`3 இடங்களில் 1 எடப்பாடிக்கு, 2 பன்னீருக்கு!' - முடிவுக்கு வந்துவிட்டதா ஒற்றைத் தலைமை சர்ச்சை? | Is this the end to Single Head Controversy in ADMK?

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (12/06/2019)

கடைசி தொடர்பு:15:56 (12/06/2019)

`3 இடங்களில் 1 எடப்பாடிக்கு, 2 பன்னீருக்கு!' - முடிவுக்கு வந்துவிட்டதா ஒற்றைத் தலைமை சர்ச்சை?

`ராஜன் செல்லப்பாவின் குரல் யாருடையது?' என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், பொதுக்குழு உறுப்பினர்களிடையே எடப்பாடிக்கு ஆதரவு திரட்டும் வேலைகளும் நடந்து வருகின்றன.

`3 இடங்களில் 1 எடப்பாடிக்கு, 2 பன்னீருக்கு!' - முடிவுக்கு வந்துவிட்டதா ஒற்றைத் தலைமை சர்ச்சை?

`ஒற்றைத் தலைமை' சர்ச்சை குறித்துப் பேசாமலேயே கலைந்திருக்கிறது அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம். `தற்போதுள்ள நிலையில் இதைப் பற்றிப் பேசினால் ஆட்சிக்குச் சிக்கல் ஏற்படும் என்பதை முதல்வரும் துணை முதல்வரும் உணர்ந்துள்ளனர். இதுதொடர்பாக நேற்றே சமரசம் ஏற்பட்டுவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

புதுடெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர் தமிழக அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும். இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்துள்ளனர். தமிழக நலத் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானாலும், அ.தி.மு.க-வுக்குள் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சை குறித்துப் பேசப்பட்டதாகச் சொல்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். `எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என டெல்லி மேலிடத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு நடந்த விவாதத்திலும், `ஒற்றைத் தலைமை குறித்து சர்ச்சையை எழுப்புவது அவசியமற்றது. இரட்டைத் தலைமை நீடிப்பதே ஆட்சிக்கு நல்லது. அதிருப்தியில் இருப்பவர்களுக்கும் புரியும்படி சொல்லிவிடுங்கள்' என முக்கிய நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார். இதையடுத்து, நேற்று இரவே சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு நிலவரத்தை விவரித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அதிருப்தியில் இருப்பவர்களுக்கு சில வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் பயனாக இன்று நடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், 5 தீர்மானங்களை நிறைவேற்றியதோடு அமைதியாகக் கலைந்துவிட்டனர். 

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை பலத்தோடு இருக்கிறார். தர்மயுத்த காலத்தில் பன்னீர்செல்வம் பக்கம் வந்தவர்களில் பலர், தற்போது எடப்பாடியோடு நெருக்கம் ஆகிவிட்டனர். கொங்கு லாபியைப் பொறுத்தவரையில், தங்களுக்கான நேரம் வரும் வரையில் பொறுமையோடு காத்திருப்பது வழக்கம். இயல்பிலேயே கோபக்காரரான எடப்பாடி பழனிசாமி, கடந்த சில மாதங்களாக நிர்வாகிகளிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். அவரைப் பொறுத்தவரையில், ஆட்சி தொடர்ந்து நீடிப்பதற்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களும் அவசியம் என நினைக்கிறார். `ராஜன் செல்லப்பாவின் குரல் யாருடையது?' என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், பொதுக்குழு உறுப்பினர்களிடையே எடப்பாடிக்கு ஆதரவு திரட்டும் வேலைகளும் நடந்து வருகின்றன. `தற்போதைக்குப் பொதுச் செயலாளர் தேவை என்ற குரல் அவசியமற்றது, இரட்டைத் தலைமையே தொடரும்' என நிர்வாகிகள் பேட்டி அளித்தாலும் கட்சிக்குள் தன்னுடைய பிடியைப் பலப்படுத்தும் வேலைகளைத் தொடர்ந்து வருகிறார் முதல்வர்" என விவரித்தவர்கள், 

ராஜன் செல்லப்பா

``இரட்டை இலைச் சின்னம் நீடிக்க வேண்டும் என்றால், பன்னீர்செல்வத்தின் தயவு அவசியம் என்பதை முதல்வர் உணர்ந்து வைத்திருக்கிறார். `ஒற்றைத் தலைமை முழக்கமும் அதனையொட்டி நிர்வாகிகள் சிலர் தொடர்ச்சியாகப் பேசி வருவதும் தற்போதைய நிலையில் தேவையில்லை' என நினைக்கிறார். இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க வரக் கூடிய ராஜ்ய சபா தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அ.தி.மு.க-வுக்கு சட்டசபையில் உள்ள பலத்தின்படி 3 மாநிலங்களவை எம்.பி-கள் கிடைக்க உள்ளனர். இதில், ஓர் இடத்தை அன்புமணிக்கு ஒதுக்குவதில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு உடன்பாடில்லை. இதைப்பற்றிப் பேசும்போது,

`அவர்கள் ஒன்றும் வெறுமனே நம்முடைய கூட்டணிக்கு வரவில்லையே...அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டோம். இந்த ஓர் இடத்தை ஒதுக்குவதில் நியாயமில்லை' என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளனர். அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கக் கூடிய 3 ராஜ்ய சபா இடங்களில் ஒன்றை எடப்பாடி பழனிசாமிக்கும் மற்ற 2 இடங்களைப் பன்னீர்செல்வம் தரப்புக்கும் ஒதுக்குவது குறித்த பேச்சுகளும் நடந்து வருகின்றன. ஓ.பி.எஸ் தரப்புக்கு ஒதுக்கக்கூடிய 2 இடங்களில் ஒன்றை அதிருப்தி நிர்வாகிகளில் யாருக்காவது வழங்கப்படலாம் எனவும் சொல்கின்றனர். இதன் எதிரொலியாகவே இன்று நடந்த கூட்டத்தில் எந்தவித சர்ச்சையும் ஏற்படவில்லை. கட்சியின் பொதுக்குழு கூட்டப்படும்போது, பொதுச் செயலாளர் பதவி குறித்த விவாதங்கள் கிளம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்கின்றனர் நிதானமாக. 

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஆகியவற்றைப் பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதம் நடந்துள்ளது. `எந்தப் பிரச்னை என்றாலும் தலைமையைச் சந்தித்துப் பேசுங்கள். ஊடகங்களில் பேச வேண்டாம்' என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரும், `கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக விவாதித்தோம். அனைவரும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். ஒற்றைத் தலைமை கோரிக்கை வருவதற்கு வாய்ப்பில்லை' என்றார். `அதிருப்தி நிர்வாகிகளுக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டாலும், பொதுக்குழு கூடுவதற்குள் மீண்டும் ஒற்றைத் தலைமை முழக்கம் எழுவதற்கே வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.