜே.பி-யால் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். பலமான கூட்டணியை உருவாக்கி பிரமாண்டமான வெற்றியை அறுவடை செய்ததில்தான், பல்வேறு மாநிலத் தலைவர்களுக்கு மத்தியில் ஸ்டாலின் தனித்து நிற்கிறார்.

முதன் முதலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தவர், ஸ்டாலின். அதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் தமிழகத்தின் பக்கம் திரும்பியது. பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்து வந்ததன் மூலமாக தேசியச் செய்திகளில் இடம்பிடித்தார். தேகவுடா, குமாரசாமி, மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கேஜ்ரிவால், சரத்பவார், அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடத்திய பிரமாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைக்கப்பட்டார். இப்படியாக, அகில இந்திய அளவில் ஸ்டாலின் கவனம் பெற்றுவந்தார். இப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றியின் மூலம், தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை.

நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ``இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்ற பின்னும் தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று பலரும் வாதம் செய்வது, ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையையே காட்டுகிறது. ரஜினியும் இந்தக் கருத்தை இனியும் வைத்திருப்பாரென்றால் அவருக்கு அரசியலைக் கணிக்கத் தெரியவில்லை என்றுதான் அர்த்தமாகிறது. காமராஜரின் இடத்தை கே.எஸ்.அழகிரியால் பிடிக்க முடியாது. எம்.ஜி.ஆரின் இடத்தை எடப்பாடியால் நிரப்பமுடியாது. அதேபோலத்தான், கருணாநிதிக்குரிய இடம் என்பது அவருக்கு மட்டுமே உரித்தான இடம். அவர்களின் காலகட்டமும், பின்னணியும் வேறானவை. ஸ்டாலின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், `ஒரு தலைவனை வைத்துத்தான் ஒரு கட்சிக்கு வெற்றி கிடைக்கும். அந்த வகையில், அது மோடிக்குக் கிடைத்த வெற்றி' என்பது ரஜினியின் வாதமாக இருக்குமானால், ஸ்டாலினை வைத்துதானே தி.மு.க-க்கு வெற்றி கிடைத்திருக்கும். ஸ்டாலினுக்கு ரஜினி எதிர்பார்க்கும் கவர்ச்சியோ ஈர்ப்போ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு வெற்றிகரமான தலைவர் என்பதை கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே நிரூபித்து விட்டார். இப்போது அடுத்த இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறார். அவரது அணுகுமுறையும் ஓயாத உழைப்பும்தான் இந்த மாபெரும் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது. யார் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை. இதை அங்கீகரிக்க மறுப்பதை உளவியல் சிக்கல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்றார்.

மோடியை `கரிஸ்மேட்டிக் லீடர்’ என்று பாராட்டிய ரஜினி, ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் மட்டும் சொன்னதில் தி.மு.க நிர்வாகிகள் எல்லோருமே வருத்தத்தில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஸ்டாலினுக்கு தலைவனுக்கான பண்பும் திறனும் இருக்கிறதா இல்லையா என்பதற்கு ரஜினி பதில் சொல்ல வேண்டியதில்லை, காலம் பதில் சொல்லும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்