
கலங்க வைக்கும் ஆவணப் படம்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'தானே’ தாக்கிவிட்டுச் சென்ற சுவடுகள் கடலூரில் இன்னும் மறையவில்லை. நாலா திசைகளில் இருந்தும் உதவிகள் வந்துகொண்டு இருக்க, தன் துறை சார்ந்து ஓர் அழுத்தமான ஆவணத்தை அளித்திருக்கிறார் இயக்குனர் தங்கர் பச்சான்.
''புயல் மரங்களை மட்டும் சாய்க்கவில்லை... ஒரு தலைமுறையையே சாய்த்திருக்கிறது...''
''இங்க இருக்கிற ஒவ்வொரு மரத்துக்கும் பேரு வெச்சு எங்க பசங்களைப் போல வளர்த்து வந்தோம். இப்ப எங்க புள்ளைங்கள அறுக்குற மாதிரி இருக்கு...'' என்று பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் வெடித்துக் கிளம்பும் கண்ணீருடன் வெளிப்படுகின்றன.
குடிக்கத் தண்ணீர் இல்லாததால் ஆறு கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுக்கவேண்டிய நிலை. ஒரு நிறைமாதக் கர்ப்பிணி, இடுப்பில் தண்ணீர் குடத்தைத் தூக்கி வரும் போது பிரசவ வலி ஏற்பட்டு... அந்த இடத்திலேயே வயிற்றில் குழந்தை இறக்க... தாயும் இறந்து போகிறாள். அந்தப் பெண்ணின் வீட்டு முன்பு பெண்கள் ஒப்பாரி வைக்கிற காட்சி நெஞ்சைப் பிசைகிறது.
'தானே புயலின் அறுவடை’ என்ற பெயரில் 35 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம் குறித்துப் பேசும் தங்கர் பச்சான், ''வருசத்துக்கு 900 படங்கள் இந்தியாவில எடுக்கிறாங்க. அவற்றை 75 சதவிகிதம் உழவர் மக்கள் தான் பார்க்கிறாங்க. ஆனால், அதில் இரண்டு படங்கள்கூட உழவர்களை மையமா வெச்சு வர்றதில்லை. அப்படித்தான் இந்தப் புயலுக்குப் பிறகு உழவுத் தொழிலும் கேட்பாரற்று கிடக்கிறது. மக்கள் சொல்ல நினைப்பதைச் சொல்லும் படமாக இது இருக்கும். இந்தப் படத்தை கடலூர் விவசாயிகளை வைத்து திரையரங்கு களில் வெளியிடப்போறேன்'' என்றார்.
- ந.வினோத்குமார்
படம்: சொ.பாலசுப்பிரமணியன்