`காலம் மாறிடுச்சு; நாமதான் போய் பார்க்கணும்!’ - எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் | Meet general public on a regular basis - Stalin advised to party members

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (13/06/2019)

கடைசி தொடர்பு:10:47 (13/06/2019)

`காலம் மாறிடுச்சு; நாமதான் போய் பார்க்கணும்!’ - எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

``நமக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்கத் தவறியவர்கள், வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கும் சேர்த்து பணியாற்ற வேண்டும்.  இப்போது காலம் மாறிவிட்டது அரசியல்வாதிகள்தான் மக்களைச் சந்திக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் மக்கள் பிரச்னைகள் குறித்த ரிப்போர்ட்டை எனக்குக் கொடுக்க வேண்டும். இது வேண்டுகோள் இல்லை கட்டளை” என்று மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது  பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் விழா இரண்டையும் ஒருசேர, பொள்ளாச்சியில் மாபெரும் பொதுக்கூட்டமாக நடத்தி முடித்துள்ளது தி.மு.க. பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு அருகே நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், `` ஜூன் 3-ம் தேதியோடு, கருணாநிதி பிறந்தநாள் முடிந்துவிடவில்லை. அடுத்த ஜூன் 3-ம் தேதி வரும்வரை கருணாநிதியின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடக்கூடிய திராணியும் தெம்பும் நமக்கு இருக்கிறது. உலகத் தமிழர்களுக்காக உழைத்த தலைவர் அவர்.  கருணாநிதி பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் அதேநேரத்தில்,  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் நமக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில், எப்படி  வாக்கு கேட்க ஓடோடி வந்தேனோ... அதேபோல, வள்ளுவர் கூற்றுப்படி நன்றி மறவாமல் நன்றி தெரிவிக்கவும் ஓடோடி வந்திருக்கிறேன். 

மு.க.ஸ்டாலின்

நமக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்கத் தவறியவர்கள், வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று சிந்திக்கக்கூடிய அளவுக்கும் சேர்த்து பணியாற்றப்போகிறோம், குரல் கொடுக்கப்போகிறோம். இப்போது  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் மக்களைச் சந்தித்து மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அது குறித்த ரிப்போர்ட்டை எனக்குத் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதை வெறும் அறிவிப்பாகச் சொல்லவில்லை. கட்டளையிட்டிருக்கிறேன். 

இப்போது காலம் மாறிவிட்டது. அரசியல்வாதிகளைத் தேடி மக்கள் வரக் கூடாது மக்களைத் தேடித்தான் அரசியல்வாதிகள் செல்ல வேண்டும். அதை மட்டும் செய்தால் போதும், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணிக்கு எப்படி மரண அடி கொடுத்தார்களோ அதேபோல, விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மரண அடி கொடுப்பார்கள். நம் மீது நம்பிக்கை வைத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குப் பெரும் வெற்றியை அளித்த தமிழக மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் நம் உறுப்பினர்கள் வாதாட வேண்டும்; போராட வேண்டும்.

கொங்கு மண்டலம் அ.தி.மு.க-வின் கோட்டை என்று சொல்லி வந்தார்கள். அதை முறியடித்து கொங்கு மண்டலத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று என்ன பயன்? சட்டமன்ற இடைத்தேர்தலில் விட்டுவிட்டீர்களே என்று பல ஊடகங்கள் கேலி செய்து தலையங்கம் எழுதுகிறார்கள். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்  22 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆளுங்கட்சியான அ.தி.மு.க  9 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளார்கள். 22 பெருசா, 13 பெருசா? நாங்கள் இன்றைக்கு வேண்டுமானால் ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், விரைவில் ஆட்சி பொறுப்புக்கு வருவோம்.  

டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்கிறது மத்திய அரசு. அதேபோல, தென் மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி அணுக்கழிவுகளை சேமிக்கும் மையம் அமைக்கும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வால் இந்த ஆண்டும் 3 மாணவிகளை இழந்திருக்கிறோம். ஏழு தமிழர்கள் விடுதலையில் கண்ணாமூச்சி விளையாடுகிறார்கள்.

பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின்

தலைநகர் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் பிரச்னை நிலவுகிறது. தமிழகத்தின் பிரச்னைகள் பற்றியெல்லாம் மத்தியில் ஆளும் பிரதமருக்கும் கவலை இல்லை; மாநிலத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கவலை இல்லை. இதுகுறித்தெல்லாம் பேசினால் தி.மு.க போராட்டத்தைத் தூண்டுகிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி.  போராடுகிறவர்களை அழைத்து என்ன பிரச்னை என்று பேச அவருக்குத் தைரியம் இருக்கிறதா. ஆட்சியில் குறைகள் இருப்பதால்தானே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களை அழைத்துப் பேச எடப்பாடி அரசுக்குத் தைரியம் இருக்கிறதா. எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களிடம் பேசவோ, சமரசம் செய்யவோ உங்களால் முடிந்திருக்கிறதா. தமிழகத்தில் எப்படியாவது இந்தியைத் திணித்துவிட வேண்டும் என மும்மொழித் திட்டத்தைப் பரிந்துரை செய்திருக்கிறது மத்திய அரசு. தமிழக முதல்வர் என்கிற முறையில் எடப்பாடி பழனிசாமி அதை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விடுத்திருக்க வேண்டாமா?.

பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கும்போது எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என எடப்பாடி பழனிசாமி துடிப்பதற்கு என்ன காரணம். 3,000 கோடி ரூபாய் கமிஷனை வாரிச் சுருட்டுவதற்காகத்தான் இந்தத் திட்டம். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்கிறார்கள். எந்த அளவுக்குச் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்பதற்கு நாம் வேறு எங்கும் செல்ல வேண்டாம். இந்தப் பொள்ளாச்சியே சாட்சி. பொள்ளாச்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி இது. பொள்ளாச்சிக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைப்பதுதான் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் எங்கள் முதல் வேலை” என்றபடி வாக்காளர்களுக்கு நன்றி செல்லி முடித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க