Published:Updated:

இலங்கைத் தமிழினப் படுகொலை... ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது: சீமான் கண்டனம்

சென்னை, ஏப்.18.2011

இலங்கைத் தமிழினப் படுகொலை... ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது: சீமான் கண்டனம்

தமிழினப் படுகொலை செய்த இலங்கை அரசிடமே விசாரணைப் பொறுப்பை அளிக்கும் ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்க முயற்சித்தால், ஐ.நா.வுக்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கை அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேளி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்து பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது. ##~~##

மார்சுகி தாருஸ்மான் தலைவராகவும், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா.நிபுணர் குழு, பொதுச் செயலர் பான் கி மூனிடன் அளித்துள்ள அறிக்கை, உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனப் படுகொலைப் போரை நடத்திய இலங்கை அரசிடமே விசாரணைப் பொறுப்பை ஒப்படைப்பது, கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதற்கு நிகரான கேலிக்கூத்தாகும்.

தமிழர்களுக்கு எதிரான அந்தப் போரில் மிகப் பெரிய அளவுக்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதெனவும், போர்ப் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நிபுணர் குழு, இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட இலங்கை அரசிடம் விசாரணைப் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒப்படைக்குமாறு கூறுகிறது?

இலங்கை அரசு செய்த மிகப் பெரிய போர்க் குற்றம், தங்களோடு இருந்த மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க, துப்பாக்கிகளை மெளனிக்கின்றோம் என்று அறிவித்துவிட்டு, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட 300 பேரை சித்தரவதை செய்து படுகொலை செய்ததும், அதன் பிறகு, மே 18ஆம் தேதி ஒரே நாளில் முள்ளி வாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததும்தான்.

சரணடைய வந்த புலிகளின் அமைப்பினரை கொன்றதற்கும், இறுதிக் கட்டப்போரில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்களை கொன்று குவித்ததற்கும் உத்தரவிட்டது இலங்கை அரசுதானே? இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலராக உள்ள அதிபர் ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே அல்லவா?

உலகம் அறிந்த இந்த உண்மைக்கும் பிறகும் விசாரணை பொறுப்பை இலங்கை அரசிடன் வழங்கு என்று பரிந்துரைப்பது அங்கு நடந்த உண்மைகளை வெளிக்கொணரவா? அல்லது தமிழினப் படுகொலையை புதைக்கவா?

இலங்கை அரசிற்கு எதிராக ஆதாரப்பூர்வமான குற்றச்சாற்றுகளை பட்டியலிட்டுள்ள நிபுணர் குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாற்றுகளையும் அறிவைச் செலுத்தாமலேயே பட்டியலிட்டுள்ளது வருத்தத்திற்குரியதாகும். தங்களோடு இருந்த மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாற்றை நிபுணர் குழு வைத்துள்ளது.

தமிழினத்தையே அழித்தொழிக்கும் திட்டத்தோடு செயலாற்றிவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தை, தமிழர்களை கேடயமாகக் கொண்டு எவ்வாறு தடுத்திட முடியும்? கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்துவரும் இலங்கை அரச படைகளுக்கு அப்படிப்பட்ட மனிதாபிமானம் உண்டென்று ஐ.நா.நிபுணர் குழு நம்புயுள்ளது வியப்பைத் தருகிறது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் ஒரே கோரிக்கை, இலங்கையின் பூர்வீகக் குடிகளாக தமிழ் மக்களை திட்டமிட்டு அழித்தொழித்த இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும் என்பதே. ஆனால், அதனைச் செய்யுமா ஐ.நா. என்ற ஐயம் நிபுணர் குழு பரிந்துரையால் ஏற்பட்டுள்ளது.

இலங்கை இனப் பிரச்னை தொடர்பில், அங்கு நடந்த தமிழின அழிப்புக்குக் காரணமான இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது.
இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடு்ப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாற்றி்ற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.வுக்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்று எச்சரிக்கின்றேன்," என்று சீமான் கூறியுள்ளார்.