ரெடியான ஃபைல்.. அமித் ஷா கையில் முடிவு! - தமிழிசை தலைமை தப்புமா? | BJP may take action against its TN head Tamilisai, says sources

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (11/06/2019)

கடைசி தொடர்பு:12:20 (11/06/2019)

ரெடியான ஃபைல்.. அமித் ஷா கையில் முடிவு! - தமிழிசை தலைமை தப்புமா?

தமிழிசை

உட்கட்சி பூசலால் பதவியை இழப்பது அரசியலில் சகஜம். ஆனால், சொந்த மகனின் அதிரடியால் தமிழக பி.ஜே.பி தலைவர் பதவியை தமிழிசை இழக்க நேரிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார் தமிழிசை சௌந்தரராஜன். அப்போது அவருடை மகன் சுகநாதன் திடீரென தமிழிசை பின்னால் நின்று `பாசிச பி.ஜே.பி ஒழிக' என்று கோஷமிட தொலைக்காட்சி நேரலையில் அந்தச் சம்பவம் ஒளிபரப்பாகியது.

மேலும், பி.ஜே.பி தலைவரின் மகனே அந்தக் கட்சிக்கு எதிராகக் கொந்தளித்துள்ளார் என்று சமூகவளைதளங்களில் கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. தன் மகனின் இந்தச் செயலால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை, என்ன செய்வது என்று புரியாமல் விழித்துவந்தார். இந்தச் சம்பவம் நடைபெற்ற சில மணிநேரங்களில் தமிழிசைக்கு எதிராக உள்ள பி.ஜே.பி அணியினர் இந்த வீடியோ க்ளிப்பை டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளார்கள். டெல்லி பி.ஜே.பி தலைமை ஆரம்பத்தில் இதுகுறித்து பெரிதாக கண்டுகொள்ளாவிட்டாலும், தொடர்ந்து இதுகுறித்த புகார்கள் வரவே விசாரணை படலத்தை ஆரம்பித்துள்ளது. 

அமித் ஷா

இந்த நிலையில், தமிழிசை தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், `திருமணம் ஒன்றுக்காக குடும்பத்தினருடன் திருச்சி செல்ல இருந்தநேரத்தில் உத்தரப்பிரதேச துணைமுதல்வர் தமிழகம் வருகை தர இருந்தார். இதனால் எனது திருச்சி பயணத்தை நான் ரத்து செய்துவிட்ட கோபத்தில், என் மகன் இவ்வாறு செய்துவிட்டார்' என்று தமிழிசை சொல்லியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழிசை பயணம் செய்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் பி.ஜே.பிக்கு எதிராக கோஷமிட்டதால் அவரைக் கைது செய்து பாஸ்போர்ட்டை முடக்க வைத்தார் தமிழிசை. ஆனால், தன் மகன் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருக்கிறார். தமிழிசை விவகாரத்தை பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவும் கண்காணித்து வருகிறார். ஏற்கெனவே தமிழகத்தில் பி.ஜே.பி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் பி.ஜே.பிக்கு அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவுடன் தமிழிசை

எனவே, பி.ஜே.பி தலைமை தமிழிசை மீது ஏகக்கடுப்பில் இருக்கிறதாம். இதனால் டெல்லியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த பி.ஜே.பி மூத்த நிர்வாகி ஒருவரிடம் இதுகுறித்து விசாரிக்கச் சொல்லியுள்ளார் அமித் ஷா. அவரும் தமிழகத்தில் உள்ள பி.ஜே.பி நிர்வாகிகளிடம் தமிழிசை செயல்பாடு மற்றும் அவருக்கும் மகனுக்கு இடையே உள்ள பிரச்னை போன்றவற்றை விசாரித்துத் தனி ஃபைல் ஒன்றை நேற்று மாலை ரெடி செய்து இருக்கிறார். இந்த ஃபைல் அமி்த்ஷா வசம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த பைலின் மீது அமித் ஷா நடவடிக்கை எடுக்க முடிவு செய்தால், முதலில் தமிழிசையின் தலைவர் பதவிக்கே ஆபத்து வரும் என்கிறார்கள் பி.ஜே.பி-யினர். இந்த தகவல் தமிழிசை தரப்புக்கு தெரிந்திருப்பதால் அமித் ஷாவை சந்தித்து விளக்கம் கொடுக்கத் தயாராகிவருகிறார் தமிழிசை. ஆனால், அந்த பி.ஜே.பி மூத்த நிர்வாகியிடம் தமிழிசை மீது ஏற்கெனவே இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களையும் விளக்கினால் தமிழிசையின் எந்த விளக்கமும் டெல்லியில் செல்லுபடியாகாது என்கிறார்கள்.