Published:Updated:

சசி காலில் விழுந்து வணக்கம்... ராஜ வம்சத்து களையில் சுதாகரன்..

பெங்களூரு நம்ம ஊரு

சசி காலில் விழுந்து வணக்கம்... ராஜ வம்சத்து களையில் சுதாகரன்..

பெங்களூரு நம்ம ஊரு

Published:Updated:
##~##

சொத்துக் குவிப்பு வழக்கில் கட ந்த 23-ம் தேதி, ஆஜரான சசிகலா 'ஆமை’ வேகத்தில் பதில் அளித்து வழக்கறிஞர் ஆச்சார்யாவையும் நீதிபதியையும் டென்ஷன் ஆக்கியதை கடந்த இதழில் எழுதி இருந்தோம். இது, 24 மற்றும் 25-ம் தேதி நடந்த சம்பவங்கள். 

ஸ்டைல் சுதாகரன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் நாள் கோர்ட்டுக்கு கட் அடித்து நீதிபதியிடம் வசமாக வாங்கிக் கட்டி கொண்ட சுதாகரன், அடுத்த இரண்டு நாட்களும் பவ்யமாக ஆஜராகி அடக்கம் காட்டினார்.  சசிகலாவை நீதிபதி கேள்வி கேட்க ஆரம்பித்ததும் இளவரசியுடன் பேசத் தொடங்கி விட்டார் சுதாகரன். அவ்வப்போது கோர்ட்டில் போகிறவர், வருகிறவர்களைப் பார்த்து நல்ல பிள்ளையாக சிரிக்கவும் தவறவில்லை.

தாகம் எடுக்கும் போதெல்லாம், வக்கீல் அன்புக்கரசுவை நோக்கி ஸ்டைலாக சைகை செய்து, சீரகம் போட்டுக் காய்ச்சிய‌ தண்ணீரைக் கேட்டு வாங்கிக் குடித்தார். கேள்விகளுக்குப் பதில் அளித்தவாறே சசிகலாவும் சுதா கரனின் ஸ்டைல்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.

சசி காலில் விழுந்து வணக்கம்... ராஜ வம்சத்து களையில் சுதாகரன்..

சசிகலா, இளவரசி, இளவரசியின் மருமகன் ராஜராஜன் ஆகியோர் அட்ரியா ஓட்டலில் வழக்கம் போல தங்கினாலும், சுதாகரன் மட்டும் அவரது பெங்களூரு நண்பருடைய கெஸ்ட் ஹவுஸில் தங்கி னார். அதனால் கோர்ட்டை விட்டு கிளம்புவதற்கு முன் சசிகலா, இளவரசி இருவருக்கும் பொறுமையாக 'டாடா’ காட்டிவிட்டு, தன்னுடைய காரில் ஏறிப் பறந்தார். வெள்ளை நிற பளிச் பைஜாமா, குர்தா, ரேபான் கிளாஸ், ஃபங்க் முடி என்று சுதாகரனைப் பார்த்த பலரும், 'அடேங்கப்பா, ராஜபார்ட் டிராமா கணக்கா டிரஸ் போட்டிருக்காரே...?’ என்று வாய் பிளந்தார்கள்.

ராஜராஜ ராஜாங்கம்!

மீடியாக்கள் ஏடாகூடமாகப் படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக முன்பெல்லாம் கண்ணாடி, தொப்பி போட்டு மாறுவேடத்தில்(?) வந்தார் ராஜராஜன். இப்போது சசிகலாவின் பெங்களூரு விஜயம் முழுவதற்கும் ஓபனாகவே ஆல் இன் ஆல் இன்சார்ஜ் ராஜராஜன்தான். கார் கதவைத் திறப்பது, அரை மணி நேரத்துக்கு முன்னால் ஏசி போட்டு வண்டியை கூல் செய்வது, உணவு ஏற்பாடு செய்வது என்று சகல விஷயங்களையும் தனி ஆளாகவே கவனிக்கிறார். அடிக்கடி கோர்ட்டுக்கு வெளியே வந்து, உள்ளே நடந்ததை எல்லாம் யாரிடமோ ஒப்பித்துவிட்டு, மீண்டும் உள்ளே செல்கிறார். சசிகலா பாஸ் பண்ணும் துண்டுச் சீட்டுகளையும், வக்கீல்கள் தரும் ஃபைல்களையும் இவர்தான் பார்த்துக் கொள்கிறார். சசிகலாவின் நடவடிக்கைகளை நோட்டமிட வரும் உளவுத்துறை முதல் கரைவேட்டி கட்டாமல் உலாவரும் உள்ளூர் அ.தி.மு.க. புள்ளிகள் வரை அத்தனை பேரையும் நன்றாகவே கண்காணிக்கிறார். பெங்களூருவில் சசிகலாவுக்கு வீடு தேடுவதற்கென்றே ஒரு படை இவர் தலைமையில் இயங்குகிறது. சசிகலாவின் பக்கத்தில் யாரையும் நெருங்கவிடாமல் தனி ராஜாங்கமே நடத்துகிறார், ராஜராஜன்.

பென்சில், ரப்பருடன் சசிகலா!

நீதிபதி மல்லிகார்ஜுனையா நான்கு மாதங்கள் கவனம் செலுத்தி கேள்விகளைத் தயாரித்து இருக்கிறார். அவற்றுக்குப் பதில் அளிக்க, ஜெயலலிதா வின் வக்கீல்கள் பி.குமார், ராஜன் மற்றும் சசிகலா வின் வக்கீல் மணிசங்கர் ஆகியோர் இரவு 9 மணி வரை சசிகலாவுக்கு ஓட்டலில் சிறப்பு வகுப்பு எடுக்கிறார்கள். சசிகலா படிப்பதற்கு வசதியாக 'நோட் பேடின்’ ஒரு பக்கத்தில் பென்சிலில் எழுதிக் கொடுக்கிறார்கள் (பளிச்சென்று பேனாவில் எழுதி கோர்ட்டாரின் கவனத்தை ஈர்க்க

சசி காலில் விழுந்து வணக்கம்... ராஜ வம்சத்து களையில் சுதாகரன்..

வேண்டாமாம்!). அதனால், முதல்நாள் கோர்ட்டுக்கு பேனா கொண்டுவந்த சசி, மற்ற இரண்டு நாட்களும் பென்சில், ரப்பர் கொண்டு வந்தார்.

கோர்ட்டிலும் 'தடார்' சடங்கு!

இந்த முறை நீதிபதியின் கேள்விகளைவிட, சசிகலாவை அதிகம் வதைத்தது பெங்களூரு சீதோஷ்ணம்தான். காலையில் வாட்டியெடுக்கும் குளிரும், பகலில் கானல்நீர் பறக்கும் வெயிலும் சசிகலாவை மாறி மாறி மிரட்டியது. உதடுகள் உலர்ந்துவிட்டதால் அடிக்கடி உதட்டை ஈரப்படுத்தியவாறே பதில் அளித்தார். ஸ்பெஷல் கோர்ட்டில் ஏ.சி. வசதி இல்லாததும் அவரைச் சிரமப்படுத்தியது. இரண்டாம் நாள் காலை நீதிபதி வருவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே வந்துவிட்ட சசிகலா, குற்றவாளிக் கூண்டில் அமர்ந்தார். அப்போது வக்கீல் சரவணகுமார், சுதாகரனின் காதில் ஏதோ கிசுகிசுக்க, அவர் சசிகலாவிடம் அதைச் சொன்னார். அதைத் தொடர்ந்து ஏதோ சைகை உத்தரவு கிடைக்க... சசிகலாவின் காலில் தடாரென விழுந்த சரவணகுமாரின் தலையில் கைவைத்து, 'நல்லா இருங்க’ என்று ஆசிர்வாதம் செய்தார் சசிகலா. அவரைத் தொடர்ந்து இளவரசியின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் வக்கீல். இது கோர்ட்டில் இருந்த மீடியாக்களை எல்லாம் 'ஆச்சார்யா' ஆக்கியது. தனது கல்யாண நாளை முன்னிட்டுதான் பர்மிஷன் வாங்கி ஆசிர்வாதம் வாங்கினாராம் இந்த சரவணகுமார்.  

சசிகலா சொன்ன பழமொழி!

'1994-ல் ஜெகதீஸ்ராஜு, சந்திரவதனா, காயத்ரி ஆகியோரிடம் 600 சதுர அடி நிலம் வாங்கியது தொடர்பான விசாரணையில் ஜெகதீஸ் ராஜுவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறியுள்ளாரே?’ என்று கேட்டார் நீதிபதி.  காத்திருந்த மாதிரி தலையசைத்து, 'ஆரம்பம் முதலே இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கூறி வருகிறோம். நிலத்தின் உரிமையாளரான ஜெகதீஸ்ராஜுவுக்கு 10 லட்சம் காசோலை கொடுத்துத்தான் வாங்கினோம். ஆனால் அவரைக் குறுக்கு விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி நல்லம நாயுடுவும், அவரோடு பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளும் 20 லட்சம் அல்லது 30 லட்ச ரூபாய்க்கு விற்றதாக எழுதிக் கொடுக்குமாறு மிரட்டியதாக ஜெகதீஸ் ராஜுவே சாட்சியம் அளித்துள்ளார். 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை சாட்சிகளையும் நல்லம நாயுடு எங்களுக்கு எதிராகப் பொய்ச்சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். எல்லாமே காவல்துறை யின் ஜோடனை’ என்று கோபமாகவே சசி ப‌தில் அளித்தார்.

இந்தப் பழமொழியை எப்படி மொழியாக்கம் செய்வது என்று தெரியாமல் மொழிபெயர்ப்பாளர் ஹரீஸ் திணற, 'பழமொழி, கற்பனைக் கதைகள் எல்லாம் கோர்ட்டுக்குத் தேவை இல்லை’ என்று கூறியதும்... ஆச்சார்யாவும் அதை வழிமொழிந்தார். பழமொழி பதிவாகாமல் போனதில் சசிகலா அப்செட்தான்.

கருணாநிதியை கைநீட்டிய சசிகலா!

இசையமைப்பாளர் கங்கை அமரன் அளித்த சாட்சியத்தில், 'பையனூரில் எனக்கு 22 ஏக்கர் நிலமும்

சசி காலில் விழுந்து வணக்கம்... ராஜ வம்சத்து களையில் சுதாகரன்..

பண்ணை வீடும் இருந்தது. பாஸ்கரன் என்னை சந்தித்து, நிலம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெய லலிதா சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார்' என்று முன்பு குறிப்பிட்டு இருந்தார். இந்த விவகாரம் குறித்து பதில் அளித்த சசிகலா, ''கங்கை அமரன் என்னை மட்டும்தான் சந்தித்தார். ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. அவரது சாட்சியம் பொய்யானது'' என்றார்.

அதற்கு நீதிபதி, ''ஜெயலலிதா பையனூர் நிலத்தைப் பார்த்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்கு சரியான இடம் என்று கூறியதாகவும்... எனவே அவருக்கு நிலம் ரொம்பவே பிடித்து விட்டதாகவும் நீங்கள் கங்கை அமரனிடம் கூறினீர்களா?'' என்று கேட்டார்.

''ஜெயலலிதா பேரை வேண்டும் என்றே சேர்ப்பதற் காக கங்கை அமரனை அன்றைய காவல்துறை அதிகாரிகள் பொய்சாட்சி சொல்ல வைத்தார்கள்' என்று அழுத்தமாக மறுத் தார். அதற்குப் பின்னும் நீதிபதி விடாமல், 'தனக்கு இருப்பது ஒரே நிலம். அதுவும் கதை எழுதுவதற்கும், இசையமைப்பதற்கும் ஏற்ற இடமாக இருப்பதால் விற்பனை செய்ய விருப்ப மில்லை என்று கங்கை அமரன் உங்களிடம் கூறியபோது, 'நீங்கள் குடும்பத்தாரிடம் பேசிவிட்டுச் சொல்லுங்கள் என்று அவரிடம் சொன்னீர்களா?’ என்று கொக்கி போட்டார். இதில் சற்றே முகம் சிவந்த சசிகலா, ''அவராகத்தான் நிலத்தை விற்க முன்வந்தார். போலீஸ், கங்கை அமரனை மிரட்டி ஜெயலலிதாவை சம்பந்தப்படுத்தி சாட்சியம் சொல்ல வைத்துள்ளனர். யார் பெயரில் சொத்து வாங்கினாலும் ஜெயலலிதா பெயரைச் சம்பந்தப் படுத்தி, வழக்கை ஜோடித்து உள்ளனர். அன்றைய கருணாநிதி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டால் உயர்பதவி கிடைக்கும் என்று போலீஸார் நினைத்தனர்' என்று கூறினார்.

உடனே நீதிபதி, ''இப்போது ஏன் சம்பந்தமே இல்லாமல் கருணாநிதியை இழுக்கிறீர்கள்' என்று கேட்டதும் சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 'பொய் சாட்சி சொல்ல வைத்ததன் உள்நோக்கம் அதுவாக இருக்கலாம்’ என்று கூறி, அதனையும் சேர்த்து பதிவு செய்யுமாறு நீதிபதியிடம் வேண்டினார். அதற்கு ஆச்சார்யாவும், 'கருணாநிதி அரசு என்று ஒரு வரிதானே...’ என்று ஆமோதிப்பாக சிரித்தார்.

ஜெயலலிதா பெயரில் தெளிவு!

ஒவ்வொரு முறை சசிகலா பதிலளிக்கும் போதும், ஜெயலலிதா தொடர்பாகச் சொல்லும்போது டபுள் உஷாராகவே முகபாவம் காட்டிப் பேசினார்.  ஜெயா ஃபார்ம் நிறுவனத்துக்கு நிலம் விற்றது தொடர்பான கேள்விக்கு சசிகலா பதில் அளித்தபோது, ''அம்பத்தூர் ரமேஷ் என்பவர், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்று சாட்சியம் அளித்திருக்கிறார். அது உண்மையல்ல. 'ஜெயலலிதாவுக்குத் தெரிந்தவர் என்று சொல்லிக் கொண்டார்’ என்று பதிந்து கொள்ளுங்கள்'' என நீதிபதியிடம் ரொம்பவே தெளிவாகச் சொன்னார் சசிகலா. அரசு தரப்பு வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் சசிகலா சொன்னவாறே திருத்தம் செய்யப்பட்டது.

அது மட்டுமில்லாமல் முத்தையா, ஜவஹர் ஆகியோர், 'ஊத்துக்கோட்டை அருகே  ரத்னவேலு என்பவருக்குச் சொந்தமான 4.15 ஏக்கர் நிலத்தை ஜெயலலிதா வாங்கித் தருமாறு கேட்டார். இதனால் போயஸ் கார்டனில் இருந்து இரண்டு சூட்கேஸில் பணம் எடுத்துச் சென்று, கொடுத்து பதிவு செய்தோம்’ என்று கூறியதாக பதிவாகி இருப்பது பற்றி நீதிபதி கேட்டார். சசிகலா கொஞ்சமும் யோசிக்காமல், ''இடம் வாங்கியது உண்மை. ஆனால் சாட்சிகள் தேவையில்லாமல் ஜெய லலிதாவைச் சம்பந்தப் படுத்த வேண்டும் என்பதற் காக போயஸ் கார்டனைக் குறிப்பிட்டு உள்ளனர்' என்றார். மிடாஸ் நிறுவனம் தொடர்பான 17 கேள்விகளுக்கும் 'தெரியாது’ என்றே பதில் அளித்தார். அதற்கு நீதிபதி, 'மிடாஸ் நிறுவனத்தின் பங்குதாரரான நீங்கள் எதுவுமே தெரியாது என்கிறீர்களே?’ என்று கேட்டதற்கும், 'தெரியாது’ என்றே பதில் அளித்தார்.

ஜனாதிபதியின் கார்!

ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், மிடாஸ், அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்களுக்கு 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்கியது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டது. ''வாங்கியது உண்மைதான். ஆனால், ஜெயலலிதா எம்.பி-யாக இருந்தபோது வாங்கப்பட்டவை. அதேபோல 1991-ல் இந்திய ஜனாதிபதி பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஏலத்துக்கு வந்தபோது, கிருஷ்ணமூர்த்தி என்பவரால் வாங்கப்பட்டு, பிறகு, ஜெயலலிதா பெயருக்கு அதை மாற்றினோம். அதற்கான பணத்தை, நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை வருமானத்தில் இருந்து செலுத்தினோம்'' என்றார்.

ஜெயலலிதா நான்கே நாட்க‌ளில் 1,384 கேள்விகளை முடித்தார். ஆனால் சசிகலாவோ  நான்கு நாட்கள் ஆஜராகி 172 கேள்விகளையே முடித்திருக்கிறார். இன்னும் போகவேண்டிய தூரம் ரொம்பவே இருக்கிறது!

- இரா.வினோத்

படங்கள்: சு.குமரேசன் 

இவர்தான் செந்தில்!

சசி காலில் விழுந்து வணக்கம்... ராஜ வம்சத்து களையில் சுதாகரன்..

பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு உதவி செய்வதற்காக களம் இறங்கி இருப்பவர் அட்வகேட் செந்தில். நாமக்கல்லை பூர்வீகமாகக் கொண்ட சசிகலாவின் ஆதரவாளர். தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருக்கும்‌ நவநீதகிருஷ்ணனுக்கு நாமக்கல்லில் பழக்கமான‌வர். படிப்படியாக வளர்ந்து நவநீத கிருஷ்ணனின் ஆதரவு காரணமாக பெங்களூருவுக்குப் போயிருக்கிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் யார் சார்பாகவும் ஆஜராகவில்லை என்றாலும்... முதல் ஆளாக அங்கே வந்து நின்றுவிடுகிறார் செந்தில்! இவர், அடிக்கடி சசிகலாவின் வக்கீல் தந்த குறிப்புகளை சசிகலாவுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நீதிபதி இவரை கடிந்து கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism