`மோடிக்காகக் கிடைத்தது... எடப்பாடிக்கு அல்ல!' - அடுத்தகட்ட வியூகத்தைத் தொடங்கிய டெல்லி பா.ஜ.க. | Delhi BJP discussed regarding election debacle in TN

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (14/06/2019)

கடைசி தொடர்பு:14:45 (14/06/2019)

`மோடிக்காகக் கிடைத்தது... எடப்பாடிக்கு அல்ல!' - அடுத்தகட்ட வியூகத்தைத் தொடங்கிய டெல்லி பா.ஜ.க.

பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக அமித் ஷா தொடர்வதற்கான உத்தரவாதத்தைப் பெறக் கூடிய கூட்டமாகவும் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்துடன் அமித் ஷாவின் பதவிக் காலம் முடிந்துவிட்டது. 3 மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால், அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட இருக்கிறது.

`மோடிக்காகக் கிடைத்தது... எடப்பாடிக்கு அல்ல!' - அடுத்தகட்ட வியூகத்தைத் தொடங்கிய டெல்லி பா.ஜ.க.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத் தலைவர்களை அழைத்து ஆலோசித்து வருகிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. `தமிழகத்தில் பெற்ற தோல்வி குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மூன்று மாநிலத் தேர்தல் முடியும் வரையில் மாநிலத் தலைவர் பதவியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை' என்கின்றனர் கமலாலய வட்டாரத்தில். 

புதுடெல்லிக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றிருக்கிறார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை. இந்தப் பயணத்தில் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோரும் சென்றுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏற்பட்ட படுதோல்வி குறித்தும் தேர்தலை எதிர்கொண்டவிதம் குறித்தும் பா.ஜ.க டெல்லி நிர்வாகிகள் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். டெல்லி பயணத்தின் முடிவில், தமிழக தலைமையில் மாற்றம் வரும் என்ற பேச்சுகளும் வலம் வருகின்றன.

தமிழிசை

``ஆனால், டெல்லி பயணம் தமிழிசைக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது" என விவரித்த தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ``இன்னும் சில மாதங்களுக்கு மாநிலத் தலைமையில் மாற்றம் வரப் போவதில்லை. இதுகுறித்து தமிழிசையிடம் பேசிய அகில இந்திய நிர்வாகிகள் சிலர், `நீங்கள் பதவியில் தொடருங்கள். தலைமை சொல்லித்தான் தமிழகத்தில் கூட்டணி அமைந்தது. தோல்விக்குக் காரணம், அண்ணா தி.மு.க எதிர்ப்பலைதான். மோடி தலைமையின் காரணமாகத்தான் ஓரளவுக்கு 30 சதவிகித வாக்குகளைப் பெற முடிந்தது. அந்த வாக்குகள், ஒற்றைத் தலைமையாக மோடி நின்றதால்தான் கிடைத்தன. இல்லாவிட்டால் அந்த ஒரு சீட்டைக்கூட ஜெயித்திருக்க முடியாது. அண்ணா தி.மு.க அமைச்சர்களுக்கு வடக்கு, தெற்கு, மேற்கு என மூன்று மண்டலங்களிலும் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. 

அமித் ஷா

மோடி தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள்தான் இந்தக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பெற்ற 30 சதவிகித வாக்குகளில் பெரும்பகுதியை வரக்கூடிய தேர்தலில் நாம் எடுக்க வேண்டும். இதுதான் உங்களுக்குக் கொடுக்கும் கடைசியான வாய்ப்பு' என விவரித்தவர்கள், `தமிழ்நாட்டில் இரட்டைத் தலைமை நீடிப்பதற்கு வாய்ப்பில்லை. மீண்டும் மோடி என்ற ஒற்றைத் தலைமையின் பின்னால்தான் அனைவரும் வருவார்கள். இனி வரும் காலங்களில் கூட்டணிக்குப் போகாமல் பெரும்பகுதி வாக்குகளை நாம் கைப்பற்ற வேண்டும்' எனக் கூறியுள்ளனர். இதைத் தமிழிசையும் ஏற்றுக் கொண்டார். அதனால்தான் தமிழ்நாட்டில் கூட்டணி தொடர்கிறது எனக் கூறாமல், தோழமை தொடர்கிறது எனப் பதில் அளித்தார். அகில இந்திய அளவில் இனி கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெறுவோம் என்ற மனநிலைக்கு டெல்லி பா.ஜ.க நிர்வாகிகள் வந்துவிட்டனர்.

சொல்லப் போனால், `தமிழ்நாட்டில் 8 சீட்டுகளை வெல்வோம்' எனத் தலைமை எதிர்பார்த்தது; `கொங்கு மண்டலத்தில் 4 சீட்டுகளை வென்று கொடுப்பார் எடப்பாடி' எனவும் நம்பினர். இது பொய்த்துப் போனதில் சற்று வருத்தத்தில் உள்ளனர். வரக் கூடிய 3 மாநிலத் தேர்தல் முடியும் வரையில் தமிழக தலைமையில் எந்தவித மாற்றமும் இருக்கப் போவதில்லை" என்கின்றனர் விரிவாக. 

தமிழிசை

ஆனால், இந்தக் கருத்தை மறுத்துப் பேசும் பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ``அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் தமிழக தலைமையில் மாற்றம் வந்துவிடும். வரும் நாள்களில் உறுப்பினர் சேர்க்கை வேலைகள் நடக்க இருக்கின்றன. தேர்தல் அட்டவணை வந்த பிறகு, மாநிலத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி என நியமிப்பார்கள். 60,000 கிளைகள், 51 மாவட்டங்கள் எனத் தேர்தல் நடக்கும். 3 வார காலத்துக்குக் கிளைக் கழகத் தேர்தல் நடக்கும். அதன்பிறகு 2 வாரங்கள் மண்டலத் தேர்தல் நடக்கும். இந்தத் தேர்தல் முடிவடையும்போது, இயல்பாகவே மாநிலத் தலைமையில் மாற்றம் வந்துவிடும். டெல்லியில் தற்போது நடந்துகொண்டிருப்பது வழக்கமான கூட்டம்தான். அகில இந்தியத் தலைவராக அமித் ஷா தொடர்வதற்கான உத்தரவாதத்தைப் பெறக் கூடிய கூட்டமாகவும் இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம்

கடந்த ஜனவரி மாதத்துடன் அமித் ஷாவின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. 3 மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால், அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட இருக்கிறது. எனவே, டிசம்பர் வரையில் தலைவரின் பதவிக்காலம் இருக்கிறது" என்றவர்கள், ``தமிழக அரசு மீதான எதிர்ப்புதான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என அகில இந்திய தலைமை கருதுகிறது. தமிழக பா.ஜ.க இதைச் சரியாக எதிர்கொள்ளவில்லை எனவும் கருதுகிறது. சட்டமன்றத் தேர்தலில் காட்டிய ஆர்வத்தை நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வினர் காட்டவில்லை என உறுதியாக நம்புகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி தொடருமா என்பதற்கும் தலைமைதான் பதில் சொல்ல வேண்டும்" என்கின்றனர் நிதானமாக. 

மோடி, எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவனிடம் பேசினோம். ``தமிழக பா.ஜ.க தலைவர் மட்டுமல்ல, அனைத்து மாநிலத் தலைவர்களும் டெல்லிக்குச் சென்றுள்ளனர். அமைப்புரீதியாகத் தேர்தல் நடத்தப்பட இருப்பது; உறுப்பினர் சேர்க்கை போன்றவை குறித்துப் பேசியுள்ளனர். தேர்தல் தோல்வி குறித்துக் கடந்த வாரம்கூட சென்னையில் கூட்டம் நடந்தது. தேர்தலின்போது பல இடங்களில் நன்றாகவே வேலை பார்த்தோம். இருப்பினும், சில இடங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்தன. தோல்வி தொடர்பாக எங்களுக்குள் நிறைய விவாதித்தோம். கட்சி நிர்வாகிகளுக்குள் நடந்த கூட்டம் என்பதால் இதுதொடர்பாக வெளியில் சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.