`சிறையிலிருந்து வெளிய வந்ததும் பார்த்துக்கறேன்!' - ஜெய் ஆனந்த்துக்கு உறுதி கொடுத்த சசிகலா | Sasikala gave assurance to Jai Anand

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (07/06/2019)

கடைசி தொடர்பு:16:26 (07/06/2019)

`சிறையிலிருந்து வெளிய வந்ததும் பார்த்துக்கறேன்!' - ஜெய் ஆனந்த்துக்கு உறுதி கொடுத்த சசிகலா

`மக்களவைத் தேர்தலில் 15 இடங்களை உறுதியாகப் பிடித்துவிடுவோம்' எனத் தினகரன் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனதில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் சசிகலா.

`சிறையிலிருந்து வெளிய வந்ததும் பார்த்துக்கறேன்!' - ஜெய் ஆனந்த்துக்கு உறுதி கொடுத்த சசிகலா

ர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்க இருக்கும் மாற்றுத் திறனாளி வீரர் அங்கப்பனுக்கு நிதி உதவி செய்திருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த். `கடந்த வாரம் சசிகலாவைச் சிறையில் சந்தித்துப் பேசினார் ஜெய். அவர் கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவே சமூகப் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்' என்கின்றனர் அண்ணா திராவிடர் கழகத்தினர். 

ஜெய் ஆனந்த்

புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் அருகில் உள்ள லட்சுமி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்பன். இவர் திருச்சியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வீல்சேர் பிரிவில் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார். இதையடுத்து, வரும் ஜூன் 27-ம் தேதி ஸ்லோவாகியாவில் நடைபெற இருக்கும் சர்வதேச செஸ் தொடரில் பங்கேற்க இந்தியா சார்பாக தேர்வாகியிருக்கிறார் அங்கப்பன். பொருளாதாரீதியாகப் பின்தங்கிய குடும்பமாக இருப்பதால், வெளிநாடு செல்வதற்கான நிதி உதவி இல்லாமல் தவித்து வருகிறார். இதே போட்டியில் திருச்சியைச் சேர்ந்த ஜெனிதா என்பவரும் தகுதி பெற்றுள்ளார். அவர் திருச்சி போட்டியில் முதலிடம் பிடித்ததால், அரசின் நிதியுதவியுடன் ஸ்லோவாகியா செல்கிறார். அங்கப்பன் மாற்றுத் திறனாளியாக இருப்பதால் அவரை அழைத்துச் செல்வதற்குக் கூடுதல் செலவு ஆகும் என்பதால் அரசுத் தரப்பிலிருந்து எந்த உதவிகளும் வந்து சேரவில்லை. இதையறிந்து, அங்கப்பனின் வீட்டுக்கே சென்று 1 லட்ச ரூபாய் நிதியைக் கொடுத்து உதவியிருக்கிறார் போஸ் மக்கள் பணியகத்தை நடத்தி வரும் ஜெய் ஆனந்த். ஸ்லோவாகியா போட்டிக்கு இன்னும் 20 நாள்களே இருக்கும் நிலையில், இந்தத் திடீர் உதவியால் உற்சாகமடைந்திருக்கிறார் அங்கப்பன். 

ஜெய் ஆனந்த்

அண்ணா திராவிடர் கழக நிர்வாகிகளிடம் பேசினோம். ``கட்சிப் பணி ஒருபுறம் இருந்தாலும் போஸ் மக்கள் பணியகத்தின் சார்பாகப் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறோம். கஜா புயல் ஏற்பட்டபோது பல நாள்கள் உறக்கமே இல்லாமல் டெல்டா மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தோம். இதுதொடர்பாக, சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தெரியப்படுத்த முயற்சி செய்தோம். ஆனால், சில வழக்கறிஞர்களின் இடையூறு காரணமாக அவரைச் சந்திக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டது. நாங்கள் அவரைச் சந்திப்பதை சிலர் விரும்பவில்லை. இந்த நிலையில், கடந்த வாரம் சிறையில் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் ஜெய்.

சசிகலா

இந்தச் சந்திப்பின்போது, `குடும்பத்தில் எல்லோருக்கும் தேவையான உதவிகளைச் செய்துவிட்டேன். உனக்குதான் எதையும் செய்யவில்லை. சமூக சேவைப் பணிகளை நல்லபடியாகச் செய்து வா. சிறையிலிருந்து வந்ததும் தேவையானதைச் செய்து கொடுக்கிறேன்' என உறுதி கொடுத்திருக்கிறார். இதைப் பற்றி இன்று புதுக்கோட்டையில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது, `சின்னம்மாவைப் பார்த்துட்டு வந்ததுல ரொம்ப சந்தோஷம். புது உற்சாகம் கிடைச்சிருக்கு. நல்லபடியாக சமூகப் பணிகளை செய்யச் சொல்லியிருக்கிறார். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். அது என்ன என்று நானும் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை' எனப் பேசினார். 

பரப்பன அக்ரஹாரா சிறை

`மக்களவைத் தேர்தலில் 15 இடங்களை உறுதியாகப் பிடித்துவிடுவோம்' எனத் தினகரன் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனதில் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார் சசிகலா. `தினகரன் சொன்னதை நம்பி ஏமாந்துவிட்டார்' எனச் சிறை வளாகத்தில் சில ஆதங்கக் குரல்களையும் கேட்க முடிந்தது. சசிகலா அறிவுறுத்தலின் அடிப்படையில் சமூகப் பணிகளைத் துரிதப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் ஜெய். சிறைச் சந்திப்பை அ.ம.மு.க நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்" என்கின்றனர் இயல்பாக.