`15 நாள்தான் கெடு...!' - கொதிப்பில் ஓ.பி.எஸ் | 15 days ultimatum given by ops to constitute guidance committee in ADMK, says Sources

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (14/06/2019)

கடைசி தொடர்பு:15:23 (14/06/2019)

`15 நாள்தான் கெடு...!' - கொதிப்பில் ஓ.பி.எஸ்

ஓ.பி.எஸ்.

``15 நாள்தான் டைம்… அதுக்குள்ள வழிகாட்டுதல் குழு அமைச்சாகணும். இதை முதல்வர் முன்னாடிதான் சொல்றேன். இதுக்கு மேலயும் வழிகாட்டுதல் குழு அமைக்குறது தள்ளிப் போகக் கூடாது..”, கடந்த ஜூன் 12ம் தேதி அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

தர்மயுத்தம் முடிவுற்று அணிகள் இணைந்தபோது, அ.தி.மு.க.வை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. இரண்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில், இன்று வரையில் இக்குழு அமைக்கப்படவில்லை. கட்சிக்குள் ஓ.பி.எஸ்.-ன் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, வழிகாட்டுதல் குழு அமைப்பதை எடப்பாடியார் தரப்பு தள்ளிப் போடுவதாக கட்சிக்குள் குமுறல் எழுந்தது. இந்நிலையில், வழிகாட்டுதல் குழுவை 15 நாள்களுக்குள் அமைக்க வேண்டும் எனக் கண்டிப்பான குரலில் ஓ.பி.எஸ். பேசியுள்ளாராம்.

எடப்பாடி

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், ``இரு அணிகளும் இணைந்த போது, கட்சியை வழிநடத்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்றும், அதில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஆதரவாளர்களுக்குப் பொறுப்பு வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தை இறுதியானது. ஜெயலலிதா பாணியில் கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர விரும்பும் எடப்பாடி பழனிசாமி, இக்குழு அமைப்பதைக் காலம் தாழ்த்தியே வருகிறார். இந்நிலையில்தான், கட்சிக்குள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா மூலம் விவகாரம் வெடித்தது.

ஓ.பி.எஸ்-யைக் கழற்றிவிட்டுவிட்டு, கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராஜன் செல்லப்பா மூலம் எடப்பாடி `ரூட்’ போடுவதாக ஓ.பி.எஸ். சந்தேகிக்கிறார். இந்த முயற்சியை முறியடிக்கத்தான், வழிகாட்டுதல் குழுவை உடனடியாக அமைக்க வேண்டுமென்று `செக்’ வைத்துள்ளார். இரண்டு வருடங்களாக இக்கோரிக்கையை ஓ.பி.எஸ் எழுப்பும் விதமும், இம்முறை ஆக்ரோஷமாக எழுப்பிய விதமும் வெவ்வேறானது. `கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பியூரோ வழியில், இந்த வழிகாட்டுதல் குழுவும் செயல்படும். தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள், கட்சியின் கூட்டணி விவகாரங்களை இந்தக் குழுவே இறுதி செய்யும். இதனால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கேள்வியே எழாது. தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் கட்சிக்குள் பொறுப்பு பெற்றுக் கொடுத்தது போல இருக்கும்’ என்று ஓ.பி.எஸ். கணக்கிடுகிறார்” என்றனர்.

ஓ.பி.எஸ்.

இரு அணிகளும் இணைந்த போது, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் சிலருக்குக் கட்சிப் பொறுப்பு வழங்க அவர் வழங்கிய கடிதம் அப்படியே தூங்குகிறதாம். இந்த சிபாரிசுகளை எடப்பாடி மதிக்காததால்தான், கட்சிக்குள் தன் செல்வாக்கு சரிந்துவிட்டதாக ஓ.பி.எஸ். கருதுகிறாராம். வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டால், கட்சியை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிடலாம் எனத் திட்டமிடுகிறாராம். அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை முடித்த கையோடு தேனி புறப்பட்டுவிட்ட ஓ.பி.எஸ்., “மூன்று நாள்களுக்கு யாரும் என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம். எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது” என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. 15 நாள்கள் கெடு முடிந்தும் வழிகாட்டுதல் குழு அமைக்கப்படவில்லை என்றால், தன் ஆதரவாளர்களை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.