‘பிரியங்கா முதல்வரானால்தான் எங்கள் பலம் தெரியும்’ - காங்கிரஸுக்கு நிர்வாகிகள் வேண்டுகோள் | Congress workers demanded Priyanka Gandhi as chief ministerial candidate for UP assembly election

வெளியிடப்பட்ட நேரம்: 08:58 (13/06/2019)

கடைசி தொடர்பு:08:58 (13/06/2019)

‘பிரியங்கா முதல்வரானால்தான் எங்கள் பலம் தெரியும்’ - காங்கிரஸுக்கு நிர்வாகிகள் வேண்டுகோள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கடும் தோல்வியை சந்தித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநிலங்களிலும் தற்போது தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இந்த விவகாரம் ஒரு புறம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

காங்கிரஸ்

இந்த நிலையில், நேற்று முன் தினம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தோல்விக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதே கூட்டத்தில், ‘வரும் 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரியங்கா காந்தி

அதுமட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள 12 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உ.பி-யில் முன்னர் எம்.எல்.ஏ-க்களாக இருந்த 11 பேர், தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி-யாக தேர்வாகியுள்ளனர். மேலும், அந்த அமைச்சரவையில் இருந்து ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பிரியங்கா காந்தி

இதுபற்றிப் பேசிய முன்னாள் வாரணாசி எம்.பி ஆஜேஷ் மிஸ்ரா, ``ஆம், 2022-ம் ஆண்டு நடக்கவுள்ள உ.பி சட்டமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். ஏனெனில் உ.பி-யில் அவர் முதல்வராக அறிவிக்கப்பட்டால் மட்டுமே எங்கள் கட்சியில் பலம் தெரியும். ஆனால், எங்களின் கோரிக்கைக்கு பிரியங்கா மற்றும் கட்சித் தலைமையிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால், பிரியங்கா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை உள்ளது. 

பிரியங்கா காந்தி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சற்று மோசமான தோல்வியையே சந்தித்துள்ளது. இதற்குப் பலவீனமான வேட்பாளர்களும் ஒரு காரணம். கட்சியை மறு கட்டமைப்பு செய்து 12 தொகுதி இடைத்தேர்தலில் வலுவான வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும். கட்சி அனைத்து நிலைகளிலும் வலுவாக உள்ளது என்பதை வேட்பாளர்களின் தேர்வு உறுதிப்படுத்த வேண்டும். உ.பி கிழக்குப் பகுதியில் உள்ள ஆறு காலி தொகுதிகளின் வேட்பாளரைப் பிரியங்காதான் முடிவு செய்வார்” எனக் கூறியுள்ளார்.