`அந்தக் கட்சியைப்போல் அ.தி.மு.க ஆகிவிடக் கூடாது!' - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ஸை எச்சரிக்கும் ஜெய் ஆனந்த் | Jai anand warns EPS and OPS

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/06/2019)

கடைசி தொடர்பு:15:00 (10/06/2019)

`அந்தக் கட்சியைப்போல் அ.தி.மு.க ஆகிவிடக் கூடாது!' - ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ஸை எச்சரிக்கும் ஜெய் ஆனந்த்

``துணை முதல்வர் ஓ.பி.எஸ் குடும்ப அரசியல் செய்யவில்லை. ஒரு குடும்பத்தில் இருந்து எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது தவறில்லை. ஆனால், கொள்ளையடிப்பதற்காக அரசியலுக்கு வந்தவர்களுக்குத்தான் குடும்ப அரசியல் செய்வது உறுத்தலாக இருக்கும்'' எனத் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் தெரிவித்தார்.

ஜெயலலிதா சிலைக்கு ஜெய் ஆனந்த் மாலை அணிவித்தார்

அண்ணா திராவிடர் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதன் மாநில இளைஞரணி பொதுச் செயலாளரும் திவாகரனின் மகனுமாகிய ஜெய் ஆனந்த் தஞ்சாவூரில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதற்காக வந்த ஜெய்ஆனந்துக்கு அவரது ஆதரவாளர்கள் தொல்காப்பியர் சதுக்கத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர், 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு இரண்டு சக்கர வாகனத்தில் அவரின் காருக்கு முன்னால் ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அப்போது இளைய தளபதி என ஜெய் ஆனந்தைப் புகழ்ந்து கோஷமிட்டனர். பின்னர், ரயிலடியில் அமைந்துள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``அ.தி.மு.க-வில் குழப்பம் ஏற்பட்டு ஒன்றரை வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் தீரவில்லை. இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுவது ஏற்புடையதல்ல. குன்னம் தொகுதி எம்.எல்.ஏ குடும்ப அரசியலை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியிருக்கிறார். அ.தி.மு.க-வில் உள்ள ஒன்றரை கோடி பேரில் அவரும் ஒருவர். குடும்ப அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனச் சொல்கிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவை செய்வதற்கு. ஏற்கெனவே அப்பா அரசியலுக்கு வந்து சேவை செய்துகொண்டிருக்கும்போது மகனும் வந்து சேவை செய்வது தவறில்லை. அப்படி செய்யக்கூடாது என சட்டம் இருக்கிறதா. கொள்ளையடிக்க அரசியலுக்கு வருபவர்கள் குடும்ப அரசியலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் ஜெய் ஆனந்த்

ஓ.பி.எஸ் குடும்ப அரசியல் செய்வதாகத் தெரியவில்லை. கொள்ளையடிக்க நினைப்பவர்களுத்தான் இவை உறுத்தலாக இருக்கும். அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துவிட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் காமராஜருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நிலை என்னவென்று தெரியும்? இதே நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க-வும் காங்கிரஸ் கட்சியைப்போல் மாறிவிடும். ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயலலிதாவின் சக்திகளை ஒருங்கிணைக்க வேண்டும். அப்படிச் செய்வதுபோல் தெரியவில்லை'' எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க