`டி.ஆர்.பாலு சீனியாரிட்டி உதயநிதிக்குப் பொருந்தாதா?!' - தொடர் தீர்மானங்களால் தகிக்கும் சீனியர்கள் | DMK Party cadres angry over Udhayanithi Stalin's entry

வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (01/06/2019)

கடைசி தொடர்பு:15:46 (01/06/2019)

`டி.ஆர்.பாலு சீனியாரிட்டி உதயநிதிக்குப் பொருந்தாதா?!' - தொடர் தீர்மானங்களால் தகிக்கும் சீனியர்கள்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருக்கும் வெள்ளக்கோயில் சாமிநாதன், பெயரளவுக்குக்கூட ஒரு மாநாட்டை நடத்தவில்லை. இளைஞரணிச் சார்பில் நிதி அளிப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை. கருணாநிதி மறைவுக்குப் பிறகு கடும் நெருக்கடிகளைக் கொடுத்த பிறகே அறிவாலயத்தில் கூட்டம் நடத்தினார்.

`டி.ஆர்.பாலு சீனியாரிட்டி உதயநிதிக்குப் பொருந்தாதா?!' - தொடர் தீர்மானங்களால் தகிக்கும் சீனியர்கள்

தி.மு.க இளைஞரணியின் புதிய செயலாளராகப் பதவியேற்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். `கருணாநிதி பிறந்தநாளில் பதவியேற்பதாக இருந்தது. தற்போது தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உதயநிதி வருகைக்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது' என்கின்றனர் உடன்பிறப்புகள் வட்டாரத்தில். 

நாடாளுமன்றம் பிளஸ் 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் தீவிரமாகப் பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின். அவரது எளிமையான பேச்சு, பொதுமக்களை அதிகம் கவர்ந்தது. தி.மு.க-வின் 400 பேச்சாளர்களும் இந்தத் தேர்தலில் ஒதுங்கியே இருந்தனர். ஸ்டாலினும் உதயநிதியும் மட்டுமே தேர்தல் களத்தில் ஓய்வில்லாமல் வலம் வந்தனர். தேர்தல் முடிவில் 38 எம்.பி-களும் 13 சட்டப் பேரவைத் தொகுதிகளும் தி.மு.க வசம் வந்து சேர்ந்தன. அ.தி.மு.க ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் ஏற்படாமல் போகவே, இந்த வெற்றியைத் தி.மு.க நிர்வாகிகளால் பெரியளவுக்குக் கொண்டாட முடியவில்லை. ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளை வெற்றிக் கொண்டாட்டமாக நடத்த முடிவு செய்திருந்த ஸ்டாலின், தற்போது ஒய்.எம்.சி.ஏ திடலில் எளிமையான விழாவாக நடத்த இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில், `உதயநிதியை இளைஞரணிக்கு முன்னிறுத்த வேண்டும்' என்ற கோரிக்கையைக் குடும்பத்தில் உள்ள சிலர் முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்டவர்கள் தங்கள் மாவட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அறிவாலயத்துக்கு வந்து கொடுத்தனர். உதயநிதியோடு நெருங்கிய நட்பில் இருக்கும் இளைஞரணி துணைச் செயலாளர் அன்பில் பொய்யாமொழி மகேஷ், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் தொடர்பு கொண்டு தீர்மானம் நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வருகிறார். அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி முன்னிலையில், உதயநிதிக்குப் பதவி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

உதயநிதியை முன்னிலைப்படுத்துவதில் இருவேறு கருத்துகள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் வலம் வருகிறது. இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``தேர்தல் முடிந்ததும் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதில் தலைவர் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்சியின் சீனியர்களும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். ஒன்று, `உதயநிதி வர வேண்டும் எனக் கூற வேண்டும்' அல்லது `அமைதியாக இருக்க வேண்டும்'. இந்த இரு நிலைப்பாட்டைத் தாண்டி வேறு யாராலும் எதையும் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு நாடாளுமன்றத் தி.மு.க குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும் கொறடாவாக ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டனர். இந்தப் பதவியை நிரப்புவதற்கு முன்பு, கனிமொழி உட்பட அனைவருடனும் கலந்தாலோசித்தார் ஸ்டாலின். `பாலு சீனியர். அவருக்குக் கொடுக்காவிட்டால் தேவையற்ற சர்ச்சை ஏற்படும்' என்ற கருத்தையும் சிலர் முன்வைத்தனர். 

வெள்ளக்கோயில் சாமிநாதன்

சீனியர் என்பதால் பாலுவை முன்னிறுத்தினர். `அதேபோல், இளைஞரணியில் சீனியராக இருக்கிறவர்களில் யாருக்காவது மாநில இளைஞரணிச் செயலாளர் பதவியைக் கொடுக்கலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருக்கும் வெள்ளக்கோயில் சாமிநாதன், பெயரளவுக்குக்கூட ஒரு மாநாட்டை நடத்தவில்லை. இளைஞரணிச் சார்பில் நிதி அளிப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தவில்லை. கருணாநிதி மறைவுக்குப் பிறகு கடும் நெருக்கடிகளைக் கொடுத்த பிறகே அறிவாலயத்தில் கூட்டம் நடத்தினார். அந்தளவுக்குச் செயல்படாத ஒன்றாக இளைஞரணி இருந்து வருகிறது. டி.ஆர்.பாலுவுக்குக் காட்டும் சீனியாரிட்டியை இளைஞரணி நிர்வாகத்திலும் செயல்படுத்தலாம். இவ்வளவு விரைவாக உதயநிதிக்குப் பதவியைக் கொடுப்பதில் சீனியர்களில் சிலருக்கு உடன்பாடில்லை. தலைமை எடுத்த முடிவு என்பதால் மௌனம் காக்கிறார்கள்" என விவரித்தவர்கள், ``கடந்த காலத்தில் காங்கிரஸ் கேபினட்டில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கேபினட் பதவிக்குள் நுழைந்தனர். மூன்றாவதாக ஒருவருக்கு இடம் கேட்டபோது, `குடும்ப அரசியல் எனப் பேசத் தொடங்கிவிடுவார்கள்' என ஸ்டாலின் தரப்பில் உறுதியாகக் கூறிவிட்டனர். இப்போது உதயநிதியை முன்னிறுத்துவது மட்டும் குடும்ப அரசியல் ஆகாதா?" எனவும் கேள்வி எழுப்புகின்றனர். 

உதயநிதி ஸ்டாலின்

அதேநேரம், உதயநிதியை வரவேற்கும் இளைஞரணி நிர்வாகிகள் நம்மிடம், ``தேர்தல் பிரசாரத்தில் மட்டும் அல்ல, செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் என்ற முறையில் உதயநிதிக்குத் தனிப்பட்ட முறையில் கூட்டம் சேருகிறது. தேனி மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் கேட்டை தள்ளிக்கொண்டு  மாணவர்கள் திரளாக வந்துவிட்டனர். பள்ளி ஆசிரியர் விசில் ஊதியும் மாணவர்கள் நகரவில்லை. மேடைப் பேச்சிலும் மிக எளிமையாக மக்களைக் கவரும் வகையில் பேசி வருகிறார். இளைஞரணிக்கு அவர் வருவதன் மூலம், இளைஞர்கள் அதிகளவில் கட்சிப் பணி சேர வருவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.கவின் முதுகெலும்பாக இருந்து வந்த இளைஞரணி எந்தவிதச் செயல்பாடும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. உதயநிதியின் வருகை அவற்றை ஈடு செய்யும். எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் மாநிலம் முழுவதும் உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் அவர் பதவியேற்க இருக்கிறார்" என்கின்றனர் இயல்பாக.

அண்ணா அறிவாலயம்

`ஜூன் 1 அன்று இளைஞரணி செயலாளராகப் பதவியேற்பு' என்ற செய்தி வெளியாக வேண்டும் எனக் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். `மோடி பதவியேற்பு செய்தி பிரதானமாக இருக்கும்' என்பதால் இந்தத் திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டனர். அடுத்ததாக, `ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாளில் பதவியேற்கலாம்' என முடிவு செய்தனர். தற்போது இந்தத் திட்டத்தையும் ரத்து செய்துவிட்டு, `ஜூன் 9 அல்லது 10' என முடிவு செய்துவிட்டு, `நல்ல நேரம் எது?' என ஆலோசித்து வருகின்றனர் குடும்ப உறவுகள்.