`கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வாங்க' – ஓ.பி.எஸ்ஸுக்காக போஸ்டர் ஒட்டிய நடிகர்! | OPS supporters posters creates sensational in Andipatti

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (14/06/2019)

கடைசி தொடர்பு:07:30 (14/06/2019)

`கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வாங்க' – ஓ.பி.எஸ்ஸுக்காக போஸ்டர் ஒட்டிய நடிகர்!

அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேச, கட்சிக்குள் கலகம் வெடிக்காதது ஒன்றுதான் குறை. கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் சமாதானம் செய்தாகிவிட்டது. மறு அறிவிப்பு வரும் வரை ஊடகங்களில் யாரும் வாய் திறக்க வேண்டாம் என கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. பிரச்னை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், ஆண்டிபட்டியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், திரும்பும் திசை எங்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் போட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களாகத்தான் தென்பட்டது. `கட்சியையும், ஆட்சியையும் தலைமையேற்க வாருங்கள்! இதுவே ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம்' என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டரை, தேனி மாவட்ட அ.தி.மு.க கலைத்துறை மாவட்டச் செயலாளரும், திரைப்பட நடிகருமான வெள்ளைப்பாண்டியன் மற்றும் ஆண்டிபட்டி முன்னாள் நகரச்செயலாளர் இராமச்சந்திரனும் இணைந்து போஸ்டர் அடித்து ஆண்டிபட்டி முழுவதும் ஒட்டியுள்ளனர்.

ஏற்கெனவே ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேசியது ஓயாத சூழலில், இப்படி ஒரு போஸ்டரால் கட்சிக்குள் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். இதேபோல, அ.தி.மு.க-வின் தலைமைக் கழகத்தின் வாசலில், எடப்பாடியை ’அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர்’ என போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.