ஆறு மாதம் கழித்து மகனுக்கு அமைச்சர் பதவி! – ஓ.பி.எஸ் போடும் புதுக் கணக்கு | OPS has different plans to get minister post for his son

வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (01/06/2019)

கடைசி தொடர்பு:16:22 (01/06/2019)

ஆறு மாதம் கழித்து மகனுக்கு அமைச்சர் பதவி! – ஓ.பி.எஸ் போடும் புதுக் கணக்கு

``சீனியர்கள் அவ்வளவு பேர் இருக்கிறோம். நேற்று வந்த சின்னப்பயலுக்கு அமைச்சர் பதவியா?” எனச் சத்தமாகவே பிரச்னைகளைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டனர்.

ஆறு மாதம் கழித்து மகனுக்கு அமைச்சர் பதவி! – ஓ.பி.எஸ் போடும் புதுக் கணக்கு

.பி.எஸ். மகனும், அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.பியுமான ரவீந்திரா நாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாததற்கு காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

எந்தவொரு தந்தைக்கும் இருக்கும் ஆசைதான் தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இருக்கிறது. பெரியகுளம் நகராட்சித் தலைவராக தன் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்தடுத்து பதவிகள் கிடைக்கவே ஜெயலலிதா இருந்தபோதே கோட்டை வரை சென்றார். மூன்று முறை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவர் எனப் பெயரெடுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்குத் தன்னுடைய மூத்த மகன் ரவீந்திரநாத் குமாரை எப்படியாவது கட்சியில் நல்ல இடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பது நீண்ட நெடுங்கால ஆசை. அந்த ஆசை தற்போது ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே நபர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்தான். தேனி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி கூட்டணி அமைச்சரவையில் அ.தி.மு.க சார்பில் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று பி.ஜே.பி மேலிடம் கறாருடன் கூறிவிட்டது. அ.தி.மு.க-வில் ஒரே எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்ட தன் மகனுக்கு அமைச்சர் பதவியேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பரவலாகத் தகவல்கள் அடிபட்ட நிலையில், பதவியேற்பு விழா தொடங்குவதற்கு சிறிதுநேரத்திற்கு முன் அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது. `கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டார் ரவீந்திரநாத் குமார்’ எனப் பல்வேறு ஊடங்களிலும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், அந்தப் பரபரப்பு ஏதுமில்லாமல் சைலன்டாக இருக்கிறார்கள், தந்தையும், மகனும். அவர்களின் மௌனத்திற்குக் காரணம் என்ன என்று அ.தி.மு.கவில் தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம். அதில் சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்தன. அதை அறிந்துகொள்ளும் முன், தன் மகனை எப்படியெல்லாம் அரசியலுக்குள் கொண்டுவர எத்தனித்தார் ஓ.பி.எஸ் என்பது குறித்த சின்னதொரு ஃபிளாஷ் பேக்...

மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்?

கட்சிப் பதவியைப் பறித்த ஜெயலலிதா:

`வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துவருகிறார்கள்' எனக் கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து, அப்போதைய அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உட்பட ஐந்துபேரை வீட்டுச் சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. அந்தக் காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த கட்சிப் பதவிகள் அனைத்தையும் பறித்தார். அதில், தேனி மாவட்ட அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் பதவியில் இருந்த ரவீந்த்ரநாத் குமாரின் பதவியும் பறிபோனது. பதவி பறிக்கப்பட்டதும், சினிமா ஃபைனான்ஸ், வெளிநாட்டில் ரெஸ்டாரன்ட் என முழுவதுமாக பிசினஸ் பக்கம் சென்றுவிட்ட ரவீந்திரநாத், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அ.தி.மு.க பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, மீண்டும் கட்சிக்குள் வர நேரம் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு, தன் தந்தை சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ஜெ. சமாதியில் தர்மயுத்தம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ``எல்லாம் நன்மைக்கே, அமைதியாக இரு, உனக்கான நேரம் வரும்!” என்று மகனை அமைதியாக்கினார் பன்னீர்.

கட்சிக்குள் ரவியின் என்ட்ரி:

தமிழக அரசியலில் காட்சிகள் மாறின. எடப்பாடியும், பன்னீர்செல்வமும் கைகோத்தனர். எதிரணியில் சசிகலாவும், டி.டி.வி தினகரனும் இருந்தனர். கட்சியை பன்னீர்செல்வத்திடமும், ஆட்சியை எடப்பாடியிடமும் கொடுத்து சமாதானம் செய்துவைத்தது மத்திய பி.ஜே.பி. இந்தநிலையில், ``இதுதான் நேரம், உள்ளே வா” என மகனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார் பன்னீர். கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார் ரவி. பின்னர், எதிரணியில் இருந்த சசிகலா, டி.டி.வி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரை மேடைகளில் தாக்கிப்பேச ஆரம்பித்தார். அதுவரை நேரம் பார்த்திருந்த ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பதவியை ரவீந்திரநாத் குமாரிடம் கொடுத்தார். முழுமையாகக் கட்சிப் பணியில் ஈடுபட ஆரம்பித்தார் ரவீந்திரநாத் குமார்.

6 மாதத்திற்குப் பின் அமைச்சர் பதவியா

கடந்த முறை மிஸ் ஆனது… இந்த முறை மிஸ் ஆகாது…

`2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தேனி தொகுதியில் ரவீந்திரநாத் குமாரை நிற்கவைத்துவிட வேண்டும்' என ஜெயலலிதாவிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தார் ஓ.பன்னீர்செல்வம். `ரவிக்கு சீட் கொடுத்தால், தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.விற்கு இருக்கும் வாக்குவங்கி சிதறிவிடும். அது தி.மு.க.வுக்குச் சாதகமாகிவிடும்' என உளவுத்துறை அறிக்கை கொடுக்கவே, பார்த்திபனுக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. இந்த முடிவு ஓ.பன்னீர்செல்வத்தை பர்சனலாகப் பாதித்தது என்றும், எப்படியாவது தன் மகனை டெல்லிக்கு அனுப்புவேன் என்றும் அந்தக் காலகட்டத்தில் அவர் புலம்பியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தத் தேர்தலில், ``கடந்தமுறை மிஸ் ஆனது, இந்த முறை மிஸ் ஆகாது… கட்சி நம் கையில், உனக்குத்தான் எம்.பி. சீட்” என மகனிடம் உறுதியளித்தார் ஓ.பி.எஸ். அதேபோல, ரவீந்திரநாத்துக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால், அப்செட் ஆன, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினரை பணத்தை வாரிஇறைத்து சரி செய்தார் ஓ.பி.எஸ். அதே கணக்கை மக்களுக்கும் போட்டுவைத்திருந்தார்.

ரவியோடு களத்தில் இறங்கிய பெரும் தலைகள்…

`ரவீந்திரநாத் குமார் அ.தி.மு.க சார்பில் களத்தில் இறங்குகிறார்' என்ற தகவல் கிடைத்ததும், ஆண்டிபட்டி தொகுதியில் இடைத்தேர்தலைச் சந்திக்க இருந்த அ.ம.மு.கவின் தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி தினகரனுடன் பேசி, தேனி மக்களவைத் தொகுதியில் களத்தில் இறங்கினார். அதேபோல், நீண்ட இழுபறிக்குப் பின்னர், நன்கு யோசனை செய்து, இருவருக்கும் இணையாக, கடும் போட்டியாக இருக்கக்கூடிய நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை களத்தில் இறக்கியது காங்கிரஸ். மூன்று வேட்பாளர்களில் முதலில் பிரசாரத்தை தொடங்கினார் ரவீந்திரநாத் குமார்.

ரவீந்திரநாத் குமார்

தேனி வந்த மோடி:

காங்கிரஸ் வேட்பாளராகக் களம் கண்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்ட, அந்தக் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தேனிக்கு வர இருந்தார். அதனையொட்டி, மோடியும் தேனி வர திட்டமிடப்பட்டது. ஆண்டிபட்டி அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. சுமார் 35 ஆயிரம் பேர்வரை திரட்ட திட்டமிட்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை திரட்டினார் ஓ.பி.எஸ். அது ஒரு பிரமாண்ட பொதுக்கூட்டமாக அமைந்தது. மேடையில் பேசிய மோடி, `வாரிசு அரசியலை ஒழிப்போம்' என்றார். அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதெல்லாம் ஒரு பக்கம் என்றால், ``ரவிக்கு வாக்கு கேட்க மோடியே வந்திருக்கிறார். அதுவும், தேனிக்கு வரவழைத்துவிட்டாரே ஓ.பி.எஸ்!” எனக் கட்சியினரைப் பேசவைத்து, தனது செல்வாக்கை உயர்த்திக் காட்டினார் ஓ.பி.எஸ். எல்லாம் மகனுக்காகவே.!

ஆரத்திக்கு 500… ஓட்டுக்கு 1,000 ஆர்.பி’யின் மாஸ்டர் பிளான்:

நாள் ஒன்றுக்குக் குறைந்தது 25 முதல் 36 கிராமங்களுக்குச் சென்று திறந்தவாகனத்தில் நின்று மக்களிடம் வாக்கு சேகரித்தார் ரவீந்திரநாத் குமார். இதனால் ரவியின் வலது கால் ஒரேவாரத்தில் வீங்கியது. பிறகு வாகனத்தில் ஓர் இருக்கையை வைத்து அதில் அமர்ந்து வாக்கு சேகரித்தார். எப்படியாவது தன் மகனை வெற்றிபெற வைத்துவிட வேண்டும் எனத் திட்டமிட்ட ஓ.பன்னீர்செல்வம், இந்த வேலைக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சரியாக இருப்பார் எனக் கணக்குப் போட்டார். சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர் உதயகுமார். அரசியல் சூழல் மாற, தன்னையும் மாற்றிக்கொண்டு ஓ.பன்னீர்செல்வத்திடம் ராசியானார். உதயகுமாரை தேனிக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காகவே, மதுரையின் மேற்கு மண்டலச் செயலாளராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்தார். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குள், மதுரையின் மேற்கே அமைந்திருக்கும் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் அடக்கம். அதனால், தேனி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக எளிதாகப் பணியமர்த்தப்பட்டார் உதயகுமார். ``தேர்தல் செலவுகள் எல்லாம், உதயகுமாரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்யுங்கள்…” என ஓ.பி.எஸ் கட்சி நிர்வாகிகளிடம் சொல்லியிருந்தார். அதன் அடிப்படையில், வார்டு வாரியாக ஆட்களை நியமித்து சரியாகப் பணத்தை கொண்டுசேர்த்தார் உதயகுமார். கோடிகோடியாக தேனிக்குள் வந்த பணம், லட்சங்களாகப் பிரிக்கப்பட்டு, ஆயிரங்களாக மாற்றப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப்பட்டன. அனைத்தையும் கச்சிதமாகச் செய்து முடித்தார் உதயகுமார்.

தேனியில் அ.தி.மு.கவுக்கு என இருக்கும் வாக்குவங்கியில் பிரமலைக் கள்ளர் சமுதாயத்தினரின் வாக்குகள் பெரும்பங்கு வகிக்கும். அதை தங்க தமிழ்ச்செல்வன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வாக்குகளைப் பிரிப்பார் எனக் கணக்கிட்டனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால், ஆர்.பி.உதயகுமாரின் மாஸ்டர் பிளான் சக்சஸ் ஆனது. ஆரத்திக்கு 500… ஓட்டுக்கு 1000 என்ற ஆர்.பி. உதயகுமாரின் கணக்கு ஒர்க் அவுட் ஆனது. சில இடங்களில் 2,000 கொடுங்கள் என்றார் ஆர்.பி. வாக்குகள் சிதறவில்லை. பணத்தால் வாக்குகளை மொத்தமாக தன் பக்கம் திருப்பினார். வெற்றி பெற்றார் ரவீந்திரநாத் குமார். ``300 கோடி செலவழித்தார்கள்!’ எனக் குற்றம்சாட்டினர் தங்க தமிழ்ச்செல்வனும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும்!

ஓ.பி.எஸ்-ன் வாரணாசி பயணம்:

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட மோடி, தன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாகச் சென்றார். அந்த ஊர்வலத்தில் ஓ.பன்னிர்செல்வம் தன் மகனுடன் கலந்துகொண்டார். பின்னர் நடந்த நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு மோடி மற்றும் அமித் ஷாவிடம் நெருக்கம் காட்டினார். அப்போது `தன் மகன் எம்.பி-யானால், மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்க வேண்டும்' என மோடியிடமும், அமித் ஷாவிடமும் ஓ.பி.எஸ் கூறியதாக தகவல். அதற்கு இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ``இதென்ன பிரமாதம், தேனிக்கு மோடி வந்திருந்தபோது, கூட்டத்தை முடித்துவிட்டு, ஹெலிகாப்டரில் ஏறும் முன்னர், தன் பர்சனல் போட்டோகிராபரை அழைத்து, ஓ.பி.எஸ் மற்றும் ரவீந்திரநாத் குமாருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டார். ஓ.பி.எஸ்ஸூம், மோடியும் அவ்வளவு நெருக்கம்!” என்கின்றனர் பன்னீரின் நெருங்கிய வட்டாரங்கள்.

ஓ பன்னீர் செல்வம்

ஆறு மாதம் கழித்து அமைச்சர் பதவி:

ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி என்றதும், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது. ``சீனியர்கள் அவ்வளவு பேர் இருக்கிறோம். நேற்று வந்த சின்னப்பயலுக்கு அமைச்சர் பதவியா?” எனச் சத்தமாகவே பிரச்னைகளைக் கிளப்ப ஆரம்பித்துவிட்டனர். ``அ.தி.மு.க வில் இருந்து லோக்சபாவிற்கு வெற்றிபெற்ற ஒருவருக்கு அமைச்சர் பதவி கேட்பதுதானே நியாயம்” என ஓ.பி.எஸ் ஆதரவு நிர்வாகிகள் பதிலுக்குக் குரல் எழுப்ப, ``அப்படியென்றால், ராஜ்யசபா எம்.பி’களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாமே” என எதிர்தரப்பும் குரல் கொடுத்திருக்கிறது. இப்படி ஒரு பிரச்னை வரலாம் என ஏற்கெனவே கணித்திருந்தாராம் ஓ.பி.எஸ்., உடனே, ``ஆறு மாதம் கழித்து எனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுங்கள்! இப்போதைக்கு நேரம் சரி இல்லை!” என டெல்லி வட்டாரத்தில் தகவல் சொல்லிவிட்டாராம்.

அதனால்தான் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட ரவீந்திரநாத் குமார், பிரதமர் இல்லத்தில் நடந்த தேநீர் விருந்துக்கு அழைக்கப்படவில்லை என்கிறார்கள். ``இப்போது இருக்கும் சூழலில் ரவிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் ஏற்படும் பிரச்னையைத் தினகரன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, கட்சிக்குள் இருக்கும் பெரிய தலைகளை தன் பக்கம் இழுத்துவிடுவார். எனவே, ஆறு மாதம் கழித்துதான் ரவிக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள். அதுவும், தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் அல்லது கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் இரண்டில் ஒன்று கொடுப்பார்கள்!” என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய வட்டாரங்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்!


டிரெண்டிங் @ விகடன்