`வழக்கை வாபஸ் வாங்குங்கள்' என்றார் எடப்பாடி!  - ராஜன் செல்லப்பாவுக்குக் கரம் நீட்டும் கே.சி.பி | K.C.Palanisamy explains ADMK single leadership strategy

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (10/06/2019)

கடைசி தொடர்பு:17:44 (10/06/2019)

`வழக்கை வாபஸ் வாங்குங்கள்' என்றார் எடப்பாடி!  - ராஜன் செல்லப்பாவுக்குக் கரம் நீட்டும் கே.சி.பி

அ.தி.மு.க-வை இயக்கியது பா.ஜ.க என்பதால்தான் இப்படியொரு தேர்தல் தோல்வி ஏற்பட்டது. இனியும் இவர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பா.ஜ.க ஆதரிக்காது. உட்கட்சி விவகாரங்களிலும் தலையிட மாட்டார்கள் என நினைக்கிறேன்.

`வழக்கை வாபஸ் வாங்குங்கள்' என்றார் எடப்பாடி!  - ராஜன் செல்லப்பாவுக்குக் கரம் நீட்டும் கே.சி.பி

`கொடி பிடிக்கக் கூடிய தொண்டன் கட்சியின் தலைமையை முடிவு செய்வான்' எனக் கடந்த 2 ஆண்டுகாலமாகப் போர்க்குரல் உயர்த்தி வருகிறார் அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அரசியல் செய்து வருகிறார். `எம்.ஜி.ஆருடன் இருக்கும் புகைப்படத்தை இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் காட்டட்டும்' எனப் பகிரங்கமாகச் சவால்விட்டவர். தற்போது அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை முழக்கம் பிரதானமாக எதிரொலிப்பதால், கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். 

ராஜன் செல்லப்பாவின் கோரிக்கை, அ.தி.மு.க-வில் குழப்பத்தை உருவாக்கியிருக்கிறதே? 

கே.சி.பழனிசாமி

``இதை நான் குழப்பமாகப் பார்க்கவில்லை. ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். இந்தக் குரல்கள் பன்னீருக்காகவா... அல்லது எடப்பாடிக்காவா என்ற ஆராய்ச்சிக்குள் நான் போக விரும்பவில்லை. கடந்த 2017 செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க-வின் சட்டவிதிகளை மாற்றினார்கள். பொதுச் செயலாளர் பதவிக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குக் கொடுத்தார்கள். அடுத்ததாக அடிமட்டத் தொண்டர்களால் வாக்களிக்கப்பட்டு பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற உரிமையைப் பறித்துவிட்டார்கள். இதை எதிர்த்து கடந்த இரண்டாண்டுக் காலமாக தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு எனத் தொடர்ந்து போராடி வருகிறேன். `எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறேன். தற்போது எழுந்துள்ள ஒற்றைத் தலைமை கோரிக்கை வரவேற்கத்தக்கது. மிகத் தேவையான ஒன்று". 

பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக நீங்கள் தொடர்ந்த வழக்கு என்ன நிலையில் இருக்கிறது? 

``தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பாக மனு கொடுத்தபோது, `டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருப்பதால் முடிவெடுக்க முடியவில்லை' எனக் கூறியிருந்தது. இதற்கு இடையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. அந்தத் தீர்ப்பிலும், `அடிப்படை உறுப்பினர்கள்தான் அண்ணா தி.மு.க தலைமையை முடிவு செய்ய வேண்டும் என்ற வரிகளை நீக்கியது தவறு. அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல' என நீதியரசர்கள் கூறியிருந்தனர். `தொண்டர்களின் உரிமையைப் பறிக்க முடியாது' என்ற கருத்தை முன்வைத்திருந்தனர். இதனையொட்டி, `சட்டவிதிகளைத் திருத்தம் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என உத்தரவிடுங்கள்' எனக் கூறி மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தேன்.

ராஜன் செல்லப்பா

அதில், `இடைக்கால மனுவாக வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பி ஃபார்ம் எனப்படும் விண்ணப்பத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் கையொப்பம் போடக் கூடாது' எனக் குறிப்பிட்டிருந்தேன். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எதிராக நான் இல்லை. பொருளாளர், அவைத் தலைவர் என்ற பெயர்களில்கூட கையொப்பத்தைப் போடட்டும் என்பதைக் கோரிக்கையாக வைத்திருந்தேன். இந்த வழக்கை 4, 5 வாய்தாக்களாக இழுத்தடித்த பிறகு, `நாங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டோம். இப்போது மாற்றினால் தேர்தல் நடைமுறைகளைப் பாதிக்கும்' என ஆளும்கட்சி தரப்பில் கூறிவிட்டனர். நான் போட்ட 3 வழக்குகளும் அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது. இந்த வழக்கு ஜூலை மாதம் வரவிருக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஒற்றைத் தலைமை முழக்கத்தைப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்."

எடப்பாடி பழனிசாமி

இரட்டை இலைக்கான அதிகாரம் தற்போது ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கையில் இருக்கிறது. `ஒற்றைத் தலைமை' என வரும்போது இரட்டை இலை முடங்குவதற்கான சூழல்கள் வராதா? 

``இரட்டை இலையை ஓ.பி.எஸ்-ஸிடமும் ஈ.பி.எஸ்-ஸிடமும் தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. மதுசூதனன் அவைத் தலைவராக இருக்கும் ஒன்றுபட்ட அ.தி.மு.க-வுக்குக் கொடுத்துள்ளனர். எனவே, இரட்டை இலைக்கு ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ உரிமை கொண்டாட முடியாது. தற்போது பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மத்தியில் ஆட்சி இருக்கிறது. எனவே, இதைத் தடை செய்துவிடலாம் என நினைத்தால் நடக்காது. தமிழகத்தில் பா.ஜ.க தோல்விக்கும் அடிப்படைக் காரணம் இதுதான். `மோடி கூறியதால்தான் இணைப்பு முயற்சிக்குச் சம்மதம் தெரிவித்தேன்' என ஓ.பி.எஸ் பேசினார். `என்னுடைய ஆலோசனைப்படிதான் தர்மயுத்தம் நடத்தினார்' என்றார் குருமூர்த்தி. ராஜேந்திர பாலாஜியோ, `எல்லாம் மேலே இருக்கிறவர் பார்த்துக்குவார்' எனக் கூறினார். அ.தி.மு.க-வை இயக்கியது பா.ஜ.க என்பதால்தான் இப்படியொரு தேர்தல் தோல்வி ஏற்பட்டது. இனியும் இவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு பா.ஜ.க ஆதரிக்காது. உட்கட்சி விவகாரங்களிலும் தலையிட மாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த முறை மத்திய அமைச்சரவையில், பாராட்டுக்குரியவர்களைத்தான் நியமித்திருக்கிறார் மோடி. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை எல்லாம் நிராகரித்துவிட்டார். அப்படியிருக்கும்போது, இவர்கள் செய்யும் தவறுகளுக்கு இனி டெல்லி பொறுப்பேற்காது என நினைக்கிறேன்". 

கே.சி.பழனிசாமி

அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த 12-ம் தேதி மா.செ.க்கள் கூட்டம் நடக்க இருக்கிறதே? 

``அனைவரையும் அழைத்துப் பேச உள்ளனர். `பொதுக்குழுவில் விவாதிப்போம்' எனக் கூறி அத்துடன் இந்தக் கூட்டத்தை நிறைவு செய்வார்கள். இதைத் தாண்டி சர்ச்சைகள் வரிசை கட்டுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். 2017 செப்டம்பர் மாதம், உயர்மட்டக்குழு, ஒருங்கிணைப்பாளர், இணை, துணை எனப் பதினைந்து பேர் கொண்ட குழு கட்சியை வழிநடத்தும் என்றார்கள். அ.தி.மு.க விதிகளின்படி, முதலில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும். இதற்கான சட்டதிட்டங்களை வரையறுத்து, அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும். இதில் தினகரனை நம்பிச் சென்றவர்கள் சிலர் இருக்கிறார்கள். பன்னீர்செல்வத்தை நம்பி ஏமாந்து போனவர்களும் இருக்கிறார்கள். எடப்பாடியைப் பொறுத்தவரையில் 123 எம்.எல்.ஏ-கள்தான் கட்சி என நினைத்துக்கொண்டிருக்கிறார். அதைத் தாண்டி மற்றவர்களுக்கு எந்த வேலைகளும் நடப்பதில்லை. அனைவரையும் அனுசரித்துச் செல்லக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஆட்சி என்பது வேறு கட்சி என்பது வேறு. அமைச்சர்களே ஆதிக்கம் செலுத்த நினைப்பது தவறு. ஆட்சி முடிவடைய இன்னும் 18 மாதங்கள்தான் இருக்கின்றன. இன்றைக்கு என்னதான் தடுத்து நிறுத்தினாலும், தற்போதுள்ள எம்.எல்.ஏக்களில் 10 பேருக்கு சீட் கிடைத்தாலே பெரிய பெரிய விஷயம். அவர்களும் பன்னீர்செல்வம் போலச் செலவழித்து வெற்றி பெற முடியுமா எனவும் தெரியவில்லை. இதையெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்கள் யோசிக்கும்போது கட்சிக்குள் அழுத்தம் அதிகரிக்கும். பிரச்னைகள் அதிகமாகும்". 

எடப்பாடியுடன் கே.சி.பழனிசாமி

தேர்தலுக்கு முன்னதாக, நீங்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியதே? 

``ஆமாம். `தேர்தல் வருகிறது, நாம் சந்திக்க வேண்டும்' என அழைத்தனர். `முதல்வர் அறையில் அமர்ந்து பேசலாம்' என்றார்கள். அங்கு 7,8 அமைச்சர்கள் இருந்தார்கள். `நாம் சாவகாசமாக அமர்ந்து பேசுவோம்' என்றார் எடப்பாடி. தொடர்ந்து என்னிடம் பேசியவர்கள், `நீங்கள் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும். அப்போதுதான் கட்சியிலிருந்து உங்களை நீக்கியதை ரத்து செய்வார்கள்' என்றனர். இதை விரும்பாமல், `நான் போராடித்தான் அனைத்தையும் பெற்றிருக்கிறேன். தொண்டர்களுக்காகத்தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வழக்கை வாபஸ் பெற மாட்டேன்' என உறுதியாகக் கூறிவிட்டேன். `தேர்தல் காலத்தில் கட்சியை பலவீனப்படுத்தக் கூடாது என்பதால் சுமுகமாகப் போகலாம்' என நினைத்துத்தான் சந்தித்தேன். எனக்குக் கட்சிப் பதவியோ ஆட்சியோ தேவையில்லை. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள். அ.தி.மு.க-வின் ஒட்டுமொத்த தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைமையை உருவாக்கிக் காட்டுகிறேன். எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். கட்சி நன்றாக இருந்தால் போதும். அப்போதுதான் அம்மா நினைத்தது போல இந்தக் கட்சி 100 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும்".