`வலி வரும்போதுதான் மற்றவர்களுக்குப் புரிகிறது!' - சசிகலாவை முன்னிறுத்தும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் | ADMK MLA talks about single leadership issue

வெளியிடப்பட்ட நேரம்: 13:39 (12/06/2019)

கடைசி தொடர்பு:13:53 (12/06/2019)

`வலி வரும்போதுதான் மற்றவர்களுக்குப் புரிகிறது!' - சசிகலாவை முன்னிறுத்தும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

ஒரு கட்சியில் எப்படி இரட்டைத் தலைமை இருக்க முடியும். தற்போது எழுந்திருக்கும் அதிருப்தியை எடப்பாடியால் சமாளிக்க முடியும் என்கிறார்கள். அப்படியென்றால் ஓ.பி.எஸ் திறமை இல்லாதவரா?

`வலி வரும்போதுதான் மற்றவர்களுக்குப் புரிகிறது!' - சசிகலாவை முன்னிறுத்தும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

துரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எழுப்பிய அதிருப்தி குரலின் விளைவாக, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. `புதிய பொதுச் செயலாளர் எடப்பாடியார்' என்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் இருந்தாலும், கூட்டம் இயல்பாக நடந்து முடிந்திருக்கிறது. அதேநேரம், சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்களான விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர், சுயநலமில்லாத புதிய தலைமை வேண்டும் என்ற குரலை முன்வைத்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். 

பிரபு

ஒற்றைத் தலைமை முழக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

``நல்ல தலைமை இல்லை என்பது அவரவர்களுக்கு வலி வரும்போதுதான் தெரிகிறது. தன்னுடைய மகன் போட்டியிட்டுத் தோற்ற பிறகு, வலுவான தலைமை வேண்டும் எனப் பேசத் தொடங்கியிருக்கிறார் ராஜன் செல்லப்பா. அவர் குறிப்பிட்டுச் சொல்வது சின்னம்மாவை (சசிகலா) மையப்படுத்தித்தான் என நினைக்கிறேன்." 

`சுயநலமில்லாத புதிய தலைமை வேண்டும்' என்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது? 

``ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய மகனின் வெற்றிக்கான அனைத்தையும் செய்தார். பா.ஜ.க-வின் துணையோடு வாக்கு பதிவு எந்திரத்தை மாற்றியது உட்பட வெற்றிக்காக அனைத்தையும் செய்தார். தன் மகனின் வெற்றிக்காகப் பாடுபட்டவர், அ.தி.மு.க-வின் மற்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏன் பாடுபடவில்லை. நல்ல தலைமை என்பது பொதுவானதாக இருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்தபோது, பல எம்.எல்.ஏ-க்களை உருவாக்கினார். பல அமைச்சர்களை உருவாக்கினார். கட்சியின் உறுப்பினர்களை ஒன்றரை கோடி என்ற அளவுக்கு உயர்த்தினார். தற்போதைய சூழலில் கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடிய நல்ல தலைமை வேண்டும். தற்போது பதவியில் உள்ளவர்கள் சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள். ராஜன் செல்லப்பாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்." 

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்படியொரு குரல் ஏன் வருகிறது? 

``தன்னுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான், இத்தனை நாள் அமைதியாக இருந்தார்கள். `எம்.எல்.ஏ பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம்' என நினைத்துக்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். ராஜன் செல்லப்பா மகன் தோற்ற பிறகுதான், இப்படியொரு உணர்வு வருகிறது. இப்படியே போனால் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அனைவரும் பயப்படத் தொடங்கிவிட்டார்கள். இத்தனை நாள் பா.ஜ.க-வைப் பார்த்து பயந்துகொண்டிருந்தார்கள். சி.வி.சண்முகம் அளித்த பேட்டியிலும், `பா.ஜ.க-வால்தான் தோற்றோம்' என்றார். `இனியும் பா.ஜ.க-வுக்கு பயந்துகொண்டு ஏன் இருக்க வேண்டும்?' என்ற கேள்வி, உண்மையான தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அம்மாவால் வளர்க்கப்பட்ட கட்சி இது. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், சுயநலமிகள் இருக்கக் கூடாது.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

ஒற்றைத் தலைமை என்றால் அது சின்னம்மாவால் மட்டும்தான் முடியும். இப்போதுள்ள முதல்வர் உட்பட அனைத்து நிர்வாகிகளும், `நீங்கள்தான் பொதுச் செயலாளராகப் பதவியேற்க வேண்டும்' எனக் கூறி, அவருடைய காலில் விழுந்து அழைத்துச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் போயஸ் கார்டன் வீட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள். பா.ஜ.க ஆட்சியின் நெருக்கடி காரணமாக, சின்னம்மாவைக் கட்சியை விட்டு நீக்கினார்கள். தற்போதுள்ள சூழலில் கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றால் சின்னம்மா தலைமையேற்க வேண்டும்." 

சசிகலா

சசிகலா சிறையில் இருக்கிறார். அவர் எப்போது வருவார் எனத் தெரியவில்லை. அவரை முன்னிறுத்துவது சரியானதா? 

``இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் இருக்கிறார். இன்னும் 6 மாதம் காத்திருந்தால் போதும். நாள்கள் கடந்து போகும்போது, அனைவரும் சின்னம்மா ஆதரவு நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள். தற்போது கட்சிப் பொறுப்பில் உள்ளவர்களிடம் தலைமைப் பண்பு கிடையாது. அம்மா சி.எம்மாக இருந்தபோது, போயஸ் கார்டன் தேடி வந்து பார்த்துவிட்டுப் போனவர் மோடி. இன்று இவர்கள் டெல்லிக்குச் சென்று மோடியைப் பார்த்து வருகிறார்கள். ஒரு கட்சியில் எப்படி இரட்டைத் தலைமை இருக்க முடியும்? தற்போது எழுந்திருக்கும் அதிருப்தியை எடப்பாடியால் சமாளிக்க முடியும் என்கிறார்கள். அப்படியென்றால், ஓ.பி.எஸ் திறமை இல்லாதவரா. 11 பேரைக் கையில் வைத்துக்கொண்டு, எடப்பாடி உட்பட அனைவரையும் தன் பின்னால் நிற்க வைத்தவர்தான் பன்னீர்செல்வம். அதிகாரத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார் ஓ.பி.எஸ்." 

சசிகலா

தலைமைக்கு எதிராகப் பேசுவதால், மீண்டும் உங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை பாயுமா? 

``கட்சியின் உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. தொண்டர்கள் விரும்புகிறவர்தான் முதல்வராக வர வேண்டும் எனக் கூறுகிறேன். இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க இருந்தது. இந்தக் கட்சியை இன்னும் சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டும் என விரும்புகிறேன். சின்னம்மா சிறையில் இருந்து வந்துவிட்டால், இவர்கள் அனைவரும் அவரிடம் போய் நிற்பார்கள். இது நடக்கத்தான் போகிறது".