கலைஞர் கருணாநிதி ... ஒரு இளைஞரின் டைரிக் குறிப்பில் இருந்து.. #Karunanidhi96 | A story about Karunanidhi on his birthday

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (03/06/2019)

கடைசி தொடர்பு:11:21 (04/06/2019)

கலைஞர் கருணாநிதி ... ஒரு இளைஞரின் டைரிக் குறிப்பில் இருந்து.. #Karunanidhi96

இங்கிருக்கும் அத்தனை அலகுகளையும், அரசியலுக்குப் பயன்படுத்துவதில், அவர் கில்லாடி. சச்சின் போன்ற விளையாட்டு வீரர்களுக்கும் மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் அரசியல்வாதியாக அவர் இருந்தார். மற்றவர்களுக்கு அது செய்தி. ஆனால், அதுவொரு அரசியல்.

கலைஞர் கருணாநிதி ... ஒரு இளைஞரின் டைரிக் குறிப்பில் இருந்து.. #Karunanidhi96

கருணாநிதியை மதிப்பிடும் அளவுக்கு, என் வயதில்லை. ஆனால், வயதிருந்தால்தான் கருணாநிதியை மதிப்பிட வேண்டும் என்று இல்லை. 60 ஆண்டுகள் தமிழ்நாட்டை தலையில் சுமந்த தலைவனுக்காக, என் சொல்லும் கொஞ்சம் எஞ்சட்டுமே. அதுவும் போக, இம்மண்ணின் இளைஞர்கள் மனதில், கருணாநிதி மீது வெறுப்பை விதைக்கும் பிரசாரங்கள் வேகமெடுத்துள்ள சூழலில், இது என் கடமையும்கூட.

கருணாநிதி மீது பள்ளிக்காலத்தில் இருந்தே எனக்கு அன்பு உண்டு. ஏனென்றால், அவர்தான் ஆண்களுக்கும் 'இலவச சைக்கிள்' வழங்கினார். கம்பெனி பெயர் `அவோன்' (Avon) என நினைக்கிறேன். ஆக, என்னுடைய பல்லாண்டுக் கால படிக்கட்டு பயணத்துக்கு ஒரு முடிவை ஏற்படுத்தினார். படிக்கட்டு பயணமும் அலாதிதான். ஆனால், கொஞ்சம் மிஸ்ஸானால் அதோகதிதான். அப்படி, விழுப்புண்களால் ஆன வீரவரலாறு எனக்கு நிறையவே உண்டு. சைக்கிள் கிடைத்ததும் பல இடங்களில் விழுந்து வாரினேன். `அவோன்' தாங்கினான்!

கலைஞர் கருணாநிதி

ஆனால், அந்த சைக்கிளின் கலர்தான், டி.எஸ்.பாலையா பட டைட்டில் கார்டு மாதிரி, பயங்கர கன்றாவியாக இருக்கும். அங்கே இங்கே ஸ்டிக்கர் ஒட்டி, கலர் பிரச்னையை மேனேஜ் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அதன் தரம் `ஏ1’ (இது வேற ‘ஏ1’ மக்களே). 200 கிலோ வெயிட் ஏத்தினாலும், இரும்புக் களிறென தாங்குவான், அவோன். இன்னும் 20 ஆண்டுகள் கழித்து பெடல் மிதித்தாலும், அப்பாச்சியென பறப்பான், அதில் சந்தேகமே இல்லை.

மூத்தவர்களுக்கு கருணாநிதி எப்படியோ, தெரியாது. ஆனால், இளைஞர்களுக்கு அவர் நெருக்கமானவர். இது உண்மை, ஏனென்றால் இப்போதுவரை பல பேச்சுலர் ரூம்களில், அவரளித்த `கலைஞர் டி.வி'தான், படம் காட்டிக்கொண்டிருக்கிறது. 

இளைஞர்களுக்கு எப்போதுமே, கருணாநிதி மீது ஒருவிதமான `அடாவடி அன்பு' உண்டு. அதனால்தான், அவரை கலாய்க்கும்போது மட்டும் அனுபவித்துக் கலாய்ப்பார்கள். அப்போது, அவர்களிடம் வெளிப்படும் கற்பனை, அலாதியானது. கருணாநிதியே கேட்டிருந்தாலும், `அழகிய கற்பனை' என்றே சொல்லியிருப்பார். அவருமே இளமையில் அப்படி கலாய்த்து வளர்ந்தவர்தானே! இதுவரை எத்தனையோ பேர் எத்தனையோ தலைப்பில் படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால், `இளைஞன்' என்ற பெயரில், கருணாநிதி மட்டுமே படமெடுத்தார். இதனாலேயே, அவர் எனக்கு இன்னும் பிடித்தவர் ஆகிறார்.

கலைஞர் கருணாநிதி

கருணாநிதி ஓர் அரசியல்வாதி மட்டுமல்ல; அவர் ஒரு சிநேகிதர். சிம்பு நடித்த `சரவணா' படத்தில், நாகேஷ் ஒரு கேரக்டர் பண்ணியிருப்பார். அந்தப் படத்தில் சிம்பு பேரன், நாகேஷ் தாத்தா. இருவருக்கும் இடையே அற்புதமான உறவு வெளிப்படும். மாத்தி, மாத்தி திட்டிக்கொள்வார்கள். அடுத்த நிமிடமே, கட்டிக்கொள்வார்கள். சிம்புவின் மனது நாகேஷுக்கு மட்டுமே முழுதாகப் புரியும். அதேபோல, நாகேஷின் மனதும் சிம்புவுக்கு மட்டுமே முழுதாகப் புரியும். சொல்லவந்தது இதுவே... உரிமை எடுத்துக்கொள்ளும் உறவு, `இளைஞர் - கலைஞர்' உறவு! ’அவர் மீது எனக்கு எந்த அன்பும் இல்லை’ என்று சொல்லிய அடுத்தகணமே, அவர் மீதான அன்பைத்தான் உணர்வார்கள் பலர்.

கருணாநிதி அளவுக்கு பாராட்டு வாங்கியவரும் இங்கில்லை, திட்டு வாங்கியவரும் இங்கில்லை. `எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான்டா...' என்பதே, அரசியல் அரங்கில் அதிகம் சொல்லப்பட்ட சொற்றொடராக இருக்கும். நன்றோ, தீதோ, ஏற்போ ஏற்பில்லையோ, அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரின் பெயர் உச்சரிக்கப்படாத நாளில்லை. அந்த விதத்தில், அவர் ஆயிரம் பொன் யானை. அரசியல் அச்சை தன்னைச் சுற்றியே தகவமைக்கத் தெரிந்த மத்தகம் விரிந்த யானை.

கலைஞர் கருணாநிதி

இதுவரை இங்கே அதிகம் பேசப்பட்டவரும் எழுதப்பட்டவரும், காட்டப்பட்டவரும் அவரே. எனினும், அவரைப் பற்றிச் சொல்ல இன்னும் ஏதோவொன்று மிச்சமிருக்கிறது. அடித்துச் சொல்லலாம்... அவர் இருந்தவரைத் தமிழ்நாட்டு அரசியலுக்கு எப்போதுமே வசந்தம். அவர் போன பிறகு, ஒரே வறட்சி!

கருணாநிதி அளவுக்கு `அப்டேட் அரசியல்வாதி' அமைவது, அரிதிலும் அரிது. ஒருபக்கம் கடைக்கோடி தொண்டனுக்குக் கடிதம் எழுதுவார். இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபருக்கு வாழ்த்து அனுப்புவார். இங்கிருக்கும் அத்தனை அலகுகளையும், அரசியலுக்குப் பயன்படுத்துவதில், அவர் கில்லாடி. சச்சின் போன்ற விளையாட்டு வீரர்களுக்கும் மறக்காமல் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லும் அரசியல்வாதியாக அவர் இருந்தார். மற்றவர்களுக்கு அது செய்தி. ஆனால், அதுவொரு அரசியல்.

கருணாநிதி எப்போதுமே மக்களுடன் உரையாடுவதில் வல்லவர். அதற்காக, எவற்றை எல்லாம் உபயோகப்படுத்த முடியுமோ, அவை அனைத்தையும் உபயோகப்படுத்துவார். முரசொலி முதல் முகநூல்வரை, அவர் உரையாடிக்கொண்டே இருந்தார். எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்டார், பதில் சொன்னார். ஊடக உள்வட்டாரங்களில், கருணாநிதியைப் பற்றிய கதைகள் பல உண்டு. அதையெல்லாம் கேட்டால், கேரளாவின் கதகளி கலைஞனிடம் கர்ணன் கதையைக் கேட்டதைப்போல ஜிவ்வென்று ஏறும். அந்தக் கதைகளை எல்லாம் காசுகொடுத்து பரப்ப முடியாது. ஏனென்றால், அவையெல்லாம் அச்சிலும் அரங்கிலும் ஏறாதவை.

கலைஞர் கருணாநிதி

கருணாநிதி, கையில் `டேப்லட்' ஃபோனுடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று உள்ளது. ஓர் அரசியல்வாதி இத்தனை தூரம் `காலத்துடன் பொருந்தினார்' என்பது எவ்வளவு பெரிய விஷயம்! அவரது அரசியலின் ஆணிவேர், அந்த `அப்டேட்' மனநிலைதான். அவர் காலத்தில் அரசியல் செய்த பலர் அப்படியே தேங்கிவிட, அவர் மட்டும் அப்டேட் ஆகிக்கொண்டே இருந்தார். ’முரசொலியைப் படித்தாலே முக்கால்வாசி பத்திரிகையாளனாகிவிடலாம்’ என்பார்கள், சில மூத்த பத்திரிகையாளர்கள் விளையாட்டாக.

உடல் ஒத்துழைத்திருந்தால், ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்து , போட்டோ அப்லோட் செய்திருப்பார். மறக்காமல் லைக்ஸை எண்ணியிருப்பார், கமென்ட்ஸை பார்த்திருப்பார். `என்னைப் பற்றிய மீம்கள் ஏன் குறைந்துவிட்டன இளைஞர்களே' என, உரிமையுடன் கோபித்தும் இருப்பார். முடிந்தால், `மீம்' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, ஒரு தமிழ்ப் பதத்தையும் அறிமுகப்படுத்தியிருப்பார். அவர், நம் காலத்தின் ஆகப்பெரிய நவீன அரசியல்வாதி என்பதில், எவருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.

மற்ற அரசியல்வாதிகள் அரசியலை ஒரு தொழிலாகவோ, சேவையாகவோ செய்தவர்கள், செய்பவர்கள். ஆனால், கருணாநிதி மட்டுமே அரசியலை ஒரு `கலை'யாகச் செய்தவர். பல அரசியல்வாதிகள், `அரசியல் ஒரு பெரும் சுமை, பதவி ஒரு முள்கிரீடம்’ என்பார்கள். அண்மையில், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிகூட, பொது மேடையிலேயே கண்ணீர்விட்டுக் கதறினார். ஆனால், அரசியலில் பிறருக்கு ஏற்படும் தொய்வு, சலிப்பு, ஆர்வமின்மை கருணாநிதிக்கு எப்போதும் ஏற்பட்டதே இல்லை. ஏனென்றால், அவர் அரசியலை ஒரு விளையாட்டைப்போல அணுகினார். அனுபவித்தார். அதிலேயே கரைந்தார்!

கலைஞர் கருணாநிதி

இப்போதுகூட கட்சியிலோ, ஆட்சியிலோ ஒரு பிரச்னை ஏற்பட்டால், கருணாநிதி எப்படி அதை எதிர்கொண்டார் என்பதைத் தேடிப் பார்த்தால், சில தீர்வுகள் கிடைக்கலாம். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள், கருணாநிதியைப் பற்றிக் கொஞ்சமேனும் அறிந்துகொண்டு வருவது, அவர்களுக்கு நல்லது. மதம், சாதி, இனம், மொழி, வர்க்கம் இப்படி எல்லாவகை அரசியலுக்கும், அவரிடம் ஒரு வழிமுறை கிடைக்கும். அவ்வப்போது, `நானும் ஒரு கம்யூனிஸ்ட் தான்' என்று காமெடி பண்ணவும், அவர் தவறியதில்லை. எவரென்ன சொல்வார்கள் என்றெல்லாம் நினைக்காமல், அவர் பாட்டுக்கு அடித்தாடுவார். ஓர் அரசியல்வாதிக்கு அந்த அயரா ஆற்றல், ரொம்ப முக்கியம்!

கருணாநிதியின் திரைவெற்றி எல்லோரும் அறிந்ததே. `அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்...' என்பது, இதுவரை திரையில் தீட்டப்பட்ட  துணிச்சல் வசனங்களில் தலையாயது. `பொறுத்தது போதும்... பொங்கியெழு மனோகரா' என்ற வசனம், இதுவரை இங்கு சொல்லப்பட்டதில் பெஸ்ட் பஞ்ச். `வசந்தசேனை! வட்டமிடும் கழுகு...' வசனமெல்லாம், வெறித்தனம்!

கருணாநிதி அடிப்படையில் சாகசங்களை விரும்பியவர். அவர், கமலாலயம் குளத்தை நீந்திக்கடந்த கதை, அதைச் சொல்லும். ஆனாலும், தன் பலம் எது, பலவீனம் எது என்பதை, நன்றாகவே அறிந்தவர். அதனால்தான், அவர் படங்களில் நடிக்கவில்லை. `என் உயரம் எனக்குத் தெரியும்' என்று சொல்லிய, ஒரே அரசியல்வாதியும் அவர்தான். ஓர் அரசியல்வாதிக்கு அந்த `சுயதெளிவும்' ரொம்பவே முக்கியம்.

கலைஞர் கருணாநிதி, கனிமொழி 

அப்போது, பிரதமர் கனவில் இருந்தார் ஜெயலலிதா. அவர் விசுவாசிகள், `வருங்கால பிரதமர் அம்மா வாழ்க’ என்று முக்குக்கு முக்கு பேனர் வைத்தார்கள். அப்போது, கனிமொழியிடம் கேட்டார்கள், `கருணாநிதிக்கு அப்படி எந்த ஆசையும் இல்லையா’ என்று. கனிமொழி சிரித்தபடி, `இல்லை. எனக்குத் தெரிந்து அவரை ஜனாதிபதி பதவிக்கு ஒருமுறை அழைத்தார்கள். ஆனால், மறுத்துவிட்டார்’ என்றார். நாட்டின் உயரிய பிரதமர் பதவி தன்னைத் தேடிவந்தபோதுகூட, நண்பன் தேவகவுடாவையே கைகாட்டினார், கருணாநிதி. இப்போதும், அதைக் கண்ணீரின்றி சொல்லவே முடியாது தேவகவுடாவால். ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால், கருணாநிதி எப்போதுமே `தமிழ்... தமிழ்நாடு... தமிழினம்’ என்ற சிந்தனையில் மட்டுமே வாழ்ந்தவர். அந்த வகையில், அவரை ஒடிசாவின் நவீன் பட்நாயக்குடன் மட்டுமே ஒப்பிட முடியும்.

கருணாநிதி நடத்திய `அனைவரையும் உள்ளடக்கும் அரசியல் (Inclusive politics)', இந்திய அரசியலில் பலருக்கும் பாடம். எல்லோரையும் அணைப்பார். மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களையும்கூட, மதித்தே வந்திருக்கிறார். மாற்றுக்கருத்து கொண்டோரையும்கூட தட்டிக்கொடுத்தே வந்திருக்கிறார். சீமானைக்கூட தன் சட்டைப்பையில் இருந்து பேனா எடுத்து எழுதும் அளவுக்கு, மதித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளவும்.

நாம்தான் பார்க்கிறோமே... ஆளுங்கட்சிகளின் ஆட்சியை, விதிகளை மீறிக் களைத்து விளையாடும் ஆதிக்க அரசியல், இப்போது இந்தியாவெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் அவ்வகை அரசியல் இன்னும் தலைகாட்டாமல் தடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பது, கருணாநிதியின் கட்சி. இதுவரைக்கும் அவர் ஆட்சியைத்தான் பறித்திருக்கிறார்களே ஒழிய, அவர் எவரின் ஆட்சியையும் பறித்ததில்லை. 

கலைஞர் கருணாநிதி

இத்தகு தன்மையால்தான், அத்தனை தேசியத் தலைவர்கள், காவேரி மருத்துவமனையில் முகாம் கொண்டார்கள். அவ்வளவாக வெளியில் வெளிப்படாத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரே நேரில் வந்தார். எடப்பாடியே `தலைவர் கலைஞர்' என்றார். குருமூர்த்தியே `அவர் ஆள வேண்டும்' என்றார். எவரிடமும் எங்கும் பணியாத மம்தாவே, `நான் தமிழக முதல்வரிடம் வேண்டுகிறேன். கருணாநிதிக்கு இடமளியுங்கள்’ என்று மன்றாடினார்.

கருணாநிதியைப் பழிப்போர், பழிக்கட்டும். அதற்கெல்லாம் அவரின் பற்றாளர்கள் மதிப்பளிக்க வேண்டியதில்லை. அதையெல்லாம், அவர் 'பராசக்தி' காலத்திலேயே கடந்துவிட்டார்.

எழுந்து வந்திருந்தால், வசைச்சொல் உரைத்தோர்க்கு வாழ்த்துரைத்திருப்பார், அவர். ப்ச்!


டிரெண்டிங் @ விகடன்