`ஜெயலலிதா தவறவிட்டதில்லை, எடப்பாடி ஏன்?!' - இப்தார் விருந்தைப் புறக்கணித்த பின்னணி | Reason behind Edappadi not attending the Iftar function

வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (04/06/2019)

கடைசி தொடர்பு:15:31 (04/06/2019)

`ஜெயலலிதா தவறவிட்டதில்லை, எடப்பாடி ஏன்?!' - இப்தார் விருந்தைப் புறக்கணித்த பின்னணி

"எந்தெந்த எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் தி.மு.க பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என உளவுத்துறை மூலமாகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார் எடப்பாடி. அப்படிச் சந்தேகம் வருகிறவர்களை தகுதிநீக்கம் செய்வதற்கும் அவர் தயங்க மாட்டார்."

`ஜெயலலிதா தவறவிட்டதில்லை, எடப்பாடி ஏன்?!' - இப்தார் விருந்தைப் புறக்கணித்த பின்னணி

த்திய அமைச்சரவையில் தன் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த மோதல் நேற்றைய இப்தார் விருந்திலும் எதிரொலித்தது. `விருந்தைப் புறக்கணிப்பது எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் அல்ல. சில உடல்நலப் பிரச்னைகள்தான் காரணம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

இப்தார் விருந்து

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அ.தி.மு.க சார்பில் இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், `முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தலைமை ஏற்று நடத்துவார்கள்' என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்தார் விருந்து தொடங்கும் வரையில் முதல்வர் வருவாரா... மாட்டாரா... என்ற விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. கடைசிவரையில் நிகழ்ச்சிக்கு வராமல் ஒதுங்கிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. `ஜெயலலிதா இருந்தவரையில் இப்தார் விருந்து நிகழ்ச்சியைப் புறக்கணித்தது இல்லை, எடப்பாடி புறக்கணிப்பதன் பின்னணியில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன' என்ற பேச்சுகளும் தொண்டர்கள் மத்தியில் எழுந்தன. நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு முன்னதாகவே வந்துவிட்டார் பன்னீர்செல்வம். கூட்டணிக் கட்சித் தலைவர்களான ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், சரத்குமார், தனியரசு உள்ளிட்டவர்களும் திரளாக வந்திருந்தனர். பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும் வந்திருந்தார். பா.ஜ.க தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. 

அதிமுக நடத்திய இப்தார் விருந்து

அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத்துக்கு எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு டெல்லி வட்டாரத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்தார் பன்னீர்செல்வம். அ.தி.மு.க-வுக்கு இரட்டைத் தலைமை இருக்கும்போது, பன்னீர்செல்வம் மட்டும் தனி ஆவர்த்தனம் செலுத்துவதை சீனியர்கள் சிலர் விரும்பவில்லை. `மக்களவையில் அ.தி.மு.க-வுக்கு ஒரே ஒரு இடம் இருந்தாலும் மாநிலங்களவையில் பத்து எம்.பி-க்கள் உள்ளனர். `அப்படியிருக்கும்போது வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்ட சீனியர்களை அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும்' என எடப்பாடி தரப்புக்குச் சிலர் அழுத்தம் கொடுத்தனர். `உங்களுக்கு ஒரு அமைச்சர் பதவியைத்தான் தர முடியும். அது யார் என்பதை நீங்களே முடிவு செய்துவிட்டு வாருங்கள்' என டெல்லி பா.ஜ.க தலைமை உறுதியாகக் கூறிவிடவே, `அந்த ஒரு பதவியை என் மகனுக்குக் கொடுங்கள்' என வலியுறுத்தினார் பன்னீர்செல்வம். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்துவிட்டார். `கட்சியில் ஜூனியரான ரவீந்திரநாத்துக்குக் கொடுத்தால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதனால் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் இடையில் மோதல் வெடித்தது. `கட்சியின் செயற்குழுவில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கலாம்' எனச் சிலர் சமாதானம் பேசினர். பா.ஜ.க தலைமையோடு நெருக்கம் காட்டினாலும், எடப்பாடி பழனிசாமி போட்ட முட்டுக்கட்டையால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார் ஓ.பி.எஸ். இதன் ஒருபகுதியாகத்தான் நேற்றைய இப்தார் விருந்தைப் புறக்கணித்தார் எடப்பாடி பழனிசாமி" என்கின்றனர். 

இப்தார் விருந்து

இதை மறுத்துப் பேசும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ``எந்தவொரு முடிவெடுத்தாலும் இரண்டு தரப்பும் கலந்து பேசித்தான் செயல்படுகின்றனர். கடந்த சில நாள்களாகக் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வருகிறார் முதல்வர். கடைவாய்ப் பல்லில் ரூட் கேனால் ட்ரீட்மென்ட் செய்ய வேண்டியுள்ளது. ரத்த நாளங்களைத் துண்டித்துச் செய்ய வேண்டிய சிறு சிகிச்சை இது. இதன் காரணமாக முகமே வீங்கிப் போய் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக எதைச் சாப்பிட்டாலும் பல் கூச்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தார். இப்படியொரு இக்கட்டான சூழலில் இப்தார் விருந்தில் கலந்துகொண்டு உணவருந்த முடியாது என்பதால் ஓய்வில் இருக்கிறார். இதை அறியாமல் இப்தார் விருந்தை முன்வைத்து சர்ச்சையைக் கிளப்பிவிட்டனர்" என்றவர்கள், 

இப்தார் விருந்து

தி.மு.க முன்னெடுக்கப் போகும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும் நம்மிடம் விவரித்தனர். ``எங்கள் தரப்பில் இருந்து 10 எம்.எல்.ஏ-களை விலைபேசிவிட்டதாக ஒரு தகவலை தி.மு.க பரப்பி வருகிறது. அதற்காக தலா 25 கோடி ரூபாய் வரையில் கொடுக்க இருப்பதாகவும் சொல்கின்றனர். 100 எம்.எல்.ஏ-க்களில் 30 பேர் தி.மு.க பக்கம் சாய்ந்தால்தான் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. 10 பேர் என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கலாம். ஒருவேளை, 30 பேரை வளைக்க வேண்டும் என்றால் பெரிய அளவில் பட்ஜெட் தேவைப்படும். எந்தெந்த எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் தி.மு.க பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என உளவுத்துறை மூலமாகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார் எடப்பாடி. அப்படிச் சந்தேகம் வருகிறவர்களை தகுதிநீக்கம் செய்வதற்கும் அவர் தயங்க மாட்டார். தற்போது தி.மு.க சார்பில் வெற்றி பெற்றிருக்கும் 13 எம்.எல்.ஏ-க்களும் ஆட்சிக் கலைப்பை விரும்ப மாட்டார்கள். இதே ஆட்சிக் காலத்தில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். மீண்டும் ஒரு தேர்தல் வருவதை தி.மு.க எம்.எல்.ஏ-க்களே ரசிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, `டீ குடிக்கும் நேரத்தில் ஆட்சியைக் கலைத்துவிடுவேன்' என ஸ்டாலினால் பேச மட்டும்தான் முடியும். நாங்கள் இந்த ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வோம்" என்கின்றனர் நிதானமாக.