` உதயநிதிக்காகக் கூடிய கூட்டம்தான்...ஆனால்?!' - ஸ்டாலின் குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவாலயம் | Dmk senior cadres silence over udhayanithi stalins entry

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (04/06/2019)

கடைசி தொடர்பு:13:58 (04/06/2019)

` உதயநிதிக்காகக் கூடிய கூட்டம்தான்...ஆனால்?!' - ஸ்டாலின் குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவாலயம்

` இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வரப் போகும் பொதுத் தேர்தலில் மெஜாரிட்டியோடு ஆட்சியைப் பிடிப்போம். அதற்குள் இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டுப் பதவிக்கு வந்தால் மக்கள் மத்தியில் பெயர் கெட்டுவிடும்' என்ற முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்.

` உதயநிதிக்காகக் கூடிய கூட்டம்தான்...ஆனால்?!'  - ஸ்டாலின் குடும்பத்துக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவாலயம்

` கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று தி.மு.க இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பார்' எனக் கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ` இல்லை. நல்லநேரம் பார்த்துக் கொண்டிருப்பதால் ஜூன் 9 அல்லது 10 ஆகிய தேதிகளில் நடக்கலாம்' எனவும் தகவல் வெளியானது. ` உதயநிதியை ஆதரிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் எதுவும் முடிவாகவில்லை. இதனால் ஸ்டாலின் குடும்பத்தினர் அப்செட்டில் உள்ளனர்' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

ஸ்டாலின் தலைமையில் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையேற்ற இந்தக் கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 38 நாடாளுமன்றத் தொகுதிகள் பிளஸ் 13 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது குறித்து விவாதம் நடந்துள்ளது. கூடவே, மத்தியில் நடந்த தேர்தலுக்கு உதயசூரியனையும் 9 தொகுதிகளில் மட்டும் இரட்டை இலைக்கும் மக்கள் ஆதரவு கொடுத்தது பற்றியும் சில கேள்விகளை எழுப்பினார் ஸ்டாலின். தோல்விக்கான காரணத்தை ஒவ்வொரு மாவட்ட செயலாளரிடம் கேட்டறிந்தார். இறுதியில், ` உங்கள் விளக்கத்தை ஏற்க முடியாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காகக் குழு அமைக்க இருக்கிறேன்' எனக் கடுகடுத்தார். 

உதயநிதி ஸ்டாலின்

`` நேற்று நடந்த கூட்டத்தில் இந்தி மொழித் திணிப்பு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை முன்வைத்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், ` உதயநிதியை முன்னிறுத்திப் பேசுவார்கள்' என இளைஞரணி நிர்வாகிகள் சிலர் எதிர்பார்த்தனர். காரணம், கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உதயநிதியை இளைஞரணி பதவிக்கு முன்னிறுத்தித் தீர்மானங்களை நிறைவேற்றி வந்தனர். தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உட்பட பலரும் முன்மொழிந்தனர். தூத்துக்குடியிலும் இதுதொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றினார் எம்.பி கனிமொழி. எந்தப் பக்கமும் எதிர்ப்பு இல்லாததால் உதயநிதி பதவிக்கு வருவது உறுதி எனப் பேசப்பட்டது. ஆனால், நேற்றைய கூட்டத்தில் இது பிசுபிசுத்துவிட்டது" என விவரித்த கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிர்வாகி ஒருவர், 

திமுக நிர்வாகிகள் கூட்டம்

`` அறிவாலயத்தில் நடந்த கூட்டமே உதயநிதியை முன்னிறுத்துவது தொடர்பாகத்தான் இருந்தது. கடந்த சில நாட்களாக அன்பில் மகேஷ் எடுத்த முயற்சிகளின் பலனாக, நேற்றைய கூட்டத்தில் ஆவடி நாசர் பேசினார். ` இளைஞர் அணிக்கு உதயநிதி வந்தால் நல்ல கூட்டம் சேரும்' என அவர் பேசிய தோரணையை யாரும் ரசிக்கவில்லை. அவரது பேச்சை அடுத்தகட்டமாக யாரும் முன்னெடுத்துச் செல்லவில்லை. இதன்பிறகு பேசிய நிர்வாகிகளில் ஒருவர்கூட உதயநிதியை ஆதரித்துப் பேசவில்லை. ஆதரவுக்கே ஆள் இல்லை என்றால், உதயநிதி வருகைக்கு எதிர்ப்பு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அன்பில் பொய்யாமொழி மகேஷின் அழுத்தத்தால் மாவட்ட செயலாளர்கள் கடிதம் கொடுத்தனர். எல்லோரும் கடமைக்காகத் தீர்மானங்களை நிறைவேற்றியதாகத் தெரிகிறது. ஆர்ப்பரிக்க ஆள் இல்லாத காரணத்தால் உதயநிதிக்குப் பதவி கொடுப்பதற்கான முடிவையும் நேற்றைய கூட்டத்தில் எடுக்க முடியவில்லை" என்றவர், 

`` தற்போதுள்ள ஆட்சியைக் கலைப்பது தொடர்பாக எந்த முடிவுக்கும் தலைமை வரவில்லை. ` இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வரப் போகும் பொதுத் தேர்தலில் மெஜாரிட்டியோடு ஆட்சியைப் பிடிப்போம். அதற்குள் இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டுப் பதவிக்கு வந்தால் மக்கள் மத்தியில் பெயர் கெட்டுவிடும்' என்ற முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். சட்டமன்றம் கூடும்போது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் சீனியர்கள் சிலர் உறுதியாக உள்ளனர். அதற்கேற்ப, அ.தி.மு.க தரப்பில் இருந்து 10 எம்.எல்.ஏ-க்கள் எங்கள் பக்கம் வருவதற்கும் தயாராக உள்ளனர். இப்படியொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவசரம் அவசரமாக அரியணை ஏறுவதற்கும் தயக்கம் காட்டுகிறார் ஸ்டாலின்" என்றார் விரிவாக. 

உதயநிதி

அறிவாலயக் கூட்டம் தொடர்பாக, தி.மு.க இளைஞரணி நிர்வாகிகளிடம் பேசினோம். `` நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையாகப் பிரசாரம் செய்தார் உதயநிதி. இளைஞரணியைச் சேர்ந்த 5 பேருக்கு இந்தத் தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டது. தருமபுரியில் அன்புமணியைத் தோற்கடித்த செந்தில்குமார், தே.மு.தி.க சுதீஷைத் தோற்கடித்த கவுதம சிகாமணி ஆகியோர் உதயநிதியின் சாய்ஸ். இரண்டு முக்கிய நபர்களை வீழ்த்தியது அவரது மிகப் பெரிய சாதனை. அந்த அடிப்படையில், இளைஞரணிக்கு உதயநிதியைக் கொண்டு வர வேண்டும் என விரும்பினோம். மாவட்ட செயலாளர்களும் இதே மனநிலையில் இருக்கின்றனர். அதனால்தான், அவர்களாகவே தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்தனர். அஷ்டமி, நவமி உள்ளிட்ட காரணங்களால்தான் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிப் போகிறது. விரைவில் இளைஞரணியின் மாநில செயலாளராகப் பதவியேற்க இருக்கிறார் உதயநிதி" என்கின்றனர் உறுதியாக.