`மதிக்கவில்லை... போன் எடுப்பதில்லை'- தி.மு.க எம்.பி முன்னிலையிலேயே நிர்வாகிகள் சரமாரி புகார் | Allegation against dmk mp

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (03/06/2019)

கடைசி தொடர்பு:12:08 (03/06/2019)

`மதிக்கவில்லை... போன் எடுப்பதில்லை'- தி.மு.க எம்.பி முன்னிலையிலேயே நிர்வாகிகள் சரமாரி புகார்

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில், கடலூர் தொகுதியில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  தி.மு.க. எம்.பி ரமேஷ், `எனக்கு உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருடன் தொழில் முறை உறவு உண்டு'' எனப் பேசியது  கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் எம்பி ரமேஷ்

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக்  கூட்டம், நெய்வேலி தொ.மு.ச அலுவலகத்தில் நடந்தது. கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ தலைமைதாங்கினார். நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன், புதியதாக வெற்றிபெற்ற கடலூர் எம்.பி,  டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் தேர்தல் நேரத்தில் விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய தொகுதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவும், எல்லா செலவுகளையும் நிர்வாகிகளே பார்த்துக்கொண்டதாகவும், மற்ற தொகுதிகளில் வழங்கியது போல வாக்காளர்களுக்கும் பணம் வழங்கவில்லை; அநாதையாக விடப்பட்டதாக சரமாரியாகக் குற்றம் சாட்டினார்கள். மேலும், ``புதிய எம்.பி ரமேஷ், கட்சியினரை மதிக்கவில்லை. போன் செய்தால்கூட எடுப்பதில்லை'' என்றும் குற்றம் சாட்டினார்கள்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய எம்.பி ரமேஷ், "நான் கட்சியில் இருந்தாலும் அரசியலுக்குப் புதியவன். நான் எல்லோரிடமும் அன்பாகப் பழகக் கூடியவன். நான் போன் எடுக்கவில்லை எனக் கூறுகின்றீர்கள். நான் அதிகமாக யாரிடமும் போனில் பேச மாட்டேன். நேரில் வந்தால் தொண்டர்களிடம் நன்றாகப் பழகக்கூடியவன். நான் தளபதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இருக்கும்போது எப்படி போனை எடுக்க முடியும். நான் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் போன்றவர்களிடம் தொழில் முறையில் உறவு வைத்துள்ளேன். என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும். விருத்தாசலம் தொகுதி தேர்தல் நேரத்தில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள். எம்.பி நிதியில் அதைச் சரிசெய்துவிடலாம். நான் எனது தொழிலை ஒப்படைத்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்கி, எனக்கு வாக்களித்த மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்வேன்" என்று பேசினார்.

எம்.பி-யின் இந்தப் பேச்சு, அருகில் இருந்த மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன், நெய்வேலி எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் ஆகியோருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும், கட்சித் தலைமையுடன் நேரடித் தொடர்பில் உள்ளவன் என்பதுபோல் எம்.பி பேசியது தி.மு.க-வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.