Published:Updated:

அதிர வைத்த ஆச்சார்யா!

ஷாக் ராஜினாமாவின் முழுப் பின்னணி!

அதிர வைத்த ஆச்சார்யா!

ஷாக் ராஜினாமாவின் முழுப் பின்னணி!

Published:Updated:
அதிர வைத்த ஆச்சார்யா!
##~##

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், 'ஜெயலலிதாவைக் காப்பாற்ற பி.ஜே.பி. முயற்சிக்கிறது’ என்று ஒரு அதிர்ச்சிக் குற்றச்சாட்டைக் கிளப்பி இருக்கிறார், இந்த வழக்கின் கர்நாடக அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்த்தியதில், அரசுத் தரப்பு வக்கீலான ஆச்சார்யாவுக்கும் முக்கியப் பங்கு உண்டு. கடந்த 96-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த

அதிர வைத்த ஆச்சார்யா!

வழக்கு சென்னை, டெல்லி, பெங்களூரு எனக் கடந்து 14 ஆண்டுகளாக நீண்டு, சமீபத்தில்தான் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. இப்போது, 313-ம் சட்டப் பிரிவின்படி குற்றம் சாட்டப்​பட்டவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் பெறப்​பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மூத்த வழக்கறிஞர்​களில் முக்கியமானவர் ‌ஆச்சார்யா. கடந்த 50 ஆண்டு​களுக்கும் மேலாக நீதித்துறையில் இயங்கி வரும் இவர், 2004-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் ஆஜராகி வருகிறார். இந்த நிலையில் கர்நாடக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் முறையாக ஆச்சார்யாவை, மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமித்தது. இதைத் தொடர்ந்து வீரபத்ரையா என்ற வக்கீல், 'ஒரே நபரே அட்வகேட் ஜெனரலாகவும், அரசுத் தரப்பு வக்கீலாகவும் இரட்டைப் பதவிகளை வகிக்க சட்டத்தில் இடம் இல்லை’ என்று, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்கிழமை அன்று கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அட்வகேட் ஜெனரல் பதவி மிககௌரவமான பதவி என்பதால், ஆச்சார்யா தன்னிடம் உள்ள அரசுத் தரப்பு வக்கீல் பதவியை விட்டுத்தான் விலகிக் கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்திருக்க... ஆச்சார்யாவோ, அட்வகேட் ஜெனரல் பதவியை உதறி இருக்கிறார். இந்த சூழலில் அவரை நாம் சந்தித்துப் பேசினோம்.

''இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது என்று புகார் எழுந்தது முதலே இந்த வழக்கில் ஆஜராக வேண்டாம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எனக்கு நெருக்கடிகள் வந்தன. இப்போது பி.ஜே.பி. மேலிடம், கர்நாடக அரசு மூலமாக இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ளும்படி என்னை

அதிர வைத்த ஆச்சார்யா!

நிர்பந்திக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வழக்கில் ஆஜராகி வரும் என்னை, கடந்த ஆண்டு அட்வகேட் ஜெனரலாக நியமித்ததே இந்த சதியில் ஒரு பகுதிதானோ என்று சந்தேகிக்கிறேன்.      

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உயர் நீதிமன்றம்​தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் வாதாட என்னை நியமித்தது. எனவே, எக்காரணம் கொண்டும் இந்த வழக்கில் இருந்து விலகப் போவதில்லை. இதைக் கர்நாடக அரசிடம் பலமுறை தெளிவாகக் கூறிவிட்டேன். அதன் பின்பும் இரட்டைப் பதவி விவகாரத்தைக் கிளப்பவே, அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கு மட்டும் அல்ல... எந்த ஒரு வழக்குமே சட்டப்படியும் நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம், வேண்டுதல் எல்லாமே...' என்றார் உறுதியாகவும் உருக்கமாகவும்!

இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்துவரும் நீதித்​துறை பிரமுகர்கள் சிலர், ''இந்த வழக்கின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய இடத்தில் இருப்பவர்கள் ஆச்சார்​யாவும் நீதிபதி மல்லிகார்ஜுனையாவும்தான். அவர்கள் இருவரும் சட்டதிட்டங்களுக்கு மிகக் கவனமாக உட்பட்டும், நியாய தர்மங்களைத் தீவிரமாகப் பின்பற்றியும் இந்த வழக்கை நடத்தி வருகிறார்கள். இனியும், அரசுத் தரப்பு வக்கீலாக ஆச்சார்யா தொடர்ந்து வாதாடினால், தமிழக முதல்வர் தரப்புக்கு சிக்கல் வலுக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.

அண்மையில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களிடம் இந்த விவகாரம் குறித்து சிலர் கோரிக்கை வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

'இரட்டைப் பதவி வகித்து வரும் ஆச்சார்யாவின் ஒரு பதவியை திரும்பப் பெற வேண்டும்’ என்று கர்நாடக கவர்னருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் தமிழ்நாட்டில் இருந்து புகார்கள் வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பி.ஜே.பி. தலைமைக்கும் இம்மாதிரியான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  ஆச்சார்யாவுக்கும் பிரஷர் கூடியது. ஆனால், அவர் தன் முடிவில் உறுதியாக நின்றுவிட்டார்....'' என்றார்கள்!

அதோடு, ''புதிய அரசியல் கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்கான மையப்புள்ளியாக பெங்களூரு வழக்கு மாறி வருகிறதா?'' என்ற கேள்விகளையும் இவர்கள் எழுப்பத் தொடங்கி உள்ளனர்!

  - இரா.வினோத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism